”காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்கிறேன்”: அமித்ஷாவுக்கு ரஜினி பாராட்டு

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் ஆங்கில புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இப்புத்தகத்தை வெளியிட்டார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பி.சி.ரெட்டி, ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமைப் பயிற்சியாளர் புல்லேல கோபிசந்த் உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் விழாவில் பேசியதாவது:

குடியரசு துணைத் தலைவராக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தமைக்கு வெங்கய்யா நாயுடுவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தன்னுடைய நூல் வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த வேண்டும் என்று விரும்பியது நமக்கு கிடைத்த பெருமை.

வெங்கய்யா நாயுடுவை எனக்கு கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகத் தெரியும். அவரைச் சந்திக்க வேண்டும் என்று நான் விரும்பி எனக்கும் அவருக்கும் சிறந்த பொது நண்பர் மூலம் அவரைச் சந்தித்தேன். பெங்களூருவில் ஒருமுறை 2 மணிநேரம் அவருடன் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் அவர் தெரிந்தோ தெரியாமலோ அரசியல்வாதியாகிவிட்டார் எனத் தெரிந்துகொண்டேன்.

வெங்கய்யா நாயுடு முழுமையான ஆன்மீகவாதி, ஆத்மார்த்தமான ஆன்மீகவாதி. எப்போதுமே ஏழைகளைப் பற்றியும், மக்களைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டே இருப்பவர். மக்களின் நலன் மீது அவருக்கு இருக்கும் அக்கறையை நினைத்து நான் வியப்படைந்தேன்.

எனக்கும் வெங்கய்யா நாயுடுவுக்கும் தெரிந்த ஒரு நண்பர் ஹைதராபாத்தில் நடந்த ஒரு சம்பவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

25 ஆண்டுகளுக்கு முன், வெங்கய்ய நாயுடு தன்னுடைய கல்லூரி நண்பர்கள் 100-க்கும் மேற்பட்டோரை அழைத்து சிறப்பு விருந்து அளித்துள்ளார். அப்போது அந்த 100 பேரையும் ஒவ்வொருவரின் பெயரையும் கூறி தனித்தனியாக அழைத்துப் பேசியுள்ளார்.

45 ஆண்டுகளுக்குப்பின் அவர்களைச் சந்தித்தபின் அனைத்து நண்பர்களின் பெயரைக் கூறி அழைத்து வெங்கய்யா நாயுடு பேசியுள்ளார். இதைக் கேட்டதும் அவரின் நினைவாற்றலை நினைத்து நான் பிரமிப்பு அடைந்தேன்.

வெங்கய்யா நாயுடு தற்போது குடியரசு துணைத் தலைவராக இருக்கிறார். இன்னும் உயர்வான பதவிகளை அவர் அடைய வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறேன்.

‘மிஷன் காஷ்மீர்’ ஆப்ரேஷனை வெற்றிகரமாக செய்து முடித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோருக்குகு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

குறிப்பாக நாடாளுமன்றத்தில் நீங்கள் (அமித் ஷா) ஆற்றிய உரை மிகச் சிறப்பாக இருந்தது. இப்போது அமித் ஷா யாரென்று மக்கள் தெரிந்திருப்பார்கள். அது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள் . இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இவ்வாறு ரஜினி காந்த் பேசினார்.