ரஜினியின் புதிய படத்தை கருணாநிதி பேரன் தயாரிக்கிறார்: கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்!

நடிகர் ரஜினிகாந்தின் புதிய படத்தை திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், முரசொலி மாறனின் மகனும், சன் டிவி அதிபருமான கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.
ரஜினி நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி வெளிவர இருக்கிறது.
‘காலா’ படத்தையடுத்து வெளிவர இருக்கும் ரஜினி படம் ‘டூ பாயிண்ட் ஓ’. ஷங்கர் இயக்கத்தில், லைக்கா தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. ரஜினி டப்பிங் பேசி முடித்துவிட்டார். கிராபிக்ஸ் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
மேற்கண்ட இரண்டு படங்களுக்கான தன் பணிகளை முடித்துவிட்டு சும்மா இருக்கும் ரஜினி, அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், மறைந்த முரசொலி மாறனின் மகனும், சன் டிவி அதிபருமான கலாநிதி மாறன் தனது சன் பிக்சர்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே ரஜினியை வைத்து ‘எந்திரன்’ படத்தை தயாரித்தவர். தற்போது விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் 62-வது படத்தை தயாரித்து வருபவர்.
ரஜினியின் புதிய படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது பிரபுதேவாவை வைத்து ‘மெர்குரி’ என்ற படத்தை இயக்கி வருபவர். ‘மெர்குரி’ வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகிறது. பா.ரஞ்சித்தை அடுத்து ரஜினியை இயக்கும் இரண்டாவது இளம் இயக்குனர் என்ற பெயரை பெறுகிறார் கார்த்திக் சுப்பராஜ்.
கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின் ‘பாபா – 2’, ‘சந்திரமுகி – 2’ ஆகிய படங்களில் ரஜினி நடிப்பார் என்று கூறப்படுகிறது.
அப்படியென்றால், அரசியல்…?
அட போங்கப்பா…! அதெல்லாம் மூன்றாம் உலகப் போர் வரும்போது பாத்துக்கலாம்…!!