வருந்துகிறார் ‘யேய்’ ரஜினி! வருந்துவார்களா செய்தியாளர்கள்?
சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) இன்று வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்கள் மீது பாய்ந்த ரஜினிகாந்த், ஒருமையில் மிரட்டும் வகையில் பேசினார்.
அவருடைய நடவடிக்கைக்கு சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (MUJ) கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. பொதுவெளிக்கு வருபவர்களிடம் கேள்விகள் கேட்பதும், அதனை மக்களுக்குத் தெரிவிப்பதும் செய்தியாளர்களின் பணி.
இதற்காக மிரட்டுவது, ஒருமையில் பேசுவது போன்ற அநாகரிக செயல்களை அனுமதிக்க முடியாது. இப்படிப் பேசியதற்காக நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின்போது நான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை. அப்படி எந்த பத்திரிகை அன்பர்களின் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் வருந்துவது இருக்கட்டும்!
மிகவும் ஆபத்தான, படுபிற்போக்கான அரசியல் – சமூக – பொருளாதார – பண்பாட்டு கருத்துக்களைக் கொண்ட தீவிர வலதுசாரி ரஜினிகாந்த் என்பது தெரியாமல், ஏதோ தமிழகத்தை காக்க வந்த ரட்சகராக அவரை பாவித்துக்கொண்டு, அவர் தும்மினால் கூட அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுவது, அவர் கொட்டாவி விட்டால் கூட அது பற்றி நாலு பேரை கூட்டி வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் விவாதிப்பது என்று விஷ விதைகளை விதைத்த ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் அதற்காக இனியாவது வருந்துவார்களா…?