தமிழக தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று யாழ்ப்பாணம் பயணம் ரத்து: ரஜினி அறிவிப்பு!

“நண்பர் தொல். திருமாவளவன் ஊடகங்களின் மூலமாகவும், வைகோ தொலைபேசி மூலமாகவும், வேல்முருகன் நண்பர் மூலமாகவும் பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த (யாழ்ப்பாணம்) நிகழ்ச்சியில் நான் கலந்துக்கொள்ளக் கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் சொன்ன காரணங்களை முழுமனதுடன் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று நான் இவ்விழாவில் கலந்து கொள்வதை தவிர்க்கிறேன்” என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஜினிகாந்த் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை:-

0a1e

லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் இலங்கையில் உள்ள வவுனியாவில் வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அளிப்பதற்காக அவருடைய தாய் ஞானாம்பிகை பெயரில் 150 வீடுகளை கட்டியுள்ளார்.

சுபாஷ்கரன் அன்பானவர், கருணை உள்ளம் கொண்டவர், அவர் கட்டிய வீடுகளை ஏழைகளுக்கு வழங்குவதற்கான விழாவிற்கு என்னை அழைத்திருந்தார். வருகிற ஏப்ரல் மாதம் 9-ம் தேதி மாலை கிட்டத்தட்ட மூன்று, நான்கு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ள அந்த விழாவில் மலேசிய செனட் உறுப்பினர் விக்கேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டணித் தலைவர் சம்பந்தன், லண்டனைச் சேர்ந்த எம்.பி. ஜேம்ஸ் பெர்ரி, இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் ஆகியோருடன் நானும் அவ்விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டுச் சாவி கொடுப்பதாகவும், ஜாஃப்னா பல்கலைக்கழகத்துக்கு ஆராய்ச்சி கட்டிட நிதி கொடுப்பதாகவும் திட்டம்.

மறுநாள் ஏப்ரல் 10-ம் தேதி வவுனியா சென்று வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்து மரக்கன்றுகளை நடும் திட்டம், அதன்பிறகு முல்லைத்தீவு, கிளிநொச்சி, புது குடியிருப்பு போன்ற இடங்களை பார்வையிட்டு மக்களை சந்திப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நான் இரண்டு விஷயங்களுக்காக இந்த விழாவில் கலந்து கொள்ள சம்மதித்தேன். காரியம்: அந்த வீடுகளை திறந்து வைப்பது. காரணம்: காலம் காலமாய் வாழ்ந்த தங்களின் 0a1fபூமிக்காக, தங்களின் இனத்துக்காக, தங்களது உரிமைக்காக, தங்களது சுய கவுரவத்திற்காக லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி, மடிந்து தங்களை தாங்களே சுய சமாதியாக்கிக் கொண்டு பூமிக்குள் புதைந்து கிடக்கும் அந்த வீர மண்ணை வணங்கி, அந்த மாவீரர்கள் வாழ்ந்த, நடமாடிய இடங்களைப் பார்த்து அவர்கள் சுவாசித்த காற்றையும் சுவாசிக்க வேண்டுமென்ற ஆசை வெகு நாட்களாய் என்னுள் இருந்தது. அதை நிறைவேற்றிக் கொண்டு, பல லட்சக்கணக்கில் கூடவிருக்கும் என்னை வாழவைக்கும் தமிழ் மக்களைப் பார்க்க வேண்டும். மனம் திறந்து பேச வேண்டும் என்று ஆவலாய் இருந்தேன்.

அதுமட்டுமன்றி இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனாவை சந்திக்க நேரம் கேட்டு, சந்தித்து ஒரு ஜான் வயிற்றுக்காக உயிரைப் பணயம் வைத்து வேறு எந்த தொழிலுமே தெரியாததனால் கடலில் போய் மீன் பிடிக்கும் என்னுடைய மீனவ சகோதரர்களுடைய உயிரை பறித்து அவர்களின் வாழ்வாதாரமான படகுகளை சிறைபிடித்து வைக்கும் சம்பவங்களை அன்றாட பத்திரிகைகளில் படிக்கும்போது நெஞ்சம் துடிக்கிறது. அதைப் பற்றி என்னளவில் அவருடன் இதற்கு ஒரு சுமூகமான தீர்வுகாண வேண்டுமென்று ஒரு வேண்டுகோளை வைக்க எண்ணியிருந்தேன்.

இத்தருணத்தில் நண்பர் தொல். திருமாவளவன் ஊடகங்களின் மூலமாகவும், வைகோ தொலைபேசி மூலமாகவும், வேல்முருகன் நண்பர் மூலமாகவும் பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ளக் கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்கள்.

0a1g
அவர்கள் சொன்ன காரணங்களை முழுமனதுடன் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று நான் இவ்விழாவில் கலந்து கொள்வதை தவிர்க்கிறேன்.

இச்சமயத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். நான் அரசியல்வாதி அல்ல. நான் ஒரு கலைஞன். திருமாவளவன் சொன்னதைப் போல மக்களை மகிழ்விப்பது தான் என்னுடைய கடமை.

இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்கே வாழும் தமிழ் மக்களை சந்தித்து, அவர்களை மகிழ வைத்து அந்த புனிதப்போர் நிகழ்ந்த பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால் தயவு செய்து அதை அரசியலாக்கி என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.