“நடிகனான என்னை பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்!” – ரஜினி
மக்களின் உடல்நலத்தையும், வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் நடத்திய 100-வது நாள் போராட்டத்தின்போது, போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 13க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கட்சி தொடங்கி தமிழக தேர்தல் அரசியலில் அறிமுகமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற இன்று தூத்துக்குடி செல்கிறார்.
தூத்துக்குடிக்குப் புறப்படும்முன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்கள்ச் சந்தித்த ரஜினிகாந்த், “தூத்துக்குடியில் காயமடைந்தவர்களை சந்திக்கச் செல்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்னால் தான் எனக்கு மகிழ்ச்சி. நடிகனான என்னைப் பார்த்தால் தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புகிறேன்” என்றார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு திமுக தான் காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருப்பது குறித்து கேட்டதற்கு, “திமுகவை அதிமுகவும், அதிமுகவை திமுகவும் விமர்சிப்பது தான் அரசியல். பழைய நிகழ்வுகளைப் பேசி பயன் இல்லை” என்றார் அவர்.
‘காலா’ படத்திற்கு கர்நாடக மாநிலத்தில் தடை விதித்திருப்பது குறித்து கேட்டதற்கு, “கர்நாடக திரைப்பட வர்த்தக சபையுடன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பேச்சு நடத்தி சுமூக தீர்வு காணும்” என்றார் ரஜினி.