ராஜவம்சம் – விமர்சனம்
நடிப்பு: சசிகுமார், நிக்கி கல்ராணி, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதிஷ், மனோபாலா, சிங்கம்புலி, யோகிபாபு மற்றும் பலர்
இயக்கம்: கதிர்வேலு
இசை: சாம்.சி.எஸ்.
ஒளிப்பதிவு: சித்தார்த்
யதார்த்தத்தில் வழக்கொழிந்துவரும் கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறையின் உன்னதத்தை உயர்த்திப்பிடிக்கும் இலட்சிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு, திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்கும் படம் ‘ராஜவம்சம்’.
கிராமத்தில் வேளாண்தொழில் செய்து ஊரே போற்றும்படியாக கெளரவமாக, ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறது விஜயகுமாரின் குடும்பம். 40க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கும் அந்த கூட்டுக் குடும்பத்தின் பெரிய தூண்களாக இருக்கிறார்கள் விஜயகுமாரும் அவரது மனைவியான ரமணியும். அந்த பெரிய குடும்பத்தின் செல்லப்பிள்ளை தான் நாயகன் சசிகுமார்.
சசிகுமார் சென்னையில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் ஐ.டி. ஊழியராக பணியாற்றி வருகிறார். சசிகுமாரின் பேச்சுத் திறமையால் ரூ.5ஆயிரம் கோடி மதிப்புள்ள மிகப்பெரிய ப்ராஜெக்ட் ஒன்று அவரது நிறுவனத்திற்கு கிடைக்கிறது. அந்த ப்ராஜெக்ட்டை மிகக் குறைந்த நாட்களில் வெற்றிகரமாக முடிக்கவேண்டிய பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த ப்ராஜெக்டை தோற்கடிப்பதற்காக மூன்று நிறுவனங்களின் தொழிலதிபர்கள் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.
இதற்கிடையே, சசிகுமார் குடும்பத்தார் அவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் சரியான வரன் கிடைக்கவில்லை. கடைசியாகக் கிடைக்கும் ஒரு பெண்ணும் தான் வேறொருவரைக் காதலிப்பதாக சசிகுமாரிடமே சொல்ல, அந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்த திட்டமிடுகிறார் சசிகுமார். இதற்காக, தன்னோடு பணியாற்றும் நாயகி நிக்கி கல்ராணியை தன் காதலியாக நடிக்குமாறு சொல்லி தன் ஊருக்கு அழைத்துச் சென்று, அவரை தன் காதலி என்று தன் குடும்பத்தாரிடம் அறிமுகப்படுத்துகிறார். அவரது குடும்பத்தாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்துவிட, விவகாரம் திருமணம் வரை சென்று விடுகிறது.
சசிகுமார் வீட்டில் நடிக்க வந்த நிக்கி கல்ராணி, அதே வீட்டிற்கு மருமகளாக ஆகிறார். யார் இந்த நிக்கி கல்ராணி? சசிகுமாரை ஏன் திருமணம் செய்து கொண்டார்? குறிப்பிட்ட காலத்திற்குள் சசிகுமாரால் ப்ராஜக்ட் முடிக்க முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார். குடும்பம், காதல், நட்பு என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
நாயகியான நிக்கி கல்ராணி, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவருடைய சுட்டித்தனமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. மாடு கன்று ஈனும் காட்சியில் உணர்சிவசப்படும் இடத்தில் நிக்கி கல்ராணி சிறப்பாக நடித்திருக்கிறார்.
யோகி பாபு, சிங்கம் புலி, சதீஷ் உள்ளிட்டோரின் காமெடி காட்சிகள் பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
விவசாயம், ஐ.டி. சம்பந்தப்பட்ட கதையை கூட்டுக்குடும்பம் மற்றும் கமர்ஷியல் கலந்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் கதிர் வேலு. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் திறமையாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர். ஒரு விஷேசத்துக்கு எத்தனை பேர் வந்தாலும் நம்முடைய ரத்தஉறவுகளைத்தான் கண்கள் தேடும். யாரேனும் ஒரு ரத்த உறவு இல்லை என்றாலும் மனம் வருத்தப்படும் என்பது போல் குடும்ப உறவுகளை சொல்லும் வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் வழக்கம்போல் மிரட்டி இருக்கிறார்.
கிராமத்து அழகை சிறப்பாகப் படம் பிடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்.
‘ராஜவம்சம்’ – குடும்ப உறவுகளுடன் சேர்ந்து பார்த்து ரசிக்கத் தக்க படம்!