ரயில் – விமர்சனம்

நடிப்பு: குங்குமராஜ் முத்துசாமி, வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, ரமேஷ் வைத்யா, செந்தில் கோச்சடை, ஷமீரா, பிண்ட்டூ, வந்தனா, பேபி தனிஷா, சுபாஷ், தங்கமணி பிரபு, ரமேஷ் யந்த்ரா, சாம் டேனியல், ராஜேஷ், ராமையா மற்றும் பலர்

இயக்கம்: பாஸ்கர் சக்தி

ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்

படத்தொகுப்பு: நாகூரான் இராமச்சந்திரன்

இசை: எஸ்.ஜே.ஜனனி

தயாரிப்பு: வேடியப்பன்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

தேனி மாவட்டத்தில், எழில் கொஞ்சும் மலைகள் சூழ்ந்த அழகிய சிறு நகரம் ஒன்றில் இப்படக்கதை நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு முத்தையா (குங்குமராஜ் முத்துசாமி)  என்றொரு எலக்ட்ரீஷியன் இருக்கிறார். அவர் ஒழுங்காக வேலைவெட்டிக்குப் போகாமல், மது அடிமையாக சதா குடியும், பாட்டிலுமாகத் திரிகிறார். திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் தனக்கு ஒரு குழந்தை இல்லாததால், ஊரில் யாரும் தன்னை மதிக்கவில்லை என்ற கவலை அவருக்கு. ஆனால், அவருடைய மனைவி செல்லம்மாவோ (வைரமாலா), சம்பாத்தியம் இல்லாத குடிகார கணவனை நம்பி பிள்ளை பெற்றுக்கொண்டால், அதை வளர்த்து ஆளாக்குவது எப்படி என்ற கவலையில், பிள்ளை வேண்டாம் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

அந்த ஊரிலுள்ள மில்லில், மும்பையைச் சேர்ந்த சுனில் (பர்வேஸ் மெஹ்ரூ) என்பவர் வேலை செய்து வருகிறார். பணத்தேவை கருதி, முத்தையாவின் மனைவி செல்லம்மா, தன்னுடைய சிறிய வீட்டின் ஒரு பகுதியை சுனிலுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். சுனிலின் குடும்பம் மும்பையில் இருப்பதால், அவர் மட்டும் இங்கு தனியாக வாழ்ந்து வருகிறார். அவரும், செல்லம்மாவும் உடன்பிறவா ‘அக்கா – தம்பி’யாக அன்பாக, பாசமாக பழகி வருகிறார்கள். ஆனால், செல்லம்மாவின் கணவர் முத்தையாவுக்கு சுனிலைக் கண்டாலே பிடிப்பதில்லை. சுனிலைப் பார்க்கும் போதெல்லாம் முகத்தைக் கடுகடுவென வைத்துக்கொண்டு, கரித்துக் கொட்டியபடியே இருக்கிறார்.

சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டிருக்கும் சுனில், ஒரு பெரிய பையை செல்லம்மாவிடம் கொடுத்து வைக்கிறார். அந்த பையை திரும்ப வாங்குவதற்கு முன்பாகவே சுனில் விபத்தில் சிக்கி இறந்துவிடுகிறார். இத்தகவல் கிடைத்து சுனிலின் அப்பா (பிண்ட்டூ), அம்மா (வந்தனா), மனைவி டிம்பிள் (ஷமீரா), குழந்தை (பேபி தனிஷா) உள்ளிட்டோர் கதறியபடி பதறியடித்து ஓடி வருகிறார்கள். இறுதிச் சடங்கு நடக்கிறது. அது முடிந்த பிறகு, சுனில் வைத்திருந்த பணம் பற்றி அவரது குடும்பத்தினர் கேட்கிறார்கள். அப்போது தான் செல்லம்மாவுக்கு தன்னிடம் சுனில் கொடுத்து வைத்திருந்த  பை நினைவுக்கு வருகிறது. அதை அவர் எடுக்கப் போகிறார். பை அங்கு இல்லை. அதிர்ச்சியடைகிறார்.

பணப் பை மாயமானது எப்படி? இந்த விவகாரத்தை சுனில் குடும்பத்தினர் எப்படி புரிந்துகொண்டார்கள்? அதன்பின் என்ன நடந்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘ரயில்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இப்படத்தில் நடித்துள்ள அனைவருமே புதுமுகங்கள். ஆனால், புதுமுகங்கள் என்று சொல்ல முடியாதபடி அனுபவமிக்க நடிகர்கள் போல் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மேலும், எல்லோருமே மண் சார்ந்த முகங்களாக இருப்பது பார்வையாளர்களை நெருக்கம் கொள்ள வைக்கிறது. நாயகன் முத்தையாவாக வரும் குங்குமராஜ் முத்துசாமி, நாயகி செல்லம்மாவாக வரும் வைரமாலா ஆகிய இருவரும் பொருத்தமான தேர்வு. யதார்த்தமாக தத்ரூபமாக நடித்து படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

நாயகனின் நண்பர் வரதனாக வரும் ரமேஷ் வைத்யா, நாயகியின் அப்பாவாக வரும் செந்தில் கோச்சடை, மும்பைக்கார சுனிலாக வரும் பர்வேஸ் மெஹ்ரூ, சுனிலின் அப்பாவாக வரும் பிண்ட்டூ, அம்மாவாக வரும் வந்தனா, மனைவி டிம்பிளாக வரும் ஷமீரா, குழந்தையாக வரும் பேபி தனிஷா, இன்ஸ்பெக்டராக வரும் தங்கமணி பிரபு, மில் மேனேஜராக வரும் ரமேஷ் யந்த்ரா, அக்கவுண்டண்டாக வரும் சாம் டேனியேல் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

தமிழ் திரைத்துறையில் ஏற்கெனவே கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிரபலமாக இருக்கும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். வழக்கமான வணிக பொழுதுபோக்குப் படம் போல் இல்லாமல், குறைந்த பட்ஜெட்டில், வித்தியாசமான யதார்த்தவாத படமாக, ரசிக்கத் தக்க விதத்தில் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார். அவர் எடுத்துக்கொண்டுள்ள கதை மிகவும் எளிமையானது. ஆனால் அதில் அவர் சொல்லியிருக்கும் செய்திகள் வலிமையானவை. ’இடப் பெயர்வு என்பது எப்போதுமே நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது; வேலை தேடி மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள். அப்படியிருக்க, புலம்பெயர்ந்தோரை ‘வந்தேறி’ என இழிவாகப் பார்க்கும் மக்கள், உள்ளூர்வாசிகளின் வேலைகளை அவர்கள் அபகரிப்பதாக நினைத்துக் கொண்டு, உண்மையில் எளிய, பலவீனமான, விளிம்புநிலை மக்களை நோக்கித் தங்கள் கோபத்தைத் திருப்பி விடுகிறார்கள்’ என்ற செய்தியை அழுத்தம் திருத்தமாக பேசுகிறது இந்தப்படம்.

துபாயில் பணிபுரிந்துவிட்டு சொந்த ஊர் திரும்பும் ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் ஒன்று படத்தில் உள்ளது. “இங்கு வேலை பார்க்க வந்துள்ள வடமாநிலத்தவர்கள் வந்தேறிகள் என்றால், துபாயில் வேலைக்குச் சென்ற நான், துபாய்வாசிகளுக்கு வந்தேறி தான். இங்கு மக்களை ஏமாற்றி, நிலத்தை அபகரித்து, சொத்து குவித்தது யார் என்பது உங்களுக்கு தெரியும். ஆயினும்கூட, அவர்கள் செல்வந்தர்களாகவும் சக்தி வாய்ந்தவர்களாகவும் இருப்பதால் நீங்கள் அவர்களைக் குறை கூறவோ அல்லது கேள்வி கேட்கவோ மாட்டீர்கள். மாறாக, வயிற்றுப் பிழைப்புக்காக புலம்பெயர்ந்த இந்த ஆதரவற்ற ஏழைகள் சக்தியற்றவர்கள் என்பதால் அவர்கள் மீது உங்கள் கோபத்தை வெளிப்படுத்த பார்க்கிறீர்கள்” என்ற வசனம் இயக்குநரின் குரலாக இருக்கிறது. நல்ல கருத்து. வாழ்த்துகள் பாஸ்கர் சக்தி.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு தேனி வட்டார அழகை அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது. எஸ்.ஜே.ஜன்னியின் இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.

‘ரயில்’ – உருவத்திலும், உள்ளடக்கத்திலும் வித்தியாசமான படம்; பார்த்து ரசிக்கலாம்!