மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல் காந்தி: 4 மாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றம் வந்தார்!
அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எம்.பி. பதவியை மக்களவை செயலகம் மீண்டும் வழங்கியுள்ளது. இதையடுத்து, 4 மாத இடைவெளிக்கு பிறகு, அவை நடவடிக்கைகளில் அவர் பங்கேற்றார்.
கர்நாடகாவில் 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி என பெயர் வந்தது எப்படி’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்மூலம் மோடி சமூகத்தினரை ராகுல் அவமதித்துவிட்டதாக, குஜராத் பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. குஜராத் உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து, எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டார்.
குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், ராகுல் காந்தியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த 4-ம் தேதி நிறுத்திவைத்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து, ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவியை வழங்க கோரி மக்களவை செயலகத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்த மக்களவை செயலகம், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவியை நேற்று வழங்கியது.
இதையடுத்து, நேற்றைய தினமே மக்களவை நடவடிக்கைகளில் பங்கேற்க ராகுல் காந்தி முடிவு செய்தார். நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்த அவர், அங்கு மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார், 4 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றார்.
காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டநம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடக்க உள்ளது. இதில் பங்கேற்க ராகுல் முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையே, ராகுலுக்கு எம்.பி. பதவியை மீண்டும் வழங்குவது தொடர்பான மக்களவை செயலகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் ட்வீட் செய்து, ‘இது வெறுப்புக்கு எதிரான அன்பின் வெற்றி’ என்று பதிவிட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த எம்.பி. சசி தரூர் தனது ட்விட்டர் பதிவில், ‘இது நீதிக்கும், நமது ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி. இந்திய மக்களுக்கும், வயநாட்டில் உள்ள அவரது தொகுதிக்கும் அவர் தொடர்ந்து சேவையாற்ற முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.
எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டதை அடுத்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பயோவை ‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.’ என்று மாற்றி இருந்தார். மீண்டும் எம்.பி. பதவி கிடைத்ததை தொடர்ந்து, ஏற்கெனவே இருந்ததுபோல, ‘இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்’ என்று மாற்றிக் கொண்டுள்ளார்.