ரகு தாத்தா – விமர்சனம்
நடிப்பு: கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், இஸ்மத் பானு, ஆனந்தசாமி, ஜெயக்குமார், ஆதிரா லட்சுமி, ராஜீவ் ரவீந்திரநாதன் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: சுமன் குமார்
ஒளிப்பதிவு: யாமினி யக்ஞமூர்த்தி
படத்தொகுப்பு: டி.எஸ்.சுரேஷ்
இசை: ஷான் ரோல்டன்
தயாரிப்பு: ’ஹோம்பாலே பிலிம்ஸ்’ விஜய் கிரகந்தூர்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)
இந்தி திணிப்பை எதிர்க்கும் ஒரு பெண், மொழித்திணிப்பை மட்டுமல்ல, தன் மீது திணிக்கப்படும் ஆணாதிக்கம் உள்ளிட்ட சகலவிதமான ஆதிக்கங்களையும், அடக்குமுறைகளையும் உறுதியுடன் எதிர்த்து நிற்கிறார். இதனால் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள், பிரச்சனைகள் என்ன? இவற்றிலிருந்து அவர் எப்படி மீள்கிறார்? என்பது தான், கொஞ்சம் சீரியஸ்னெஸும், நிறைய காமெடியும் கலந்த ‘ரகு தாத்தா’ திரைப்படத்தின் ஒருவரிக்கதை.
இது ஒரு பீரியட் ஃபிலிம். 1960களின் இறுதியில், இந்திரா காந்தி முதன்முதலாக பிரதமராக இருந்த காலத்தில், தமிழ்நாட்டில், வள்ளுவன்கோட்டை என்ற கற்பனை ஊரில் இப்படக்கதை நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
வள்ளுவன்பேட்டையைச் சேர்ந்தவர் கயல்விழி பாண்டியன் (கீர்த்தி சுரேஷ்). கல்லூரி மாணவியாக இருந்தபோதே ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தீவிரமாகப் போராடியவர். இவரது தாத்தாவான ரகோத்தமன் என்ற ரகுவும் (எம்.எஸ்.பாஸ்கர்) இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டக் களத்தில் முன்னணியில் நின்றவர் தான். “இவர்கள் இருவரும் நடத்திய போராட்டத்தின் விளைவாகத் தான் இந்த ஊரில் இருந்த ‘ஏக்தா சபா’ என்ற இந்தி கற்றுக்கொடுக்கும் சபாவே இழுத்து மூடப்பட்டது” என்று ஊர் முழுக்க பெயர் எடுத்தவர்கள் இந்த தாத்தாவும் பேத்தியும்.
கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, கயல்விழி பாண்டியனுக்கு அதே ஊரில் இருக்கும் ‘மெட்ராஸ் சென்ட்ரல் பேங்க்’ கிளையில் வேலை கிடைக்கிறது. அந்த வங்கிக் கிளை மேலாளரின் (ராஜீவ் ரவீந்திரநாதன்) இந்தி ஆதரவு நிலைப்பாட்டை எதிர்க்கும் கயல்விழி, அங்குள்ள போர்டில் எழுதப்படும் இந்தி எழுத்துகளையும் அழிக்கிறார். அப்படிப்பட்டவருக்கு, இந்தி தேர்வு எழுதினால் புரமோஷனுடன் கல்கத்தாவில் வேலை, கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்ற நிலை ஏற்படுகிறது. ஆனால், இதற்காகவெல்லாம் இந்தி படிக்கவோ, இந்தி தேர்வு எழுதவோ முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிடுகிறார் கயல்விழி.
இது ஒருபுறம் இருக்க, முற்போக்கான பெரியாரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டவரான கயல்விழி, பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக குரல் எழுப்பும் சிறுகதைகள் எழுதும் எழுத்தாளராகவும் இருக்கிறார். ஆனால், ஒரு பெண் எழுதியது எனத் தெரிந்தால் தன் எழுத்தை ஆண்கள் புறக்கணித்துவிடுவார்கள் என நினைக்கும் அவர், தனது முழுப்பெயரான ’கயல்விழி பாண்டியன்’ என்பதை ‘க.பாண்டியன்’ என சுருக்கி, இந்த ஆண் பெயரில் சிறுகதைகள் எழுதிவருகிறார். அவர் மீது அதே ஊரில் மின்சாரத் துறையில் பொறியாளராக பணிபுரியும் தமிழ்செல்வன் (ரவீந்திர விஜய்) ஈர்ப்புக்கொள்கிறார். கயல்விழியிடமிருந்து புத்தகங்கள் கடன் வாங்கிப் படிக்கும் அவர், தனக்கும் இலக்கிய ஆர்வம் இருப்பதாகவும், கயல்விழியின் புரட்சிகரமான பெண்ணிய எழுத்துகளுக்கும், சிந்தனைகளுக்கும் தான் ரசிகன் என்றும் கூறுகிறார். இதனால் அவருடன் நட்பாக பழகி வருகிறார் கயல்விழி.
இதனிடையே, கயல்விழிக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர்கள் விரும்புகிறார்கள். ஆனால், திருமணம் பற்றி பேச்செடுத்தாலே, “எனக்கு கல்யாணம் வேணாம். அதில் எனக்கு இஷ்டமில்லை” என்று பிடிவாதமாக மறுத்துவிடுகிறார் கயல்விழி. இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாத்தாவின் ‘நாட்கள் எண்ணப்படுவதாக’ டாக்டர் சொன்னதால் கலங்கிப்போகும் கயல்விழி, தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயச்சூழல் ஏற்படுகிறது. முன்பின் தெரியாத யாருக்கோ கழுத்தை நீட்டுவதற்குப் பதிலாக, தன்னுடைய பெண்விடுதலைச் சிந்தனை மற்றும் கருத்துகளுடன் ஒத்துப்போகும் தமிழ்செல்வனையே திருமணம் செய்யலாம் என முடிவெடுக்கிறார் கயல்விழி. இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிகிறது.
இதன்பிறகு தான் தமிழ்செல்வன் கடைந்தெடுத்த ஆணாதிக்கவாதி என்பதும், தன்னை இம்ப்ரஸ் செய்வதற்காக பெண்ணியவாதி போல் நடித்திருக்கிறார் என்பதும் கயல்விழிக்குத் தெரிய வருகிறது. உடனே இந்த திருமணம் வேண்டாம் என்ற முடிவுக்கு வரும் கயல்விழி, தாத்தாவுக்குத் தெரியாமல் – அவரது மனதை நோகடிக்காமல் – திருமணத்தை நிறுத்த, அலுவலக சகாவான அலமேலு மாமி (தேவதர்ஷினி) மற்றும் தன் அண்ணனின் மனைவி (இஸ்மத் பானு) ஆகியோரின் உதவியுடன் நாசூக்காக வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்கிறார். இம்முயற்சியில் கயல்விழி வெற்றி பெற்றாரா? பேத்தியின் திருமணத்தை கண்குளிரப் பார்க்க வேண்டும் என்ற தாத்தாவின் கடைசி ஆசை என்ன ஆனது? என்பது தான் ‘ரகு தாத்தா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகி கயல்விழி பாண்டியன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். “இந்தி தெரியாது போயா” என அடித்துப்பேசுவது, ஆணாதிக்கத்துக்கு எதிராக வெடுக்கென வெளுத்து வாங்குவது என்று கயல்விழி பாண்டியன் கதாபாத்திரத்துக்கு தன் சிறப்பான உடல்மொழியால் உயிர் கொடுத்திருக்கிறார். ஆங்காங்கே அவர் செய்யும் குறும்புத்தனமான பாவனைகள் ரசிக்க வைக்கின்றன. இறுதிக் காட்சியில் அவரது வசனங்களும், சுயமரியாதை சம்பவங்களும் கைதட்டல் பெறுகின்றன.
ரகு தாத்தா கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார்.
பேத்திக்கு ஏற்ற தாத்தா எனச் சொல்லும் அளவுக்கு அசால்ட்டாக கைதட்டல்கள் வாங்குகிறார். அவர் போடும் ஒன்லைனர் ஒவ்வொன்றும் கிச்சுகிச்சு அதகளம்.
’போலி பெண்ணியவாதி’, ’நிஜ ஆணாதிக்கவாதி’ என்ற இருவேறு முகங்கள் கொண்ட தமிழ்செல்வன் கதாபாத்திரத்தில் ரவீந்திர விஜய் நடித்திருக்கிறார். இப்பாத்திரத்துக்கு இவர் மிகச் சரியான தேர்வு. அற்புதமாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.
தேவதர்ஷினி, இஸ்மத் பானு, ஆனந்தசாமி, ஜெயக்குமார், ஆதிரா லட்சுமி, ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி கலகலப்பைக் கூட்டியிருக்கிறார்கள்.
‘தி ஃபேமிலி மேன்’, ‘ஃபார்ஸி’ போன்ற தொடர்களில் எழுத்தாளராக பணியாற்றிய சுமன்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். 1960-களின் பின்னணியில் இந்தி திணிப்பு, அதற்கு எதிரான போராட்டங்கள், பெண்கள் மீதான அடக்குமுறை ஆகியவற்றை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் சுமன் குமார். ஜெயகாந்தன், பெரியார், இந்தி ஆதிக்க எதிர்ப்பு, அறிஞர் அண்ணா, புத்தக வாசிப்பு, பெண் அடிமைத்தனம் என நிறைய விஷயங்களைப் பேசும் படமாக இதை உருவாக்கியிருக்கிறார்.
மொழி திணிப்பும், பெண்கள் மீதான அடக்குமுறையும் இன்றைய காலத்திலும் தொடர்வதால் பட்த்துடன் பார்வையாளர்கள் எளிதாக கனெக்ட் செய்ய முடிகிறது. “திடீர்னு வந்தா திணிப்பு. காலங்காலமாக வந்தா கலாச்சாரம்” போன்ற வசனங்கள் அட்டகாசமாக எழுதப்பட்டுள்ளன. அதேபோல போலி பெண்ணியவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் இப்படம், ‘இந்தி திணிப்பு’ வேறு ‘இந்தி எதிர்ப்பு’ வேறு என்பதை தெளிவாகப் பிரித்து காட்டுகிறது.
திரைக்கதையில் சற்று கூடுதலாக கவனம் செலுத்தி, மேக்கிங்கில் சபா நாடகத்தனத்தைத் தவிர்த்திருந்தால், படத்தை இன்னும் நன்றாக ரசித்திருக்கலாம்.
யாமினி யக்ஞமூர்த்தியின் ஒளிப்பதிவு, ஷான் ரோல்டனின் இசை, டி.எஸ்.சுரேஷின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இயக்குநரின் கைக்கு அடக்கமாகப் பயணித்து, கதை நிகழும் 1960கள் காலகட்டத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்த உதவியிருக்கின்றன.
‘ரகு தாத்தா’ – காமெடிக்காகவும், கருத்துச் செறிவுக்காகவும் பார்க்கலாம்!