”கண்ணியம் குறையாத வகையில் கருத்து தெரிவிக்க வேண்டும்!” – மு.க.ஸ்டாலின்
‘கொலையுதிர் காலம்’ படவிழாவில் நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
ராதாரவியின் பேச்சு பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு திமுக நாளிதழான ‘முரசொலி’யில் இடம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.