”மூளை யற்றவர்”: ராதாரவி மீது நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன் பாய்ச்சல்!

’கொலையுதிர் காலம்’ பட்த்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசும்போது நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்தார் ராதாரவி. இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் பகிரப்பட்டது. அதனைப் பார்த்து பலரும் ராதாரவியை கடுமையாக சாடி வருகிறார்கள்.
ராதாரவியின் பேச்சு குறித்து நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
”ஒரு பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவரின் வாயிலிருந்து வந்து விழுந்துள்ள இந்த அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? யார் எனது கண்டனக் குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ என்று எனக்கு எந்த துப்புமில்லை. ஆதரவுமில்லை.
தன் மீதான கவனத்தை ஈர்ப்பதற்காக ராதாரவி இதைச் செய்துகொண்டிருக்கிறார். மூளையற்றவர். அந்த குப்பைக் கருத்தைக் கேட்டு குழுமியிருந்தவர்கள் சிரித்ததும், கைதட்டியதும் கவலையளித்தது. இப்படி ஒரு நிகழ்ச்சி முடிவுறாத ஒரு படத்துக்காக நடக்கிறது என்று எங்கள் யாருக்கும் தெரியாது.
இந்தப் படத்தை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றே நினைத்தேன். சற்றும் பொருத்தமற்ற நிகழ்ச்சி. தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலயே பேசினர். இதுதான் ஒரு படத்தை புரமோட் செய்யும் விதம் என்றால் இனி இது போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகி நிற்பதே நலம்.
ஏனெனில் இத்தகைய நிகழ்ச்சிகள் வேலையற்ற நபர்களுக்கு தங்கள் அறிவற்ற கருத்துகளைச் சொல்ல இடமளிக்கிறது. என்ன நடந்தாலும் அவர் மீது நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. பரிதாப நிலை”.
இவ்வாறு விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.