அதனால்தான் பெரியார் திராவிடனுக்கு கருப்பு நிறத்தை அடையாளம் ஆக்கினார்!

தருண் விஜய் கருப்பு பற்றி சொன்னதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. உள்ளிருக்கும் விஷயத்தை மறைக்க தெரியாமல் வெளிப்படுத்தியிருப்பதற்கு பாராட்டவே செய்யலாம்.

நிறங்களை பற்றிய மதிப்பீடு உலகெங்கிலும் இருக்கிறது. நிறம், இனமாக காணப்படுகிறது. இனத்துக்குள் நிறம் சாதியாக, வர்க்கமாக பார்க்கப்படுகிறது. பிளந்து கொள்வதற்கும் ஏறி மிதிப்பதற்கும் நமக்கு ஏதோ ஒரு சாக்கு தேவை. நிறம் அப்படி ஒரு சாக்கு.

நிற மேன்மை நிலை நாட்டுவதற்கு ஐரோப்பா மற்றும் மேற்குலகம் பல தகிடுதத்தங்களை செய்து வருகின்றன. அதிலும் மானுடவியலாளர்கள் ஒரு படி மேலே போய் கருப்பினம் முற்றிலும் வேறு இனம் என்பதாக நிறுவும் முயற்சியில் இருக்கிறார்கள். அதாவது ஆஸ்ட்ரெலோபித்திகஸ் வழி வந்தவர்கள் வெள்ளை நிற ஆரிய இனம் என்றும் பிழைக்க தெரியாத முட்டாள் நியாண்டர்தல் வழி வந்தவர்கள் கருப்பு இனம் என்றும் இரண்டும் கலந்தவை பிற இனங்கள் என்றெல்லாம் தோன்றியபடி அடித்து கொண்டிருக்கிறார்கள்.

கருப்பு என்ற நிறத்தில் ஏன் இத்தனை வெறுப்பு? தோலில் கருப்பு அவலட்சணம் என்கிறார்கள். யார்? கருப்பு நிறத்தை தோலில் கொள்ள முடியாதவர்கள்!

கருப்பு நிறத்தை அழுக்காக கருதுகிறார்கள். அழகின்மை என போதிக்கப்படுகிறது. அசுத்தமாக கற்பிக்கப்படுகிறது. இவை எல்லாமே கற்பிதங்கள். யோசித்து பாருங்கள். அழுக்கு, அழகு, சுத்தம் என எல்லாமே மாறும் தன்மை உடையவை. ஒருவரின் கண்ணோட்டத்தை சார்ந்தவை. பழங்கால branding exercises என சொல்லலாம். சுத்தம் என்பதே மூடநம்பிக்கை. அசுத்தம் சொல்லித்தான் இங்கு பல பேரை ஊருக்கு வெளியே ஒடுக்கி வைத்திருக்கிறோம்.

அத்தனை சுத்தம் பார்ப்பவன் எத்தனை பேர் உடல் மயிரை நாள்தோறும் அகற்றுகிறான்? கழிவு சுமக்காத குடல்களை தன் உடலில் கொள்ளாமல் எத்தனை பேர் இருக்கிறான்? வியர்வை வழியாமல் மணந்து திரிபவன் எத்தனை பேர்?

அசுத்தத்தை எவனொருவனும் வேண்டி விரும்பி வரித்து கொள்வதில்லை. மனித கழிவை அள்ள ஒருவனை நிர்ப்பந்தித்துவிட்டு அவன் அசுத்தமாக இருப்பதாக சொல்லி ஒதுக்கி வைத்தால், உண்மையில் அசுத்தம் அவனிடம் இல்லை என்பதுதான் நேர்மையான புரிதல். விந்தணு பெறாத கருமுட்டை, காலம் முடிந்து வெளியேறுவதை தீட்டு என எந்த கடவுள் சொன்னாலும் உண்மையில் தீட்டு அந்த கடவுளும் அதை ஆராதிப்பவனும்தான். குளிப்பதற்கு பொதுக்கிணற்றில் நீரெடுக்க அனுமதி மறுத்துவிட்டு, அழுக்கானவன் என சொல்பவன் தான் உண்மையில் அழுக்கு பிடித்தவன். முதுகொடிய கசக்கி பிழிந்து வேலை வாங்கிவிட்டு, வியர்வை நாற்றம் என ஒதுங்கினால், அவனே உண்மையில் நாற்றம் பிடித்தவன்.

இந்த இயற்கையான பூமியில் மனிதனும் அவன் கழிவு உட்பட எல்லாமும் இயற்கைதான். பல மிருகங்கள் தம் கழிவுகளை தாமே உண்ணும். அவற்றுக்கு அவை இயற்கை. அவ்வளவுதான். மனிதனுக்கு மட்டும்தான் ஏகப்பட்ட கற்பனை. இருக்கட்டும். ஆனால் அந்த கற்பனை கூட்டு கற்பனையாக (shared imagination) மாற்றப்படுகையில்தான் பிரச்சினை ஏற்படுகிறது. ஒரு நம்பிக்கையாக வடிவம் கொள்கையில்தான் ஏதேனும் ஓர் அதிகாரத்தை உருவாக்கி கொள்ள விழைகிறது.

மறுபடியும் சொல்கிறேன். இங்கு தருண் விஜய் பிரச்சினை அல்ல. அவர் நம்மை கருப்பு என்கிறார். நாம் கொதிக்கிறோம். நாமும் இங்கு பலரை கருப்பு என்று ஒதுக்கி வைத்திருக்கிறோமே, என்ன செய்ய? நம்மை அசுத்தம் என மற்றவர் சொல்கையில் கோபப்படும் நாம், வேறவரை அசுத்தம் என சொல்லி வைக்கிறோமே, என்ன செய்ய? அய்யர்கள் பெரும்பாலானோர், “நான் கொஞ்சம் ஆசாரமானவன். தொட்டுடாதீங்கோ… தீட்டு ஆயிடும்” என சொல்வதைத்தான் தருண் விஜய் வேறு வார்த்தைகளில் சொல்லி இருக்கிறார்.

ஐரோப்பிய ஹிட்லர் ஆரிய அடையாளம் விரும்பி ஏற்றதுபோல், இந்திய ஆரியனும் அதிகாரம் எடுக்கையில் ஐரோப்பிய பிளவுகளை விரும்பி ஏற்பான் என்பது எளிய புரிதல். ஐரோப்பியனின் நிறப்பிளவு இங்கும் தோன்றும் என்பது எதிர்பார்த்ததே. அதனால்தான் பெரியார் திராவிடனுக்கு கருப்பு நிறத்தை அடையாளம் ஆக்கினார். இந்திய அரசியல் எப்படியும் நிறத்துக்கு வந்து நிற்கும் என்பது அவருக்கு தெரியும். ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக பொதுப்புத்தியில் விதைக்கப்பட்டு இப்போது அதிகாரம் தைரியமாக பேசும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது நிறவெறி.

தருண் விஜய்களை ஒடுக்க வேண்டுமெனில் நாம் ஒடுக்கி வைத்திருப்பவரை நம்மோடு ஒருங்கிணைக்க வேண்டும். தருண் விஜய்க்கு நாமும் நாம் ஒடுக்கி வைத்திருப்பவரும் ஒரே நிறம்தான்.

அவர்கள் சொல்வதுபோல் அவர்களும் நாமும் இந்துக்கள் அல்ல. நாம் வேறு. அவர்கள் வேறு. நாம் கருப்பு. அவர்கள் வெளுப்பு. நம் சாமிகள் கருப்பு. அவர்கள் சாமிகள் வெளுப்பு. நம் பூசாரிகள் மீது சாமி இறங்கும். அவர்கள் பூசாரிகள் மீது சாமி இறங்காது. நம் சாமி மாட்டுக்கறி சாப்பிடும். அவர்கள் சாமி சாப்பிடாது. நம் சாமி தமிழ் பேசும். அவர்கள் சாமி பேசாது.

இந்த வித்தியாசம்தான் இலங்கையில் பிரபாகரனை கொன்றது; ஈழ மக்களை கொன்று குவித்தது. இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சன் கிளம்பி தில்லி வந்து மத்திய அரசினரும் அவனும் ஒரே இனம் என்கிறான். எதிரிக்கு தெரிகிறது நாம் என்ன நிறம் என்று. நம் அரசியல் என்ன நிறம் என்று. நாம்தான் எதையும் புரிந்து கொள்ளாமல் நமக்குள்ளேயே இழவு கூட்டி கொண்டிருக்கிறோம்.

இன்னும் விளங்காமல் உள்ளுக்குள்ளேயே முட்டாள்தன கற்பனைகளாலும், மேன்மை பெருமைகளாலும் பல பலவாக பிளந்து கொண்டே போனால், நீங்கள் கருப்பு என சொல்லி தருண் விஜய்கள் ஒருநாள் உங்களை ரோட்டில் வைத்து அடித்து கொல்லுவார்கள். தயாராகி கொள்ளுங்கள்.

RAJASANGEETHAN JOHN
‍‍‍‍‍‍