இராவண கோட்டம் – விமர்சனம்

நடிப்பு: சாந்தனு, கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு, சஞ்சய் சரவணன், பி.எல்.தேனப்பன், அருள்தாஸ், தீபா சங்கர் மற்றும் பலர்

இயக்கம்: விக்ரம் சுகுமாரன்

ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன்

இசை: ஜஸ்டின் பிரபாகர்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் – சதீஷ் குமார் – சிவா (டீம் எய்ம்)

சாதி கலவரங்களின் பின்னணியில் இருக்கும் சுயநல அரசியலையும், அதன் சூட்சுமம் அறியாமல் ஈசலாக அதில் விழும் அப்பாவி மனிதர்களின் அறியா இயல்பையும் தெள்ளத் தெளிவாக சொன்னால், அதுதான் இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் ‘இராவண கோட்டம்’ திரைப்படம்.

0a1e

ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி கிராமத்தில், மேலத்தெருவில் ஒரு சமுதாயத்தினர், கீழத்தெருவில் மற்றொரு சமுதாயத்தினர் என இரண்டு சமுதாய மக்கள் வசித்து வருகிறார்கள். மேலத்தெரு சமுதாய மக்களுக்கு சந்திரபோஸும் (பிரபு), கீழத்தெரு சமுதாய மக்களுக்கு சித்திரவேலும் (இளவரசு) தலைவர்களாக இருக்கிறார்கள். இந்த தலைவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதால், இவர்களின் இரண்டு சமுதாய மக்களையும் ஒற்றுமையாக வழிநடத்திச் செல்கிறார்கள். இவர்களைப் போலவே சந்திரபோஸுக்கு வேண்டிய – மேலத்தெருவை சேர்ந்த – செங்குட்டுவனும் (சாந்தனு), சித்திரவேலின் மகனான – கீழத்தெருவை சேர்ந்த – மதிமாறனும் (சஞ்சய் சரவணன்) நல்ல நட்புடன் இருக்கிறார்கள்.

ஊர்மக்களின் ஒற்றுமைக்கு அரசியல் கட்சிகள் வேட்டு வைத்துவிடும் என்பதால், ஊருக்குள் அரசியல் கட்சிக்கொடிகள் பறக்க அனுமதிப்பது இல்லை.

காய்ந்து கிடக்கும் அந்த வறண்ட பூமியின் கனிம வளங்களைச் சுரண்ட, கார்ப்பரேட் முதலாளித்துவ நிறுவனங்கள் வருகின்றன.இதற்கு வசதி செய்து கொடுக்கும் நோக்கில், இரு தெரு மக்களிடமும் பிரிவை உண்டு பண்ணி கலவரத்தை ஏற்படுத்த அமைச்சர் ராசாகண்ணும் (பி.எல்.தேனப்பன்), உள்ளூர் எம்.எல்.ஏ.வும் (அருள்தாஸ்) சதி செய்கிறார்கள்.

இறுதியில் வென்றது அரசியல்வாதிகளின் சதியா? மக்களின் ஒற்றுமையா? என்ற கேள்விக்கு விடை அளிக்கிறது ‘இராவண கோட்டம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் செங்குட்டுவனாக வரும் சாந்தனுவுக்கு முழு நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள களம். அதில் அசல் கிராமத்து இளைஞனாக புகுந்து விளையாடி இருக்கிறார். ஊர் தலைவரிடம் பணிவு, காதலியிடம் கொஞ்சல், கபடியில் ஆக்ரோஷம், நண்பனை காப்பாற்ற துடிக்கும் தவிப்பு, அரசியல் ரவுடிகளை ஆவேசமாக தாக்கும் சண்டை என்று சகல ஏரியாவிலும் உழைப்பைக் கொட்டி, தன்னாலும் சிறந்த நடிப்பைக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார். கிளைமாக்சில் போலீசாரால் மண்தரையில் இழுத்து செல்லப்படும் காட்சியில் அனுதாபம் அள்ளுகிறார். பாராட்டுகள் சாந்தனு.

நாயகன் செங்குட்டுவனின் காதலி  இந்திராவாக வரும் கயல் ஆனந்தி கிராமத்து தேவதையாய் பளிச்சிடுகிறார். நாயகனின் மீதான அவரது மோதலும், காதலும் ரசனை.

ஊர் தலைவர் சந்திரபோஸாக மிடுக்காக வருகிறார் பிரபு. இரு தெரு மக்கள் ஒற்றுமையாக வாழ எடுக்கும் முயற்சிகள் மூலம் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார். சித்திரவேலாக வரும் இளவரசு வழக்கம் போல் தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறார்.

மதிமாறனாக நடித்திருக்கும் சஞ்சய் சரவணன் நல்ல நண்பனாக வருகிறார். ஒரு கட்டத்தில் வில்லத்தனத்துக்கு மாறி இன்னொரு முகம் காட்டுகிறார்.

தீபா சங்கர், அருள்தாஸ், பி.எல்.தேனப்பன், சுஜாதா உள்ளிட்ட இதர நடிப்புக் கலைஞர்களும் நிறைவான நடிப்பை வழங்கி உள்ளனர்.

அரசியல் சதியையும், அதனால் இரண்டு சமுதாய மக்கள் வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகளையும் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்,இயக்குனர் விக்ரம் சுகுமாரன். ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் போகப்போக அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்போடு விறுவிறுப்புக்கு மாறுகிறது. கதாபாத்திரங்களின் வடிவமைப்பும், அதற்கு ஏற்ப நடிப்புக் கலைஞர்களை நடிக்க வைத்திருக்கும் விதமும் அருமை.  கருவேலமர வளர்ச்சியின் பின்னணியில் இருக்கும் அரசியல் சிக்கல்களையும் பேசியிருக்கும் இயக்குனர், சமூகப் பொறுப்புடன் ராமநாதபுரம் மாவட்ட எதிர்காலம் குறித்த எச்சரிக்கை மணியையும் துணிந்து அடித்திருக்கிறார். இதை ஆட்சியதிகாரம் கவனத்தில் எடுத்துக்கொள்வது அம்மாவட்ட மக்களுக்கு நல்லது.

வெற்றிவேல் மகேந்திரனின் கேமரா வறண்ட நிலத்து மக்களின் வாழ்வியலை கண்முன் நிறுத்துகிறது. ஜஸ்டின் பிரபாகர் இசை திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளது.

‘இராவண கோட்டம்’ – துணிச்சலான, தேவையான படைப்பு! கண்டு களிக்கலாம்!