ராதிகா மகள் ரேயான் நடத்தும் உலக குறும்பட விழா!

அதிநேர்த்தியான  தயாரிப்பு மற்றும் விநியோக உத்திகளோடு வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் கொடி நாட்டிக் கோலோச்சும் ரேடான் மீடியா வொர்க் நிறுவனம், இப்போது ‘ரேடான் குறும்பட விழா’ மூலம் குறும்படத் துறையிலும்  காலடி எடுத்து வைத்துள்ளது .

இது பற்றி நடிகை ராதிகாவின் மகளும், இக்குறும்பட விழாவை நடத்துபவருமான ரேயான் கூறுகையில், “இந்த குறும்பட விழாவில் கலந்துகொள்ளும் படங்களுக்கான அறிவிப்பு 2015 நவம்பரில் கொடுக்கப்பட்டது . தேசிய அளவில் மற்றும் உலக அளவில் என்று இரண்டு பிரிவுகளின் கீழ் 200க்கும் மேற்பட்ட படங்கள் எங்களுக்கு வந்தன.

அவற்றிலிருந்து 25 படங்கள் முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டன. அவை யூ டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

அவற்றில் மிகச் சிறந்த 10 படங்கள் தேர்வாகி சரத்குமார், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகிய நடுவர்களுக்கு அனுப்பப்பட்டன.  இவர்களுடன் இயக்குனர்கள் பாலாஜி மோகன், கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் ரத்னவேல், எடிட்டர் ஆண்டனி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் இணைந்து தேசிய அளவில் 6 படங்களையும், உலக அளவில் முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு பெறும் படங்களையும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்கள்.

முதல் பரிசு பெற்ற படத்தை உருவாக்கிய படக்குழுவுக்கு இயக்குனர் – ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், ஒளிப்பதிவாளர் அரவிந்த், படத் தொகுப்பாளர் கே.எல்.பிரவீன், நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், மோகன்ராம், வசனகர்த்தா பார்த்திபன் ஆகியோர் இணைந்து, ஒரு நாள் தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறை   நடத்தி சிறப்பித்தார்கள்.

இப்பொழுது  அந்தப் படக்குழுவுக்கு ஒரு புது குறும்படத்தை இயக்கும் பணி  கொடுக்கப்பட்டுள்ளது. அந்த படம் வரும் மார்ச் 9 ஆம் தேதி சத்யம் சினிமாஸ் திரையரங்கில் திரையிடப்பட உள்ளது.

அதன்பிறகு அந்த படக்குழுவுக்கு பணப் பரிசு வழங்கப்பட உள்ளதோடு,  பிரபல நிறுவனங்கள் உருவாக்கும் படத்தில் பணியாற்றும் வாய்ப்பும் வழங்கப்படும். எங்கள் சார்பில் இவர்களை வைத்து எங்கள் நிறுவனம் படம் ஒன்றையும் தயாரிக்கும்.

இதன் மூலம் திரையில் நுழைய போராடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு புதிய வழி பிறக்கிறது என்பது என் கருத்து. அதனால் இது மாதிரி ஒரு விழாவை நடத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார் ரேயான்.