பணம் மாற்றுகிறவர்களின் சாதியை கேட்கும் மோடி அரசு: ஆர்.நல்லகண்ணு கண்டனம்!

செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கொடுத்து, ரூ.2000 வரை செல்லுகிற பணமாக மாற்ற வங்கிக்கு வருகிறவர்கள், கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவம் ஒன்றை நரேந்திர மோடி அரசு / ரிசர்வ் வங்கி தயாரித்து கொடுத்திருக்கிறது. இந்த படிவத்தில் சாதி விவரம் கேட்கப்படுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.நல்லகண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் சனிக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அந்தக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின்போது ஆர்.நல்லக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகவும், கள்ள நோட்டுக்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பிரதமர் கூறுகிறார். இது ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால் புதிய ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டு வராது என்பதற்கும், இனி கருப்பு பணம் உருவாகாது என்பதற்கும் என்ன உத்தரவாதம் உள்ளது?

மேலும், வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றால் அதற்காக கொடுக்கப்படும் விண்ணப்ப படிவத்தில் தாழ்த்தப்பட்டவரா, பிற்படுத்தப்பட்டவரா, மிகவும் பிற்படுத்தப்பட்டவரா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பணம் மாற்றுவதற்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. இதனை ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.

இவ்வாறு நல்லகண்ணு கூறினார்.

இந்தக் கூட்டத்தின்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ”ஜனநாயக நாட்டில் பொதுமக்கள் வாக்களித்து எம்பி மர்றும் எம்எல்ஏக்களை தேர்வு செய்கின்றனர். அதிக இடங்களில் வெற்றி பெறுகிற கட்சியைச் சார்ந்த எம்பிக்கள் பிரதமரை தேர்வு செய்கின்றனர். அப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி, மக்களுக்கு துன்பம் விளைவிக்கிற வகையில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது சர்வாதிகார செயல். இந்திய மக்கள் ஒருபோதும் சர்வாதிகாரத்தை ஏற்க மாட்டார்கள்” என்றார்.