“அதிமுகவையும் தமிழக அரசையும் வசப்படுத்த பாஜக முயற்சி!” – இரா.முத்தரசன்
“டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அச்சுறுத்த டெல்லி தலைமைச் செயலாளர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இதுபோல், தமிழகத்தில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் தன்மையை பயன்படுத்தி அதிமுகவையும், தமிழக அரசையும் பாஜக வசப்படுத்திக்கொள்ள முயல்வது ரகசியமானதல்ல” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த பி.ராமமோகன ராவ் வீடு, அலுவலகம், உறவினர் வீடுகளில் வருமானத் துறையினர் நடத்திய சோதனையில் தங்கம், ரொக்கப் பணம், ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகள் முக்கியமற்ற துறைகளுக்கு அனுப்பி முடக்கப்படுவதும், முக்கியமான துறைகளுக்கு தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் ஏற்கெனவே குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களாக இருப்பதும் தமிழகத்தில் பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளாகும் நடவடிக்கைகளாகும்.
பி.ராமமோகன ராவ் பல பத்தாண்டுகளாக இயற்கை வளக் கொள்ளைக்கு துணைபோனதாக குற்றச்சாட்டுக்கு ஆளானவர். இவர் மீதான புகார்களை உரிய விசாரணை செய்து, குற்றச்செயலுக்கு உடந்தையானவர்களை கண்டறிந்து தண்டிப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நாள் முழுவதும் வங்கி வாயிலில் வரிசையில் நின்று ஒருவர் ரூ.2000 மட்டுமே புதிய ரூபாய் பெறும் நிலையில், கட்டுக்கட்டாக புதிய நோட்டுக்கள் கோடிக்கணக்கில் குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு எப்படி எளிதாக கிடைத்தது, இதில் தொடர்புள்ளோர் யார் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத் துறை போன்ற அமைப்புகள் ஊழல் நடவடிக்கைகளை தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் வெளிப்படையான நோக்கத்தில் அமைந்தால் பாராட்டத்தக்கது. ஆனால், மத்திய அரசின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில ஆட்சியினையும் மாற்றுக் கருத்துக் கொண்டோரையும் அச்சுறுத்தி அடிபணிய வைக்கவும், அடிபணிந்தால் அரவணைத்துப் பாதுகாக்கவுமான கருவிகளாக இத்துறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அச்சுறுத்த டெல்லி தலைமைச் செயலாளர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இதுபோல் தமிழ்நாட்டில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் தன்மையை பயன்படுத்தி அதிமுகவையும், தமிழக அரசையும் பாஜக வசப்படுத்திக் கொள்ள முயல்வது ரகசியமானதல்ல.
தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் உறுதியுடன் பாதுகாக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.