ரா.கி.நகரில் “ஜனநாயக உணர்வு” பொங்கி வழிந்தது: 77.68% வாக்குப்பதிவு!
ஓட்டுக்கு பல்லாயிரக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு, தங்களது “ஜனநாயக கடமை”யை தவறாமல் நிறைவேற்றும் “பொறுப்புள்ள” வாக்காளர்களை அதிக அளவில் கொண்ட சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவை தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இத்தொகுதியின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக 77.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முந்தைய தேர்தல்களில் அதிகபட்சமாக 75% வாக்குகளே பதிவாகியிருக்கின்றன.
இத்தொகுதியில் மொத்தம் உள்ள 2,28,234 வாக்காளர்களில் 1,77,074 பேர் இன்று வாக்களித்தனர். அவர்களில் பெண்கள் – 92,862; ஆண்கள் – 84,195; மற்றவர்கள் – 17. இந்த புள்ளிவிவரப்படி ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்திருப்பதால், பெண்களுக்குத் தான் “ஜனநாயக உணர்வு” அதிகம் இருக்கிறது என்று உறுதியாகக் கூறலாம்!
இந்த தேர்தலில் மதுசூதனன் (அதிமுக), மருது கணேஷ் (திமுக), தினகரன் (சுயேச்சை), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி), கரு.நாகராஜன் (பாஜக) உட்பட 59 பேர் போட்டியிடுகின்றனர். வருகிற 24ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்போது, எந்த வேட்பாளர் வாரி.இறைத்த பணத்துக்கு பலன் கிடைத்திருக்கிறது என்பது தெரிய வரும்!