சமூகம் ஒரே ஷாட்டில் மாற வேண்டும் என்று ரஞ்சித் நினைக்கிறாரா?
ஆம்ஸ்ட்ராங் இரங்கல் கூட்டத்தில் ரஞ்சித் பேசியதில் “சென்னையை எங்களைத் தாண்டி ஆள முடியாது” என்னும் வாதத்தை விமர்சனமாக சொல்கிறார்கள். அது விமர்சிக்க வேண்டிய புள்ளி தான். அதைத் தாண்டியுமே எனக்கு பல்வேறு விமர்சனங்கள் உண்டு.
முதலில் திருமாவை எதிர்நிலையில் நிறுத்துகிறார். திருமா என்னும் அண்ணனை வைத்தே அவரை பட்டியலின மக்களுக்கு எதிர்திசையில் நிறுத்துகிறதாம் திராவிடம் . திருமா என்ன கை குழந்தையா? இவர் என்ன திருமாவை விட அனுபவம் வாய்ந்தவரா? எத்தனை போராட்டங்களை ரஞ்சித் முன்னெடுத்திருக்கிறார் ?
இப்போது இரங்கல் கூட்டம் கூட்டலாம். ஆனால் அனைத்து விடயங்களும் விசாரணைபடி தானே செல்கிறது. அதற்குள் எதற்கு இவ்வளவு பெரிய வெறுப்பு பேச்சு? விசாரணை எப்படி சினிமாவைப் போல ஒரே நாளில் நடந்துவிடுமா? திமுக ஆட்சியிலிருந்தால் கூட திமுகக்காரர் ஒருவரும் கூட குற்றம் சாட்டப்பட்டுள்ளார் தானே? திராவிட கட்சிகளுக்கு சமூக நீதி வகுப்பெடுப்பது ஆகட்டும், பாஜக பற்றி ரஞ்சித் ஏன் பேசவில்லை?
ஆருத்ரா பற்றி ஏன் ரஞ்சித் பேசவில்லை ? அண்ணாமலை பெயர், அமர் பிரசாத் ரெட்டி பெயரையெல்லாம் ஏன் சொல்லவில்லை? திமுக பற்றி கேள்வி கேளுங்கள், அவர்களை விட பாஜக பெயர் நேரடியாக அடிபடுகிறதே அவர்களை ரஞ்சித் பேச்சில் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. பச்சைக்கிளி என்ற பெயரே வரவில்லையே.
திமுக மீது ரஞ்சித் கேள்வி கேட்க வேண்டும், யாரும் கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால் கேள்வியின் திசையை பற்றிய சந்தேகங்கள் உள்ளது. பாஜக, ஆருத்ரா முக்கிய தலைகளை ஏன் இன்னும் வழக்கிற்குள் கொண்டு வரவில்லை, திமுக பயப்படுகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தால் ரஞ்சித் பேசுவதை யோக்கியன் சொல்கிறார் என்று ஒத்துக்கொள்ள முடியும். இப்போது பாஜக பற்றி கேள்வி இல்லை. ஆருத்ரா பற்றி கேள்வி இல்லை. ஆனால் திமுக மீதும் கம்யூனிஸ்ட் மீதும் கேள்விகள் உண்டென்றால் B டீம் தானே ரஞ்சித்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கை எப்போதாவது கவனிக்கும் எனக்கே இதில் ஆருத்ராவுடன் தொடர்பானது என்று புரிகிறது, ரஞ்சித்துக்கு புரியவில்லையா? இதை ரஞ்சித்ஸ்ட்கள் விளக்க வேண்டும்.
இதில் இன்னொரு விடயமும் உண்டு. பௌத்த விஹார் கோணத்தில் போலீஸ் விசாரிக்க வேண்டுமாம். போலீஸ் எந்த கோணத்தில் விசாரணை செய்ய வேண்டும் என்று திரைக்கதையை மாற்றுவதேன்? மாட்டிய பலர் பாஜக தான், அண்ணாமலையை காப்பாற்றுகிறாரா ரஞ்சித்? முன்பெல்லாம் ரஞ்சித் பேச்சுக்களில் ஒரு நேர்மை இருக்கும். சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் அந்த நேர்மை ரஞ்சித்தை மிகப் பெரிய கலைஞன் ஆக்கியது .
போன வாரம் கூட நண்பர் ஒருவர், அவருக்கு fund வருகிறது என்று சொல்ல, இல்லை தல, ரஞ்சித் அசல் கலைஞன் என்று வாதடி இருக்கிறேன். முன்ன பின்ன கருத்துக்கள் இருக்கலாம். ஆனாலும் உண்மையான கலைஞன் என்று வாதிட்டேன். ஏன் இதை சொல்ல வேண்டியதாக இருக்கிறதென்றால் நாம் ரஞ்சித் வெறுப்பாளர் என்று சொல்லிவிடக் கூடாதல்லவா? இங்கு அண்ணல் அம்பேத்கரை கூட கேள்விக்குட்படுத்த முடியும்; ரஞ்சித் தோழரை கேள்விக்குட்படுத்துவது கடினம்.
ஆம்ஸ்ட்ராங் இறுதி சடங்கின்போது அவர் உடலை வீட்டில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்னும் குற்றச்சாட்டும் உள்ளது. தெரு குறுகலாக இருப்பதால் நெருக்கடியாகலாம் என்று தான் அரசு அங்கு மறுத்திருக்கிறது. அதுவும் நேரடியாக மறுக்காமல் நீதிமன்றத்தை அணுக சொல்லியிருக்கிறது, இந்த வழக்கை திமுக அரசு வேகமாக நடத்திக் கொடுத்தது என்று ஆம்ஸ்ட்ராங் குடும்பம் சொல்கிறார்கள், அவர் வழக்கறிஞர் சொல்கிறார். ரஞ்சித்துக்கு என்ன பிரச்சினை? இட நெருக்கடி தான் அங்கு அடக்கம் செய்ய இடம் கொடுக்கவில்லை. அவ்வளவு தான்.
ரஞ்சித் செல்லமாக நாங்க எல்லாரும் சேர்ந்து வன்முறைல இறங்கினா என்று பயமுறுத்துகிறார். அதேபோல அம்பேத்கர் பிள்ளை என்று சொல்லிக்கொண்டே பட்டியலின மக்களை தனிமைப்படுத்தும் வேலையை செய்துகொண்டே இருக்கிறார். இதற்கு திருமா தோழர் ஒரு விளக்கம் கொடுத்திருப்பார். அம்பேத்கர் என்ன சொன்னார், தலித் மக்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட மக்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பொது சமூகத்துடன் கலக்க வேண்டும். அதற்கு வேலை செய்ய வேண்டுமென்றே அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். அதை திருமா ஒரு பேட்டியில் சொல்வார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை பட்டியலின மக்களை ஒடுக்கும் செயல் என்ற கோணத்தில் ரஞ்சித் பேசுகிறார். இது தலித் படுகொலை அல்ல . படுகொலை செய்யப்பட்டவர் தலித் என்பதாலேயே தலித் படுகொலை என்றாகி விடுமா ? தலித் என்பதால் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்படவில்லை, ஆருத்ரா விடயத்தில் கேள்வி கேட்டதால் கொல்லப்பட்டிருக்கிறார். அதைத் தாண்டி ரியல் எஸ்டேட் அதில் இவர் கை பெரிய கை என்கிறார்கள், அவர் நிறைய மக்களை படிக்க வைத்திருக்கலாம், எப்படி இத்தனை சொத்துக்கள், செல்வாக்கு? எதற்கு இத்தாலிய துப்பாக்கி? அவர் டான். என்ன… கொஞ்சம் நல்ல டான், அவ்வளவே.
சரி, கொலை செய்தவர்களும் அதே community யை சேர்ந்தர்வர்கள் தான். இதை எப்படி தலித் ஒடுக்கப்படுவதாக புரிந்துகொள்வது? இது ஒரு கொலை, அவ்வளவே. தலித் கொலையோ, இல்லை அரசியல் படுகொலையோ அல்ல. இது எப்படி தலித் கொலையானது என்பதை ரஞ்சிதிஸ்டுகள் விளக்க வேண்டும்.
சமூகம் ஒரே ஷாட்டில் மாற வேண்டும் என்று ரஞ்சித் நினைக்கிறாரா? நீதிக்கட்சி சென்றார்களாம், தீர்வு கிடைக்கவில்லையாம். அப்படியே திமுக, அதிமுக வரை வந்துவிட்டார். அதெல்லாம் சரிதான். அம்பேத்கர் வாழ்ந்த காலகட்டத்தில் அவர் சொன்ன தனித்தொகுதி, அதாவது புனா ஒப்பந்தம் தனித்தொகுதி அது என்ன ஆனது? அம்பேத்கர் காந்தியால் தோற்கடிக்கப்பட்டார். புனா ஒப்பந்தம் ரஞ்சித்ஸ்ட்டுகளுக்கு தெரியுமென்று நினைக்கிறேன்.
அம்பேத்கர் அறிவில் செறிவடைந்தவர் தானே? எதனால் அவரால் புரட்சி செய்ய முடியவில்லை? அம்பேத்கரால் கொண்டு வர முடியாத மாற்றத்தை எப்படி நீதிக்கட்சியால், திமுகவால் கொண்டு வர முடியும்?
அரசியலென்பது கோட்பாடு அடிப்படையில் ஒரு process. சமூகம் சிறுகச் சிறுகத்தான் மாறும். அது சினிமா போல இரண்டரை மணி நேரத்தில் முடிவதல்ல.
இங்கு ஏன் ஆணவக்கொலைகள் நடக்கிறது? வடக்கில் காதலிக்கவே பயப்படுவார்கள். இங்கு ஆதிக்க சாதி பெண்கள் காதலிக்கப்படுகிறார்கள். பட்டியலின வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுகிறது. அதனால் தான் இங்கு ஆணவக்கொலைகள் நடக்கிறது. புள்ளிவிவரத்தில் ஆணவக்கொலைகளில் தமிழகம் முதலிடம். ஆனால் கூர்ந்து பார்த்தால் ஆதிக்க சாதிக்கு எதிராக பட்டியலின மக்களின் குரல் மராட்டியத்தில் ஒலிக்கவில்லை. தமிழகத்திலேயே தான் ஒலிக்கிறது. இங்கு பட்டியலின மக்கள் வாழ்வியல் படிப்பின் மூலமாக மேம்பட்டிருக்கிறது. வாழ்க்கை மாறியிருக்கிறது. ஒரே நாளில் மாறாது. ஆனால் படிப்படியாக மாற்றங்கள் அதிகமிருக்கிறது .
ஆணவக்கொலையை கடுமையாக எதிர்க்க வேண்டும், சட்டமாக்க வேண்டும். ஆணவக்கொலைகளுக்கு எதிராக சட்டமியற்றுவதற்கு தொடர்பாக கோவையில் அனைத்து கட்சி அமைப்புகள் கூட்டத்துக்கு சென்றிருந்தேன், தோழர் கௌசல்யா தலைமையில் நடந்தது. அதில் பலரும் பல்வேறு கோணத்தில் பேசினார்கள். எழுத்தாளர் ச.பாலமுருகன் pucl அமைப்பை சேர்ந்தவர், சமூக செயல்பாட்டாளர், வழக்குரைஞர். பழைய சட்டமே போதுமானது, அதை சரியாக அமல்படுத்தினாலே சரியாக இருக்கும் என்று புள்ளிவிவரங்களுடன் சொன்னார்.
களத்தில் சட்டங்கள் எல்லாம் இருக்கிறது. அதை செயல்படுத்துவதில்லை என்பதை case history உடன் விளக்கிப் பேசினார். அதை சரியாக நடைமுறைப்படுத்த அரசை நிர்பந்திக்க வேண்டுமென்று சொன்னார்.
அவரின் வாதம் வெறும் கூச்சலாக இல்லை, அறிவியல்பூர்வமாக விவாதிக்கும்படி இருந்தது. தோழர் எழுத்தாளர் என்பதைத் தாண்டி மனித உரிமை செயல்பாட்டாளர். அவர் மக்களுடன் வேலை செய்ததால் தான் “சோளகர் தொட்டி” என்னும் பெரும்படைப்பு நமக்கு கிடைத்தது. அவருக்கு எப்படி இத்தனை நுணுக்கமான விடயங்கள் புலப்படுகிறது? மக்களுடன் போராட்ட களத்தில் நிற்கிறார், வழக்குகளை நடத்துகிறார். நடைமுறை தெரிகிறது. ரஞ்சித் இப்படி எத்தனை போராட்டங்களை முன்னெடுத்திருப்பார்? எத்தனை வழக்குகளை நடத்தியிருப்பார்? ஒரு குடிமகனாக கேள்வி கேட்பதென்பது வேறு; ஆனால் திராவிடத்துக்கு வகுப்பெடுக்கிறேன், திருமாவுக்கு வகுப்பெடுக்கிறேன் என்னும்போது களத்தில் எத்தனை கோணத்தில் போராட்டங்கள் மற்றும் அறிவுச்சமூகம் இயங்குகிறது என்பதை ரஞ்சித் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?
ஒரு சட்டமியற்றப்படுகிறதென்றால் அதை பல கோணத்தில் அறிவுத்துறையினர் விவாதிப்பார்கள். அதற்குப்பின்னே பல போராட்டங்களை தாண்டியே சட்டமியற்றப்படும். ஜீ பூம் பா என்று சொல்வதைப்போல ஒரே பாடலில் மாறிவிடுமா? அது சினிமாவில் மட்டுமே சாத்தியம்.
போகிற போக்கில், யாருமே எதுவுமே செய்யவில்லை, கம்யூனிஸ்ட் உட்பட என்று சொல்கிறார் ரஞ்சித். நான் இப்போது ஆவணப்படம் தூய்மை பணியாளர்கள் பற்றி எடுத்துக்கொண்டிருக்கிறேன். கேரளத்தில் மலக்குழியில் இறங்குவதற்கு ரோபோட் பயன்படுத்துகிறார்கள். கொண்டு வந்தது பிரணாய் விஜயனாம். நேற்று முன்தினம் கூட மலக்குழி மரணங்கள். இதை எப்படி நவீனப்படுத்துவது, எப்படி இன்ஜினியரிங் போன்ற கல்வித்துறையில் IIT போன்றவற்றில் மலக்குழியில் இறங்குவதற்கு நவீனத்தை பயன்படுத்த course கள் கொண்டு வருவதற்கு அனைத்து கட்சி போராட்டத்தை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்தது கம்யூனிஸ்ட் கட்சி. என் ஆவணப்படத்துக்காக அதை கவர் செய்துள்ளோம். அதிலெல்லாம் நீலம் பண்பாட்டு மய்யம் கலந்துகொள்வதே இல்லையே.
ஆம்ஸ்ட்ராங் மரணத்தை வைத்து அரசியல் செய்யும் திமுகவை எச்சரிக்கும் ரஞ்சித் எத்தனை போராட்டங்களை கம்யூனிஸ்ட்கள் போல செய்திருப்பார்? ரப்பர் பந்து மட்டுமே விளையாடும் கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கரை அடுத்த மேட்ச் century அடிக்கவில்லை என்றால் நீக்கிவிடுவோம் என்று மிரட்டினால் எப்படி இருக்கும், அதைப்போல இருக்கிறது ரஞ்சித் பேச்சு.
வேங்கை வயல் பற்றி நிறைய conspiracy theory வெளியில் ஓடிக்கொண்டிருக்கிறது. வேங்கை வயல் விடயத்தில் திமுகவுக்கு எதிராக கூட்டம் போட்டு போராட்டம் நடத்தலாமே ரஞ்சித். விடுதலை சிறுத்தைகள் போராட்டம் நடத்தியது. கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங் போராட்டம் நடத்தியிருக்கலாமே. ஏன் வட சென்னையை தாண்டி ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கட்சியை வளர்க்கவில்லை? வேங்கை வயல் பிரச்சினைக்கு ஒரு மாநிலத் தலைவராக போராட்டம் நடத்தியிருக்கலாமே?
இங்கு கோவையில் அருந்ததி இன கட்சிகள் நிறைய உண்டு. இங்கு பட்டியலின மக்களுக்கு ஊர்ப்பட்ட பிரச்சினைகள். இங்கு ஆதி தமிழர் பேரவை, திராவிட தமிழர் கட்சி, தமிழ் புலிகள் என்று அருந்ததி இன மக்களுக்கு வேலை செய்யும், அவர்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் கட்சிகள் உண்டு.
இதில் cpm சில நேரம் தலைமை தாங்கும், cpiml சில கூட்டங்கள் நடத்தும். அதைத் தாண்டி கு.ராமகிருட்டினன் தந்தை பெரியார் திராவிட கழகம். இதில் யார் நடத்தினாலும் மற்றவர்களும் கலந்து கொள்கிறார்கள், பேசுகிறார்கள். எல்லாரும் இணைந்தே அரசியல் செய்கிறார்கள். மக்களுக்காக நிற்கிறார்கள். அதை இங்கு நேரடி கள அனுபவத்தில் புரிந்தது. ரஞ்சித் இப்படி inclusive ஆக அரசியல் செய்வாரா? சும்மா ஒரு அரை மணி நேரம் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால கள எதார்த்தம்…?
இந்த அருந்ததி இன தலைவர்களிடம் நேரடியாக பேசும்போது திமுகவிடம் தான் சில விடயங்களை உரிமையாக கேட்க முடியுமென்கிறார்கள். அவர்கள் மக்களுக்காக போராடுபவர்கள், அந்தத் தலைவர்கள் தான் கோவையின் முகம். அவர்கள் அடிக்கடி சிறை செல்பவர்கள். அவர்கள் பாஜகவையோ, அதிமுகவையோ சொல்லவில்லை.
இதில் திமுக செய்ய முடியாத, விமர்சிக்க வேண்டிய புள்ளிகளும் உண்டு. எங்கள் ஆவணப்படத்தில் உக்கடம் வாழ்வியல் பற்றி ஒரு சித்திரம் வைத்திருக்கிறோம். கண்டிப்பாக நேரடியாக திமுக மீது விமர்சனம் தான். அதை பதிவு செய்திருக்கிறோம். குடியிருப்புகள் தூய்மை பணியாளருக்கு கொடுக்காத பிரச்சினை.
பகுஜன் கட்சி இதை முன்னெடுத்திருக்கிறதா? இல்லை, நீலம் தான் முன்னெடுத்திருக்கிறதா? இந்த போராட்டத்தை இங்கிருக்கும் அருந்ததி இன அமைப்பினர் செய்கிறார்கள். அதே நேரம் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் நிற்கிறது.
செய்ய முடியாத இடங்களில், விமர்சிக்க வேண்டிய இடங்களில் விமர்சிக்காமல், தனக்குத் தெரிந்த அண்ணன் கொலை செய்யப்பட்டால் மட்டும் தான் ரஞ்சித் பேசுவாரா??
-தோழர் கார்த்திக்