திரைப்படம் தொடங்கும் முன் அதிக விளம்பரம்: பிவிஆர் ஐநாக்ஸ் தியேட்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

திரைப்படம் தொடங்குவதற்கு முன் அதிக விளம்பரங்களை காட்டி பெங்களூரு இளைஞரின் 25 நிமிட நேரத்தை வீணடித்ததற்காக அவருக்கு ரூ.65,000 இழப்பீடு வழங்கவும் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்தவும் பிவிஆர்- ஐநாக்ஸ் தியேட்டருக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள பிவிஆர்-ஐநாக்ஸ் தியேட்டருக்கு எம்.ஆர்.அபிஷேக் என்ற இளைஞர் கடந்த 2023, டிசம்பர் 26-ம் தேதி திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். விக்கி கவுஷல் நடித்த சாம் பகதூர் படத்துக்கு மாலை 4.05 மணி காட்சிக்கு அபிஷேக் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் 4.28 மணி வரை தியேட்டரில் ட்ரெய்லர் மற்றும் வணிக விளம்பரம் திரையிடப்பட்டுள்ளது. 4.30 மணி வரை திரைப்படம் தொடங்கப்பவில்லை.
இதனால் அந்தக் காட்சிக்கு பிறகு திட்டமிடப்பட்டிருந்த பணிகள் பாதிக்கப்பட்டதாக கூறி பிவிஆர்-ஐநாக்ஸ் மற்றும் புக்மைஷோ-வுக்கு எதிராக பெங்களூரு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அபிஷேக் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் முறையற்ற வர்த்தக நடைமுறை மற்றும் மனுதாரரின் நேரத்தை வீணடித்ததற்காக ரூ.50,000, அவரது மன உளைச்சலுக்கு ரூ.5,000 மற்றும் வழக்கு உள்ளிட்ட பிற செலவுகளுக்கு ரூ.10,000 என மனுதாரருக்கு மொத்தம் ரூ.65,000 இழப்பீடு வழங்க பிவிஆர் சினிமாஸ் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.
இது தொடர்பான உத்தரவில், “நேரம் பணமாக கருதப்படுகிறது. மற்றவர்களின் நேரத்தையும் பணத்தையும் பயன்படுத்தி பயனடைய யாருக்கும் உரிமை இல்லை. வெறுமனே உட்கார்ந்து செலவிட 25-30 நிமிட நேரம் என்பது குறைவானதல்ல” என்று கூறியுள்ளது.
விளம்பரங்கள் மீதான கட்டுப்பாடு புக்மைஷோ-வுக்கு இல்லாததாலும் அது வெறும் முன்பதிவு தளம் மட்டுமே என்பதாலும் அதனை வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்தது. மேலும் நுகர்வோர் நல நிதிக்காக பிவிஆர்-ஐநாக்ஸ் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்யவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.