புஷ்பா 2 – விமர்சனம்
நடிப்பு: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில், ஸ்ரீலீலா, ராவ் ரமேஷ், சுனில், அனுசுயா பரத்வாஜ் மற்றும் பலர்
இயக்கம்: சுகுமார்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ்
தயாரிப்பாளர்: நவீன் எர்னேனி & ஒய்.ரவிசங்கர்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்
2021ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியாகி நாடு முழுவதும் பேசப்பட்ட திரைப்படம் ‘புஷ்பா 1’. இது தான் ‘பாகுபலி’க்குப் பிறகு, தெலுங்கு சினிமா உலகளவில் பேசப்பட்டு, கொண்டாடப்படுவதற்கு காரணமாக இருந்தது. அல்லு அர்ஜுனின் மேனரிசம், பஞ்ச் டயலாக்குகள், மாஸ் சீன்கள், சமந்தா தோன்றிய ‘ஊ சொல்றியா’ பாடல் – ஆடல், செம்மர கடத்தல் பின்னணி, வில்லனாக ஃபகத் ஃபாசில் என பக்கா கமர்ஷியல் மசாலா எண்டர்டெயினராக உருவாகி, மாபெரும் வெற்றியையும், அமோக வசூலையும் வாரிக் குவித்தது. அது திரைத்துறையினர், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அடுத்தடுத்த பாகங்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது – மூன்று ஆண்டுகள் கழித்து – ‘புஷ்பா 2 தி ரூல்’ என்ற பெயரில் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. ஏற்பட்டுள்ள மிகப் பெரிய எதிர்பார்ப்பை இது பூர்த்தி செய்கிறதா? முதல் பாகம் போல் மாபெரும் வெற்றி பெறுமா? பார்ப்போம்…
முதல் பாகம் முழுக்க தனக்கென அடையாளம் இல்லாதவராக, ’செம்மரம் வெட்டி கடத்தல் செய்யும் கும்பலில் கூலியாளாக வேலைக்குச் செல்லும் புஷ்பராஜ் (அல்லு அர்ஜுன்), தன்னுடைய சாதுரியத்தாலும் சாமர்த்தியத்தாலும் செம்மரக் கடத்தல் தொழிலின் சிம்மாசனத்தில் ஏறி எப்படி தாதாவாக மாறுகிறார் என்பதைச் சொல்லிருப்பார்கள். மொத்தத்தில் புஷ்பராஜின் எழுச்சியே முதல் பாகம். ஆந்திர அரசியலையே மாற்றும் புஷ்பாவின் அதிகாரத்தின் உச்சம் என்ன? ஐ.பி.எஸ் அதிகாரியும், போலீஸ் சூப்பிரண்டுமான பன்வர் சிங் செகாவத்துக்கும் (ஃபகத் ஃபாசில்) புஷ்பாவுக்குமான பகை என்ன ஆனது? தன் அண்ணன் குடும்பத்துடன் சேர வேண்டும் என்ற புஷ்பாவின் ஏக்கம் நிறைவேறியதா? ஆகியவை தான் இரண்டாம் பாகம்.
ஜப்பான் துறைமுகத்தில் இந்த இரண்டாம் பாகம் ஆரம்பமாகிறது. செம்மரக் கட்டைகள் நிறைந்த கண்டெய்னரில் பதுங்கியபடி ஜப்பான் சென்று சேரும் நாயகன் புஷ்பராஜ் அங்கு தனக்குத் தரவேண்டிய பணத்தைத் தராமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த மாஃபியாவை அடித்து துவைத்து துவம்சம் செய்கிறார். ஆந்திர மாநிலம் சித்தூர் சேஷாசலம் காடுகளில் செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கான சிண்டிகேட்டுக்குத் தலைவராக இருக்கும் அவர், 2 ஆயிரம் டன் செம்மரம் வழங்குவதற்கான டீலை முடிக்கிறார்.
தனது தொழில் எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டி செம்மரக் கடத்தலில் தனிக்காட்டு ராஜாவாக திகழும் புஷ்பாவால் தனக்கு நேர்ந்த அவமானத்தை தாங்க முடியாமல் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார் போலீஸ் அதிகாரி பன்வர் சிங் ஷெகாவத். புஷ்பாவின் ஆட்டத்தை ஒடுக்குவதற்காக அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் அவர், தானும் ஒரு கூலியாக காட்டுக்குள் சென்று புஷ்பாவின் ஆட்களை கைது செய்கிறார். தனது ஆட்கள் மீது அத்துமீறியதால் போலீஸ் நிலையத்தில் இருக்கும் அத்தனை போலீசாருக்கும் செட்டில்மெண்ட் கொடுத்து ராஜினாமா செய்ய வைக்கும் புஷ்பா மீது கொலைவெறியுடன் பாயும் செகாவத், தன்னிடம் புஷ்பா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குமுறுகிறார்.
முன்னதாக, தன் ஆசை கணவர் புஷ்பா ஆந்திர மாநில முதலமைச்சருடன் (ஆடுகளம் நரேன்) சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும், அதனை தங்கள் வீட்டில் மாட்டிப் பெருமைப்பட வேண்டும் என்பதும் காதல் மனைவி ஶ்ரீவள்ளி (ராஷ்மிகா மந்தனா) ஆசை. முதலமைச்சருக்கு நிறைய நன்கொடைகள் ஏற்கெனவே கொடுத்திருப்பதால், அவருடன் சேர்ந்து ஒரு போட்டோ எடுப்பது சாதாரண விஷயம் என நினைக்கிறார் புஷ்பா . ஆனால் தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பும் புஷ்பா ஒரு செம்மரக் கடத்தல்காரன் என்பதால் அவரது போட்டோ கோரிக்கைக்கு முதலமைச்சர் மறுப்புத் தெரிவிக்கிறார். இதனால் சூடாகி கோபமடையும் புஷ்பா, தற்போதைய முதலமைச்சரை பதவியிலிருந்து இறக்கி, தன்னுடன் போட்டோ எடுக்கத் தயாராக இருப்பவரும், தன்னுடைய நெருங்கிய நட்பில் உள்ளவருமான எம்.பி சித்தப்பாவை (ராவ் ரமேஷ்) முதலமைச்சர் ஆக்குவதாக சபதம் ஏற்கிறார்.
புஷ்பாவின் சபதம் நிறைவேறியதா? போலீஸ் அதிகாரி ஷெகாவத்துக்கும் புஷ்பாவுக்கும் இடையிலான பகை தீர்ந்ததா? ஒன்றிய அமைச்சருக்கும் (ஜெகபதி பாபு), புஷ்பாவுக்கும் என்ன பிரச்சனை? புஷ்பாவின் அண்ணனின் மகள் திருமணத்தில் குண்டு வெடித்ததில் புஷ்பாவும், அவரது கர்ப்பிணி மனைவி ஸ்ரீவள்ளியும் என்ன ஆனார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு பரபரப்பாக பதில் அளிப்பது தான் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் புஷ்பா என்ற புஷ்பராஜாக அல்லு அர்ஜுன் நடித்திருக்கிறார். செம ஸ்டைலாக, செம மாஸாக திரை முழுக்க நிரம்பியிருக்கிறார். ஒற்றைத் தோளைத் தூக்கியபடியே இருக்கும் அவரது உடல் மொழி, ‘அடங்காதவன்டா’ எனத் தாடியை மணிக்கட்டால் நீவிக்கொடுக்கும் மேனரிஸம், அனல் பறக்கும் பன்ச் வசனங்கள், அசத்தலான டான்ஸ், ஆர்ப்பரிக்கும் ஸ்டன்ட் எனப் படம் முழுக்க அல்லு அர்ஜுனின் அதகளம் தான். ரொமான்ஸ், எமோஷன், ஆக்ரோஷம், மாஸ் என அனைத்து உணர்ச்சிகளையும் பார்வையாளர்களுக்கு துல்லியமாக கடத்தியிருக்கிறார். பேன் இந்தியன் ஸ்டாராக தாண்டவமே ஆடியிருக்கிறார்.
நாயகனின் மனைவி ஶ்ரீவள்ளியாக ராஷ்மிகா மந்தனா ரசிக்க வைக்கிறார். ஊரையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் புஷ்பாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனைவி பாத்திரம். பட்டையைக் கிளப்பியிருக்கிறார். “புஷ்பானா பேர் இல்ல; ப்ராண்டு” என்று அவர் தன் கணவனுக்காகப் பேசும் இடம் சூப்பர். பாராட்டுகள் ராஷ்மிகா.
போலீஸ் சூப்பிரண்டு பன்வர் சிங் ஷெகாவத் ஆக வரும் ஃபகத் ஃபாசில் பாயும் புலியாக பல காட்சிகளில் விஸ்வரூபம் எடுத்துள்ளார். நாயகனைப் பழி வாங்க அவர் செய்யும் காரியங்கள், ஆர்ப்பரிப்பான நடிப்பு – திரில்லர் ரகம்.
‘கிஸ் கிஸ் கிஸுக்கு’ பாடலுக்கு நாயகனுடன் நடனம் ஆடும் ஶ்ரீலீலா கவர்ச்சியில் கிறங்க வைக்கிறார்.
சுனில், அனுசுயா பரத்வாஜ், ஜெகபதி பாபு, பிரம்மாஜி, ராவ் ரமேஷ், அஜய், ஆடுகளம் நரேன், ஜகதீஷ் பிரதாப் பண்டாரி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை மூலம் கவனம் ஈர்க்கும் இயக்குநர் சுகுமார், முதல் பாகத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்த அம்சங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் ஆங்காங்கே தூவிவிட்டிருப்பதோடு, இந்த முறை பிரமாண்டத்தையும் கையிலெடுத்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் திரை முழுக்க அத்தனை நபர்கள் நிறைந்திருக்கிறார்கள். புஷ்பாவின் மாஸ் மொமன்டுகளை எழுதிய விதமும் அதைக் காட்சிப்படுத்திய விதமும் பக்கா தெலுங்கு சினிமா மசாலா சரக்கு!
மதன் கார்க்கியின் வசனங்கள் பல இடங்களில் தம்ஸ் அப் காட்ட வைக்கின்றன. உதாரணத்திற்கு, ஹெலிக்காப்டரில் புஷ்பா போகும்போது பேசும் வசனம்.
மிரோஸ்லாவ் குபா புரோசிக்கின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். அதிரடி ஆக்ஷன் காட்சிகளை காமிரா சுழன்று சுழன்று அட்டகாசமாக படம் பிடித்திருக்கிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையும், சாம் சி.எஸ். பின்னணி இசையும் கதைக்கும் காட்சிகளுக்கும் வலு சேர்த்துள்ளன.
திரைக்கதையை தன் எடிட்டிங் மூலம் வேகமூட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் நவீன் நூலி. நாயகன் தொடங்கி எல்லா கதாபாத்திரத்திற்கும் தீபாலி நூரின் ஆடை வடிவமைப்பு கவனிக்க வைக்கிறது.
’புஷ்பா 2’ – எந்த லாஜிக்கும் பார்க்காமல் பக்கா கமர்ஷியல் படம் பார்க்க விரும்புவோருக்கு நிச்சயமாக பிடிக்கும். அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு ராஜபோக விருந்து!