மக்களை ஏமாற்றும் விளம்பரங்களில் நடித்தால் தண்டனை!

தவறான விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் விளம்பர தூதர்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

விளம்பரங்களில் தவறான தகவல்களை தெரிவித்து நடிக்கும் தூதர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு, பல்வேறு பரிந்துரைகளை மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. பரிந்துரை அடிப்படையில், வரைவு சட்ட மசோதா தயார் செய்யப்பட்டு சட்ட அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு வரும் குளிர்கால கூட்டத் தொடரில் மசோதா அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய மசோதா, விளம்பரங்களில் தவறான தகவல்களை தெரிவிப்போருக்கு 2 வருட சிறையும், 10 லட்சம் அபராதமும் விதிக்க வழிவகை செய்கிறது. மீண்டும் அதே தவறு செய்தால் 5 ஆண்டு சிறையும், 50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இந்த மசோதாவின்படி தரமற்ற பொருட்களுக்கு தயாரிப்பாளர் மட்டுமல்லாமல் விளம்பர தூதர்களும் சட்டப்படி பொறுப்பேற்க வேண்டும்.