‘அமரன்’ தமிழ் சினிமாவின் பெருமை: தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா!
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தன்னுடைய பாராட்டையும் மகிழ்ச்சியையும் வெளிபடுத்தியுள்ளார்:
“‘அமரன்’ படத்தை மும்பையில் பார்த்தேன். தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். அந்த அளவிற்கு இந்தத் திரைப்படம் என்னை உணர்வுபூர்வமாக தாக்கியுள்ளது. அசோக் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையின் வீரம் மற்றும் துணிச்சலை எழுத்தாளர்-இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி திரையில் மிகவும் திறம்பட கொண்டு வந்துள்ளார்.
படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் அவ்வளவு ஆராய்ச்சி மற்றும் நம்பகத் தன்மையுடன் பார்வையாளர்களுக்குக் கொடுத்திருக்கிறார். இப்படத்தை மிகவும் நம்பகத் தன்மையுடன் நிஜ லொகேஷனில் தயாரித்தமைக்காக இந்தியாவின் பெருமை லெஜண்ட் கமல்ஹாசன் சார், இணை தயாரிப்பாளர் மகேந்திரன் சார் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஆகியோருக்கு எங்களின் வாழ்த்துக்களும் பெருமைகளும்!
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்தப் படம் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு உண்மையான அஞ்சலியாக தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் ஒன்றாக எப்போதும் நினைவுகூரப்படும். ’அமரன்’ தமிழ் சினிமாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் பெருமைப்படுத்துவார்.
பல எமோஷனல் தருணங்களுடன் உருவாகியுள்ள இந்த பயோபிக் அனைத்து இந்திய வீரர்களையும் பெருமை கொள்ள வைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.