”இந்தியில் 3500 திரையரங்குகளில் வெளியாகிறது சூர்யாவின் ‘கங்குவா’!” – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதுவரை 2 டீஸர்கள், ஒரு பாடல் மட்டுமே வெளியாகியுள்ளது. இதர விளம்பர பணிகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

இந்நிலையில், எக்ஸ் தளத்தில் சூர்யா ரசிகர்களுடன் கலந்துரையாடினார் ‘கங்குவா’ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. அப்போது அவர் கூறியதாவது:

‘கங்குவா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் நவம்பர் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் சீனா மற்றும் ஜப்பான் மொழிகளில் சில வாரங்கள் கழித்து வெளியாகும்.

தமிழில் மட்டுமே சூர்யா டப்பிங் பேசியிருக்கிறார். இதர மொழிகளில் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கி இருக்கிறோம்.

அடுத்த வரும் நாட்களில் தினமும் ‘கங்குவா’ அப்டேட் இருக்கும்.

தமிழ்நாடு தவிர்த்து இதர மாநிலங்கள் அனைத்திலும் காலை 4 மணி காட்சி இருக்கும்.

விரைவில் வரவுள்ள ட்ரெய்லரில் தற்கால காட்சிகள் இடம்பெறும்.

3டியில் படம் தயாராகி வருகிறது. அதன் மாற்றத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே பாக்கி இருக்கிறது.

ஐமேக்ஸ் திரையரங்கில் ‘கங்குவா’ வெளியீடு இருக்காது.

இந்தியில் மட்டுமே சுமார் 3500 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.