பிரேமலு – விமர்சனம்

நடிப்பு: நஸ்லென், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன், அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், அல்தாஃப் சலீம், ஷமீர் கான் மற்றும் பலர்

இயக்கம்: கிரிஷ் ஏ.டி

ஒளிப்பதிவு: அஜ்மல் சாபு

படத்தொகுப்பு: ஆகாஷ் ஜோசப் வர்கீஸ்

இசை: விஷ்ணு விஜய்

தயாரிப்பு: பாவனா ஸ்டூடியோஸ்

தயாரிப்பாளர்கள்: ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன்

தமிழ்நாடு வெளியீடு: ரெட் ஜெயண்ட் மூவிஸ்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)

’பிரேமலு’ என்ற தெலுங்குச் சொல்லுக்கு ‘காதல்கள்’ என்பது பொருளாம். (அதாவது, ‘பிரேமம்’ என்றால் ’காதல்’. ’பிரேமலு’ என்றால் ‘காதல்கள்’; ஒன்றுக்கு மேற்பட்ட காதல்களைக் குறிக்கும் தெலுங்குச் சொல்.)

இந்த தெலுங்குத் தலைப்பைத் தாங்கி, காதலர்கள் தினத்தையொட்டி வெளியான மலையாளப் படம், அது திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் இளம் ரசிகர்களால் மட்டுமல்ல, நடுத்தர மற்றும் வயோதிக ரசிகர்களாலும் அமோகமாக வரவேற்கப்பட்டு, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டு, கற்பனைக்கும் எட்டாத அளவு வசூலை வாரிக் குவித்துக்கொண்டிருக்கிறது. ‘ரொமாண்டிக் காமெடி’ ஜானரில் உருவாக்கப்பட்டு, தற்போது தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு, அதே தெலுங்கு தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இப்படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது? பார்ப்போம்…

0a1a

படக்கதை ஆரம்பத்தில் தமிழ்நாட்டிலும், பிறகு கேரளாவிலும், அதன்பிறகு ஐதராபாத்திலும் நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த நாயகன் சச்சின் (நஸ்லென்), சேலத்திலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவராக இருக்கிறார். அவர் கல்லூரியில் சேர்ந்த முதலாண்டே, தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால், அதை அந்த மாணவியிடம் சொல்ல தைரியம் இல்லாமல் நான்கு வருடங்களைக் கடத்துகிறார். கடைசியாக, கல்லூரியை விட்டு வெளியேறுவதற்கான ’ஃபேர்வெல்’ நாளன்று, நிறைய மது அருந்தி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அம்மாணவியிடம் போய் தன் காதலைச் சொல்ல, அதை ஏற்க மறுக்கும் மாணவி “நான் வேறொருவரை காதலிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்.

காதல் தோல்வியடைந்த சோகத்துடன் சொந்த ஊர் திரும்புகிறார் சச்சின். அவருக்கு அவருடைய வீடு நரகமாக இருக்கிறது. காரணம், அவருடைய அப்பாவும் அம்மாவும் கடந்த ஒன்றரை வருடங்களாக தங்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லாமல் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு திரிகிறார்கள். வீட்டை விட்டு எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்று நினைக்கும் சச்சின் இங்கிலாந்து செல்ல திட்டமிடுகிறார். ஆனால் அவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, அந்த முயற்சியும் தோல்வி அடைகிறது.

சொந்த ஊரில் இருக்கப் பிடிக்காத சச்சின், ஊரைவிட்டு வெளியேற தனக்கு உதவுமாறு தன் நண்பர் அமல் டேவிஸிடம் (சங்கீத் பிரதாப்) கேட்கிறார். ஐதராபாத்தில் ’GATE’ பயிற்சியைத் தொடர திட்டமிட்டுள்ள அமல் டேவிஸ், சச்சினை தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

ஐதராபாத்தில், ஒரு திருமணத்தில் நாயகி ரீனுவை (மமிதா பைஜு) பார்க்கிறார் சச்சின். பார்த்ததும் அவரது அழகில் மயங்கி அவர் மீது காதல் கொள்கிறார். ரீனு மீதான தனது காதலை ரீனுவின் தோழியிடம் சச்சின் சொல்ல, அவரோ ”ரீனு தன்னை விட மெச்சூர்டான, வெல் செட்டில்டு நபரைத் தான் கல்யாணம் செய்வேன் என்று சொல்லியிருக்கிறாள். அவள் எதிர்பார்க்கும் எந்த தகுதியும் உன்னிடம் இல்லை. அதனால் உன் காதலை அவள் நிச்சயம் ஏற்க மாட்டாள்”என்று சொல்வதோடு, ரீனுவும், அவரது அலுவலக நண்பரான ஆதியும் (ஷியாம் மோகன்) ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் சொல்கிறார்.

இத்தனைக்குப் பிறகும் ரீனு மீதான ஒருதலைக் காதலை சச்சின் தொடர்கிறார். வாழ்க்கையில் தோல்வி அடைவதையே வாடிக்கையாகக் கொண்ட சச்சினின் காதலை, எல்லா தருணங்களிலும் வெற்றி பெறுவதையே வாடிக்கையாகக் கொண்ட ரீனு ஏற்றாரா, இல்லையா? என்பதை மிகவும் கலகலப்பாகவும் ரொம்ப காமெடியாகவும் சொல்கிறது ‘பிரேமலு’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதை என்று பார்த்தால், ‘பிரேமலு’ ஒன்றும் பிரமாதமான புதுக்கதை இல்லை. இதே கதையமைப்பில் ஏற்கெனவே பல நூறு திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், எழுத்தாளர், இயக்குநர் கிரிஷ் ஏ.டி. – கிரண் ஜோஷியின் சுவாரஸ்யமான திரைக்கதை மாயாஜாலமே, ’பிரேமலு’ படம் ஓடுகிற 156 நிமிடங்களும் நம்மைக் கட்டிப்போட்டு தொடர்ந்து ரசிக்கவும், வாய்விட்டுச் சிரிக்கவும் வைக்கிறது.

மேலும், ‘ரொமாண்டிக் காமெடி’ என்னும் காதல் கலந்த நகைச்சுவையைக் கையாளுவதில் ஜித்தன் என பெயரெடுத்தவர் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. அவரது முதல் படமான ‘தண்ணீர்மத்தன் தினங்கள்’ படத்தில் பள்ளிப்பருவ நகைச்சுவைக் காதலையும், இரண்டாவது படமான ‘சூப்பர் சரண்யா’வில் கல்லூரிக் கால நகைச்சுவைக் காதலையும் சிறப்பாகக் கையாண்டு வெற்றி பெற்றுள்ள இயக்குநர் கிரிஷ் ஏ.டி, இப்போது மூன்றாவது படமான ‘பிரேமலு’வில், முதல் வேலையில் கிடைக்கும் நகைச்சுவைக் காதலை அட்டகாசமாகக் கையாண்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

நாயகன் சச்சினாக நஸ்லென் நடித்திருக்கிறார். பக்கத்து வீட்டுப் பையன் போல இயல்பாகவும், அதே நேரத்தில் வசீகரமாகவும் தோற்றம் தரும் அவர், அப்பாவியாக சூழலுக்கேற்ற காமெடியை அசால்டாகக் கையாண்டு அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகி ரீனுவாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். எவரையும் எளிதில் மயக்கும் பேரழகு அவருக்கு வரப்பிரசாதம். அவரது கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை புரிந்துகொண்டு நன்றாக நடித்திருக்கிறார். நம்மை கவர்ந்திழுப்பது மமிதா பைஜுவா? அல்லது ரீனு கதாபாத்திரமா? என்று பிரித்தறிய முடியாமல் ரசிகர்கள் குழம்பித்தான் போகிறார்கள்.

 நாயகனின் நண்பர் அமல் டேவிஸாக சங்கீத் பிரதாப் நடித்துள்ளார். படம் முழுக்க காமெடியை சிதறவிட்டு அதகளப்படுத்தியிருக்கிறார்.

நாயகியின் அலுவலக நண்பர் ஆதியாக வரும் ஷியாம் மோகன்,  தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை குறைவின்றி செய்துள்ளார்.

விஷ்ணு விஜய்யின் இசையும், அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவும் ’பிரேமலு’வை இனிய அனுபமாக மாற்ற உறுதுணையாக இருந்துள்ளன.

‘பிரேமலு’ – காதலும், நகைச்சுவையும் பின்னிப் பிணைந்து உங்களை மகிழ்விக்கும்! அவசியம் பார்த்து ரசியுங்கள்!