பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்
சாகித்ய அகாதமி விருதுபெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (21-12-2018) காலை காலமானார். அவருக்கு வயது 73.
பிரபஞ்சன் புதுச்சேரியில் 1945ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். தமிழை முறையாகக் கற்றவர். கரந்தை கல்லூரியில் சேர்ந்து தமிழ் புலவர் பட்டம் பெற்று, தஞ்சாவூரில் தமிழ் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பின்னர் அந்த பணியை விட்டு விலகி முழு நேர எழுத்தாளர் ஆனார்.
இலக்கியப் பத்திரிகைகளிலும், விகடன், குமுதம் போன்ற வெகுஜனப் பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதி பிரபல எழுத்தாளராகத் திகழ்ந்த பிரபஞ்சன், நாவல், சிறுகதை, கட்டுரை ஆகிய பிரிவுகளில் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
எளிய மனிதர்களின் வாழ்க்கையில் நடைபெறும் யதார்த்தமான சம்பவங்களை தனக்கே உரிய பாணியில் எழுதி மானுடம் பேசும் உயர்ந்த படைப்புகளை அவர் தமிழுக்கு அளித்தார்.
அவற்றில் ‘வானம் வசப்படும்’, ‘மகாநதி’, ‘மானுடம் வெல்லும்’, ‘இன்பக் கேணி’, ‘நேசம் மறப்பதில்லை’ போன்ற நாவல்களும், ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’, ‘நேற்று மனிதர்கள்’ ஆகிய சிறுகதை தொகுதிகளும் புகழ் பெற்றவை.
இவரது ‘முட்டை’ நாடகம் பலமுறை அரங்கேற்றப்பட்டுள்ளது. இவரது படைப்புகள் பல்வேறு இந்திய மொழிகளில் மட்டுமின்றி பிரெஞ்சு, ஜெர்மனி, ஆங்கில மொழிகளிலும் வெளிவந்துள்ளன.
பிரபஞ்சன் தனது ‘வானம் வசப்படும்’ நாவலுக்கு 1995ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 57 ஆண்டுகாலமாக இலக்கிய பணிகள் ஆற்றிவந்த பிரபஞ்சன், சமீபகாலமாக புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளானார். புதுச்சேரியில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார்.
பிரபஞ்சனின் மகன் பிரான்ஸ் நாட்டிலிருந்து வரவேண்டியுள்ளதால், அதுவரை பிரபஞ்சனின் உடல் மணக்குள விநாயகர் மருத்துவமனையின் அமரர் அறையிலேயே பாதுகாக்கப்படும் என்றும், வரும். ஞாயிறன்று வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதி மரியாதை செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தெரிகிறது.