21 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்கு: பிரியா விடை பெற்றார் பிரபஞ்சன்
அமரர் பிரபஞ்சனின் உடல், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் புதுச்சேரியில் தகனம் செய்யப்பட்டது. பிரபஞ்சனின் சிதைக்கு அவரது மூத்த மகன் கவுதம் தீ மூட்டினார்.
பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலக் குறைவு காரணமாக புதுச்சேரியில் காலமானார். அவரது உடல் புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. பேண்ட் வாத்தியங்கள் இசைக்க அவரது உடலில் இந்திய நாட்டுக் கொடி போர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
மாலை 4 மணிக்கு பிரபஞ்சனின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சன்னியாசி தோப்பு மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. 21 குண்டுகள் முழங்க, பிரபஞ்சனின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பிரபஞ்சனின் சிதைக்கு அவரது மூத்த மகன் கவுதம் தீ மூட்டினார்.