மக்களவை தேர்தலில் போட்டியிடும் தொகுதி: அறிவித்தார் பிரகாஷ் ராஜ்!
மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதாக் கட்சியையும், அதன் இந்துத்துவ கொள்கைகளையும் கடுமையாக எதிர்த்தும், விமர்சித்தும் வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இதனால் இந்துத்துவ வெறியர்களின் கொலைப் பட்டியலில் அவர் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் பிரகாஷ் ராஜ் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக கடந்த 1ஆம் தேதி அறிவித்தார். போட்டியிடும் தொகுதியை பின்னர் தெரிவிப்பேன் என்றும் கூறியிருந்தார்.
பிரகாஷ் ராஜ் பெங்களூருவில் வசித்து வருவதால், அங்குள்ள 4 மக்களவைத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுவதாக பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ் ராஜின் முடிவை குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். அதுபோல் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும், சந்திரசேகர ராவ்வின் தெலங்கானா ராஷ்ட்ரிய கட்சியும் பிரகாஷ் ராஜூக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.