நெடுமாறன் அறிவிப்புக்கு இலங்கை ராணுவம் மறுப்பு: “பிரபாகரன் உயிருடன் இல்லை!”

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவருடைய மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள் எனவும் பழ. நெடுமாறன் நேற்று அறிவித்தார். இதை மறுத்துள்ள  இலங்கை ராணுவம், பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பிரபாகரன் நலமுடன் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து இலங்கை ராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்திடம் கேட்டபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டதற்கான ஆதாரங்கள் தம் வசம் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், “2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டார். டி.என்.ஏ ஆதாரங்களையும் நாம் எடுத்துள்ளோம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி இறுதிக்கட்ட யுத்தத்தில் அவர் கொல்லப்பட்டார். குறித்த தேதியில் பிரபாகரன் கொல்லப்பட்டமைக்கான டி.என்.ஏ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் எடுத்துள்ளோம்.

தவறான தகவல்களை அவர்கள் வெளியிடுகிறார்கள். இந்தக் கூற்று எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் எங்களுக்கு அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது தெளிவாகத் தெரியும், அதில் சந்தேகமே இல்லை” என்று பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.