போர் தொழில் – விமர்சனம்

நடிப்பு: அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல், சரத்பாபு, பி.எல்.தேனப்பன், நிழல்கள் ரவி, ஓ.ஏ.கே.சுந்தர் மற்றும் பலர்

இயக்கம்: விக்னேஷ் ராஜா

ஒளிப்பதிவு: கலைச்செல்வம் சிவாஜி

படத்தொகுப்பு: ஸ்ரீஜித் சாரங்

இசை: ஜேக்ஸ் பிஜாய்

தயாரிப்பு: அப்ளாஸ் எண்டர்டெய்ன்மெண்ட், E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ், எப்ரியாஸ் ஸ்டூடியோஸ்

வெளியீடு: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேசன்ஸ்)

திருச்சி. இரவு. புதிதாக திருமணமான ஒரு போலீஸ்காரருக்கு ‘நைட் டூட்டி’ கொடுக்கப்பட்டிருக்கிறது. போலீஸ் வாகனத்தை ஓட்டிக்கொண்டே அவர், தன் ஏக்கத்தையும், வீட்டிலுள்ள தன் புதுமனைவியின் ஏக்கத்தையும் தனது மேலதிகாரியிடம் முறையிட்டு, ‘பகல் டூட்டி’ கேட்க, அந்த மேலதிகாரியோ, ”உன் மனைவியுடன் பகலில் வச்சுக்கோ” என்று ஆலோசனை கூறி சிரிக்கிறார். இப்படி கலகலப்பான அடல்ட் நகைச்சுவையுடன் ஆரம்பமாகும் படம், படம் தொடங்கிய ஐந்தாவது நிமிடம் சட்டென மெயின் கதைக்குள் நுழைகிறது. இளம்பெண் ஒருத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக பாதையோரம்  கிடப்பதை அவர்கள் பார்க்கிறார்கள்…

அந்த பெண் கொலையுண்ட விவகாரத்தை லோக்கல் போலீஸ் விசாரணை செய்துகொண்டிருக்கும்போதே, அடுத்த சில நாட்களில் அதே பாணியில் கொலை செய்யப்பட்ட மற்றொரு பெண்ணின் சடலம் கிடைக்கிறது.

இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக எஸ்.பி. லோகநாதன் (சரத்குமார்) என்ற அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரியும், அவருக்கு உதவியாக அப்போதுதான் பணியில் சேர்ந்த பிரகாஷ் (அசோக் செல்வன்) என்ற இளம் டி.எஸ்.பி.யும், இவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளைச் செய்வதற்காக வீணாவும் ( நிகிலா விமல்) சென்னையிலிருந்து ‘ஸ்பெஷல் டீம்’ ஆக அனுப்பப்படுகிறார்கள்.

எப்போதும் கடுகடு முகத்துடன் எரிந்துவிழும் எஸ்.பி. லோகநாதனும், ஆர்வக்கோளாறில் எதையாவது செய்து வாங்கி கட்டிக்கொள்ளும் டி.எஸ்,பி. பிரகாஷும் ஒருபுறம் முரண்பட்டுக்கொண்டே, மறுபுறம் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் புலனாய்வு செய்து, படத்தின் முதல் பாதியின் முடிவில் (அதாவது இடைவேளையின்போது) ”இன்னார் தான் கொலைகாரன்” என கண்டுபிடித்துவிடுகிறார்கள்.

எனில், இரண்டாம் பாதியில் என்ன செய்யப்போகிறார்கள் என்று யோசிக்கும்போது, அடுக்கடுக்காக திருப்பங்கள் வருகின்றன. அந்தத் திருப்பங்கள் வலிந்து திணிக்கப்பட்டவையாக இல்லாமல், இயல்பாக இருக்கின்றன.

உண்மையான கொலைகாரன் தான் யார்? அவனது கொடூர சைக்கோத்தனத்துக்கு என்ன தான் காரணம்? என்ற கேள்விகளுக்கு நல்ல மெசேஜுடன் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘போர் தொழில்’ படத்தின் மீதிக்கதை.

0a1b

கள அனுபவம் இல்லாத, ஆனால் தியரிட்டிக்கல் அறிவு அதிகம் உள்ள, அதே நேரத்தில் கொஞ்சம் பயந்த சுபாவமும் கொண்ட புதிய டி.எஸ்.பி பிரகாஷ் வேடத்தில் வரும் அசோக் செல்வன், மிகையும், மீசையும் இல்லாத போலீஸ் அதிகாரியாக இயல்பாக  நடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக மூத்த அதிகாரி  லோகநாதன் எகிறும்போது பம்முவது, பின்னர் தொழில்நுட்ப உதவியாளரான வீணாவிடம் தான் நடத்தப்படும் விதம் குறித்து வேதனைப்படுவது, தன் படிப்பறிவைக் கொண்டு புலனாய்வை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவது, கொலைகாரனின் வீட்டுக்குள் சிக்கிக்கொண்டு தவிப்பது என ஒவ்வொரு காட்சியிலும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இறுக்கமான முகம், மிடுக்கான நடை, வெடுக் பேச்சு ஆகியவற்றுடன் அனுபவ அறிவு மிக்க எஸ்.பி. லோகநாதன் கதாபாத்திரத்தில் வரும் சரத்குமார் தனது முதிர்ச்சியான நடிப்பாற்றலை அசால்டாக வெளிப்படுத்தியிருக்கிறார். கொலைகாரனின் மூளைக்குள் எத்தகைய சிந்தனை இருந்திருக்கும் என்பது பற்றி அவர் செயல்முறை விளக்கம் அளிக்கும் காட்சி, தன்னை பிசினஸ்மேன் என்று சொல்லிக்கொண்டு கொலைகாரனை நெருங்கும் காட்சி என எல்லாக் காட்சிகளிலும் மாறுப்பட்ட ஒரு மூத்த போலீஸ் அதிகாரியை பார்வையாளர்களின் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதில் அவர் வெற்றி பெற்றுள்ளார். தனது ஜூனியரிடம் ஆரம்பத்தில் கடுப்பு காட்டுவது, பின்னர் மெல்ல மெல்ல இணக்கம் கொள்வது என அந்த ட்ராக்கிலும் அருமையாக நடித்திருக்கிறார் சரத்குமார்.

ஸ்பெஷல் புலனாய்வு டீமின் தொழில்நுட்ப உதவியாளர் வீணாவாக வரும் நிகிலா விமல், கண்ணுக்குக் குளிர்ச்சியாக அழகாக இருக்கிறார். யாரையும் காதலிக்காமல், புலனாய்வை நடத்திச் செல்ல உறுதுணையாக இருக்கிறார். கிளைமாக்சில் அவரது கதாபாத்திர ட்விஸ்ட்டும், நடிப்பும் படத்துக்கு விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது.

புகைப்படக் கலைஞராக வரும் சரத்பாபுவையும், அவரது மாறுபட்ட வித்தியாசமான நடிப்பையும் திரையில் பார்த்து பிரமிக்கும் அதேவேளை, இத்தகைய அற்புதக் கலைஞனை இழந்துவிட்டோமே என எண்ணி மனம் விம்முவதை தவிர்க்க முடியவில்லை.

கான்ஸ்டபிள் மாரிமுத்துவாக வரும் பி.எல்.தேனப்பன், மாநில உயர் போலீஸ் அதிகாரி (ஏடிஜிபி) மகேந்திரனாக வரும் நிழல்கள் ரவி, லோக்கல் போலீஸ் உயர் அதிகாரி ராம்குமாராக வரும் ஓ.ஏ.கே.சுந்தர் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒரு படத்தின் வெற்றிக்குத் தேவையான அத்தனை அம்சங்களையும் கவனமாக தேர்ந்தெடுத்து கச்சிதமாக சேர்த்து ‘போர் தொழில்’ படத்தை வெற்றிப்படமாக்கி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ராஜா. கதை, கதாபாத்திர வடிவமைப்பு, காட்சி அமைப்பு, விறுவிறுப்புடன் நகரும்படியான திரைக்க்கதை, நறுக் சுருக் வசனங்கள் என அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குனர். மேற்கண்ட எழுத்துப் பணிகளில் ஒரு எழுத்தாளரை – ஆல்பிரட் பிரகாஷை – கூட்டு சேர்த்துக்கொண்டது இயக்குனரின் புத்திசாலித்தனம். இந்த புத்திசாலித்தனத்துக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மேலும், இந்த படத்துக்கு காதல், ஆடல் – பாடல், நகைச்சுவை ட்ராக், ரோப் ஷாட்டுடன் கூடிய ஸ்டண்ட் சர்க்கஸ் போன்றவை தேவையில்லை என்று துணிந்து முடிவெடுத்த இயக்குனருக்கு பாராட்டுகள். அதனாலேயே இந்த ’சீரியல் சைக்கோ கில்லர் மிஸ்ட்ரி’ படம், பார்வையாளர்களுக்கு ரசனை மிகுந்த புது அனுபவத்தைத் தருகிறது. கதாபாத்திரங்களுக்கு மிகப் பொருத்தமான நடிப்புக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்திருப்பதும் படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளது.

ஒளிப்பதிவாளர் கலைச்செல்வம் சிவாஜி, படத்தொகுப்பாளர்  ஸ்ரீஜித் சாரங், இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக உழைத்திருக்கிறார்கள்.

கொலை திரில்லர் திரைப்படங்கள் ஏற்கெனவே ஏராளமாக வந்துள்ள போதிலும், அவற்றிலிருந்து நிறையவே மாறுபட்டு, பார்வையாளர்களை திடுக்கிடவும், திகைக்கவும் வைத்து சீட்டின் நுனிக்கே கொண்டு வந்துவிடுகிறது இந்த படம்.

 ‘போர் தொழில்’ – திரையரங்குக்குப் போய் கண்டு களிக்கத் தக்க தரமான படம்!