போர் – விமர்சனம்
நடிப்பு: அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், அம்ருதா ஸ்ரீனிவாசன், மெர்வின் ரோசரியோ, ஜான் விஜய் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: பிஜாய் நம்பியார்
ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித், பிரெஸ்லி ஆஸ்கர் டி சோஸா
படத்தொகுப்பு: பிரியங்க் பிரேம் குமார்
பாடலிசை: சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கௌரவ் கோட்கிண்டி
பின்னணி இசை: ஹரீஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கரநாராயணன், கௌரவ் கோட்கிண்டி
தயாரிப்பு: டி-சீரீஸ், கெட்அவே பிக்சர்ஸ், ரோக்ஸ் மீடியா
தயாரிப்பாளர்: டி-சீரீஸ், பிஜாய் நம்பியார், பிரபு ஆண்டனி, மது அலெக்ஸாண்டர்
பத்திரிகை தொடர்பு: சதீஷ் குமார்
ஒரு பல்கலைக்கழகத்தைப் பின்புலமாகக் கொண்டு, மாணவ மாணவியரின் கலகலப்பு, கைகலப்பு, கூத்தடிப்பு ஆகியவற்றினூடே சில சமூகப் பிரச்சனைகளையும், சில உளவியல் சிக்கல்களையும் வெள்ளித் திரையில் தீட்டிக்காட்ட முயன்றிருக்கும் திரைப்படம் ‘போர்’. இப்படத்தின் இயக்குநர் பிஜாய் நம்பியார் பிரபல இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றியவர் என்ற வகையில் இந்த படம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
புதுச்சேரியில், செயிண்ட் மார்ட்டின் பல்கலைக்கழகம் என்றொரு பல்கலைக்கழகம் இருப்பதாக கற்பனை செய்துகொண்டு, அங்கு இப்படக்கதை நிகழ்வதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
செயிண்ட் மார்ட்டின் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு (பி.ஹெச்.டி) படிக்கும் சீனியர் மாணவர் பிரபு செல்வன் (அர்ஜுன் தாஸ்). அதே பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு முதலாம் ஆண்டில் சேரும் ஜூனியர் மாணவர் யுவராஜ் (காளிதாஸ் ஜெயராம்). இவருக்கு சிறு வயதில் ஏற்பட்ட ஒரு கசப்பான சம்பவம் காரணமாக, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் பிரபு செல்வன் மீது கடுங்கோபத்தில் இருக்கிறார். இதனால், பிரபு செல்வனை வம்புக்கு இழுக்கும் விதமாக அவருடைய ஆட்களைச் சீண்டுகிறார். ஆனால், யுவராஜின் திட்டத்தைப் புரிந்துகொண்டு ஒதுங்கிச் செல்ல முயலும் பிரபு செல்வன் ஒரு கட்டத்தில் பொங்கி எழுகிறார்.
மறுபுறம், பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவருக்கான தேர்தலை முன்னிட்டு காயத்ரிக்கும் (டி.ஜே.பானு), அரசியல்வாதி மற்றும் கல்லூரி டிரஸ்ட்டியின் மகளான சூர்யாவுக்கும் (அம்ருதா ஸ்ரீனிவாசன்) இடையே மோதல் ஏற்படுகிறது. சூர்யாவை எதிர்த்துப் போட்டியிடும் பெண் மீது சாதி வன்கொடுமை நடக்க, அதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்த, சூர்யா மீது போலீஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்கிறது.
தன் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும் என்ற நிலையில், தன்னை எதிர்ப்பவர்களை ஒழித்துக்கட்ட முடிவு செய்யும் சூர்யா, யுவராஜ் தரப்பு மாணவர்களுக்கும், பிரபு செல்வன் தரப்பு மாணவர்களுக்கும் இடையே நடக்கும் மோதலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள, பெரும் போர் வெடிக்கிறது. அது எது வரை போகிறது? இறுதியாக போரில் வென்றது யார்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘போர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
அடிதடி, சண்டை, கோபம் என வலிமையான ஆராய்ச்சி மாணவராக சிறப்பாக நடித்திருக்கிறார், நாயகன் பிரபு செல்வனாக வரும் அர்ஜுன்தாஸ். படம் முழுக்க இறுக்கமான முகத்துடனும், அழுத்தமான மிரட்டலான குரலுடனும் வலம் வருகிறார். காதல் காட்சிகளிலாவது கொஞ்சம் முகத்தைக் கழுவிவிட்டு வந்து, லேசாய் மென்மை காட்டியிருக்கலாம்.
மற்றொரு நாயகன் யுவராஜாக வரும் காளிதாஸ் ஜெயராம், காதல் முதல் கோபம் வரை அனைத்து உணர்ச்சிகளையும் பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இரண்டு ஆண்களுக்கு இடையே நடக்கிற கதையாக இருந்தாலும், பெண் கதாபாத்திரங்களுக்கும் போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது ஆரோக்கியமான விஷயம். நாயகன் பிரபு செல்வனின் காதல் இணை ரிஷ்விகாவாக வரும் சஞ்சனா நடராஜன் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார். காயத்ரியாக வரும் டி.ஜே.பானு, சூர்யா என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் வரும் அம்ருதா ஸ்ரீனிவாசன் ஆகியோரும் தங்களுக்கான பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார்கள்.
காமெடி வேடத்தில் நடித்திருக்கும் மெர்வின் ரோசரியோ, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜான் விஜய் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் த்த்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இயக்குநர் பிஜாய் நம்பியார், திரைப்பட பார்வையாளர்களுக்குப் பிடிக்கிற படமாக அல்லாமல், தனக்குப் பிடிக்கிற படமாக இதை இயக்கி, அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
இந்தப் படக்கதையை அறிவுஜீவித்தனமாக, அறிமுகம், களம், பகை, மையல், முரசொலி, விழா, போர் என ஏழு அத்தியாயங்களாகப் பிரித்துத் தந்துள்ளார் இயக்குநர். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வித்தியாசமாகவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் வடிவமைத்திருப்பது சிறப்பு. ஆனால், குழப்பம் இல்லாமல் சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச் செல்லத் தவறிவிட்டார்.
மன அழுத்தம், தற்கொலை குறித்த எண்ணம், சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வன்முறை, பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் காட்டும் சாதியப் பாகுபாடு, ஆண் ஆதிக்கம் என ஏகப்பட்ட பிரச்னைகளை இயக்குநர் ஒரே படத்தில் பேச முற்பட்டிருக்கிறார். இதனால், மிக ஆழமாகப் பேசவேண்டிய ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப மேம்போக்காகவே கையாண்டிருக்கிறார்.
கஞ்சா, புகையிலை, மது சம்பந்தப்பட்ட காட்சிகள் அளவுக்கு அதிகமாக இடம் பெற்றுள்ளன. இவற்றின் மீது இயக்குனருக்கு அளவு கடந்த மோகம் இருந்தால், அதை படத்தில் காட்டாமல், தனிப்பட்ட முறையில் அனுபவித்துக்கொள்வதே அவர் சமூகத்துக்கு செய்யும் சிறந்த தொண்டாக இருக்கும்.
சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கௌரவ் கோட்கிண்டி ஆகியோரின்பாடலிசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.
ஹரீஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கரநாராயணன், கௌரவ் கோட்கிண்டி ஆகியோரின் பின்னணி இசை திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.
ஜிஷ்மி காலித், பிரெஸ்லி ஆஸ்கார் டிசோசா ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். மாணவர்களுக்கு இடையே நடக்கும் மோதல், மாணவர்களின் வாகனப் பேரணி போன்ற காட்சிகளை ஒரே ஷாட்டில் பிரமாதமாக படமாக்கி அசத்தியிருப்பவர்கள், படத்தை பிரமாண்டமாகக் காட்டவும் உறுதுணையாக இருந்துள்ளார்கள்.
படத்தொகுப்பு செய்திருக்கும் பிரியங்க் பிரேம் குமாரின் வித்தியாசமான பாணி தனிக்கவனம் பெறுகிறது.
பல காட்சிகள் – குறிப்பாக திறந்தவெளி திரையரங்கு பற்றி எரிகிற காட்சி – கலை இயக்குநர்களான லால்குடி இளையராஜா, மானசி சாவரே ஆகியோரின் கைவண்ணத்துக்கும், உழைப்புக்கும் சாட்சியம் அளிக்கின்றன.
’போர்’ – ஒருமுறை பார்க்கலாம்!