பூச்சாண்டி – விமர்சனம்
நடிப்பு: மிர்ச்சி ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன், ஹம்சினி பெருமாள் மற்றும் பலர்
இயக்கம்: ஜே.கே.விக்கி
இசை: டஸ்டின் ரிதுவன் ஷா
ஒளிப்பதிவு: அசல் இஸம் பின் முகமது அலி
குழந்தைகளை பயமுறுத்த வீடுகள் தோறும் பயன்படுத்தப்படும் சொல் ‘பூச்சாண்டி’. யார் இந்த பூச்சாண்டி என்றே தெரியாமல் பயந்து அடங்கிய குழந்தைகள், வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகும்கூட அது யார் என்றே தெரியாமல் இருப்பது தான் அந்த சொல்லின் மகத்துவம். காலங்காலமாக அந்த சொல் புழக்கத்தில் இருந்துவருவதற்கு ஒரு காரண காரியம் இருக்கத்தானே செய்யும். அதை தேடி கண்டுபிடித்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜே.கே.விக்கி.
நாயகன் முருகன் புராதன விஷயங்களில் ஆர்வம் கொண்டவர். குறிப்பாக அமானுஷ்யம். சமூகத்தில் நிலவும் அமானுஷ்யம் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் அவற்றின் வேர்களை ஆராயும் விருப்பம் கொண்டவர் நாயகன். அமானுஷ்யம் குறித்த ஆய்வை மலேசியாவில் நாயகன் நடத்துகையில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை சந்திக்கிறார். சங்கர்!
தன் வாழ்வில் நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தை விவரிக்கிறார் சங்கர். அன்பு, குரு ஆகிய இருவரும் சங்கரின் நண்பர்கள். அவர்களில் அன்பு சற்று வித்தியாசமானவர். பண்டைய கால நாணயங்கள் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர். அவரது பழைய நாணயங்களைக் கொண்டு ஒரு வித்தியாசமான முயற்சி மேற்கொள்ள முனைகின்றனர். ஒரு நாணயத்தைக் கொண்டு அந்த நாணயத்துடன் சம்பந்தப்பட்ட ஓர் ஆவியை தொடர்பு கொண்டு பேச முயற்சிக்கின்றனர் மூவரும். முயற்சி வெற்றியடைகிறது. ஓர் ஆவியுடன் தொடர்பு கிடைக்கிறது. ஆவியின் பெயர் மல்லிகா. ஆவியுடனான தொடர்பை அவர்கள் அதோடு நிறுத்தவில்லை. தொடர்கிறார்கள். ஆவியும் தொடர்ந்து பேசுகிறது. திடுமென மூவரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நேர்கிறது. மூவரில் ஒருவரான குரு உயிரிழக்கிறார்.
குருவின் மரணத்துக்குக் காரணம் மல்லிகாதான் என நினைக்கின்றனர் சங்கரும் அன்பும். அச்சமயத்தில்தான் புராதன கால அமானுஷ்யங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இருக்கும் முருகனின் தொடர்பும் கிடைக்கிறது. மூவருமாக சேர்ந்து மல்லிகா யார், நாணயம் கொண்டிருக்கும் சக்தி என்ன, குருவின் மரணத்துக்கான காரணம் யார் முதலிய விஷயங்களை தெரிந்துகொள்ள முயலுகின்றனர். அங்கிருந்து கதையைச் சங்க கால சமூகத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர். மூவரின் பயணத்தில் அவர்களுக்கு என்ன விடைகள் கிடைத்தன என்பதே மிச்சக் கதை.
முருகன் என்ற நாயக பாத்திரத்தில் மிர்ச்சி ரமணா நடித்திருக்கிறார். தன்னுடைய பாத்திரத்தின் தன்மையை புரிந்து சரியாக நடித்திருக்கிறார். சங்கராக தினேஷ் சாரதி கிருஷ்ணன் நடித்திருக்கிறார். கதைக்களம் நிர்பந்திக்கும் எல்லா உணர்வுகளையும் தேர்ந்த நடிப்பால் வெளிப்படுத்துகிறார். நகைச்சுவை, கோபம், பதற்றம், வில்லத்தனம் என எந்த நடிப்பையும் விட்டு வைக்கவில்லை.
பிற இரு நண்பர்களான குரு மற்றும் அன்பு ஆகிய கதாபாத்திரங்களில் கணேஷன் மனோகரன் மற்றும் லோகன் நாதன் ஆகியோர் இயல்பாக நடித்திருக்கின்றனர். மல்லிகா ஆவியுடன் பேசும் காட்சியில் அவர்களுடன் சேர்த்து நமக்குள்ளும் பதைபதைப்பைக் கொண்டு வந்து விடுகிறார்கள். மல்லிகாவின் கதாபாத்திரத்தில் ஹம்சினி பெருமாள்! படத்தில் குறைவான காட்சிகள் என்றாலும் கதையோட்டத்தை தீர்மானிக்கும் பாத்திரத்தின் முக்கியத்துவம் புரிந்து நடித்திருக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் ஆகிய இருவரின் பங்களிப்பும் படத்துக்கு நேர்த்தியை தருகிறது.
அமானுஷ்யப் படங்கள் அல்லது பேய்ப் படங்கள் போன்றவற்றுக்கு என பெரிய மெனக்கெடல்கள் இன்றி, புதிதாய் ஒரு வீட்டுக்கு குடிவருபவர்கள் என தொடங்கும் கதைக் களங்களைப் போலன்றி புதிதாய் சிந்தித்ததற்கே இயக்குநரை முதலில் பாராட்டலாம். மட்டுமல்லாமல், இத்தகைய கதைக்களத்தை நம் சமூகத்தின் வேர்களுக்குள் தேடச் சென்று சோழர், களப்பிரர் காலப் பின்னணிகளில் வடிவமைத்ததும் சிறப்பு. ஓர் அமானுஷ்யக் கதைக்கு தேவையான எதிர்பார்ப்பை திரைக்கதை பூர்த்தி செய்கிறது. திரைக்கதையை சரியாக திரைக்கு மாற்றுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் ஜே.கே.விக்கி.
பூச்சாண்டி – ரசிக்கத்தக்க வித்தியாசமான முயற்சி!