தமிழர் திருநாள்: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

முதல்வர் ஸ்டாலின்: உழவு தமிழர்களின் தொழில் மட்டுமல்ல, பண்பாட்டு மரபு. அதனால்தான் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகிறோம். தை முதல்நாள் உழைப்பின் திருநாளாக தமிழர் பெருநாளாக கொண்டாடி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக கூடுதல் மகிழ்ச்சிக்குரியதாக, தமிழகத்தில் திமுகவின் தனிப்பெரும் ஆட்சி நடைபெற்று வருகிறது. பொங்கல் திருநாள் மட்டுமல்ல, எல்லா நாளும் மகிழ்ச்சிக்குரிய நாள் என சொல்லத்தக்க வகையில், திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

தேர்தலுக்கு முன்பாக கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றியும், சொல்லாத பல திட்டங்களைச் செய்து காட்டியும் சாதனைகளோட பேரரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. மகளிருக்கு விடியல் பயணம் முதல் கரோனா காலத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் 4000 ரூபாய், இப்போது வெள்ள நிவாரணமாக 6000 ரூபாய், கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் 1000 ரூபாய், எல்லாத்துக்கும் முத்தாய்ப்பாக செப்டம்பர் மாதம் முதல், ஒரு கோடிக்கும் மேல் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். பெரும் நிதிநெருக்கடிக்கு இடையில், பொங்கல் தொகுப்புடன் பரிசுத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கி கோடிக்கணக்கான மக்களின் மனதில் மகிழ்ச்சியைப் பொங்க வைத்திருக்கிறது திமுக அரசு. பால் பொங்குவதுபோல் மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்குவதை நான் பார்க்கிறேன். உங்கள் மகிழ்ச்சிதான் என்னுடைய மகிழ்ச்சி. உங்களுடைய மனதில் ஏற்படும் சிரிப்புதான் என்னுடைய பூரிப்பு. அன்பு, ஆசை, இன்பம், ஈகை, உண்மை பொங்க ஊரே பொங்கட்டும். இனிய பொங்கல் இந்தியாவோட பொங்கலாக மாறப்போகிற ஆண்டு இது.

வைகோ: பொங்கல் விழாவினைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் களம் நம்மை அறைகூவி அழைக்கின்றது. பேரறிஞர் அண்ணாவின் உயிர்நிகர் லட்சியங்களான மாநில சுயாட்சி, கூட்டாட்சி, மத நல்லிணக்கம், சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக நெறிமுறைகள் ஆகியவை அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்து வரும் மோடி தலைமையிலான மக்கள் விரோத பாஜக தன் ஆட்சியைத் தக்கவைக்க மீண்டும் களத்தில் நிற்கிறது. திராவிட மாடல் ஆட்சியினை திறம்பட நடத்தி வரும் திமுகவுடன் இண்டியா கூட்டணியில் இணைந்து ஆட்சி மாற்றத்துக்காக நாடு தழுவிய அளவில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இந்தக் காலகட்டத்தில் பொங்கல் விழாவினை நாம் கொண்டாட இருக்கிறோம். பொங்கலோ பொங்கல் என்று கூவி மகிழ்ந்திடும் அதே வேளையில், ஆட்சி மாற்றத்திற்காகவும், நாம் சூளுரைப்போம்.

கே.பாலகிருஷ்ணன்: நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக, முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து அமைத்துள்ள இண்டியா எனும் அணி சேர்க்கையின் வெற்றிப் பயணம் துவங்குகிற நன்னாளாக; அதன்மூலம் 2024 தேர்தலில் மோடி அரசு வீழ்த்தப்பட்டு நாடு முழுவதும் மக்கள் ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் வலுப்பட; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட; மக்களின் வாழ்வை மலரச் செய்ய தைத் திருநாளில் சபதம் ஏற்போம்.

கே.எஸ்.அழகிரி: வருகிற ஜனவரி 14 அன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் தலைவர் ராகுல்காந்தி மணிப்பூரிலிருந்து இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை தொடங்கவிருக்கிறார். இந்தப் பயணம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வருகிற மக்களவைத் தேர்தலில் வகுப்புவாத பாஜக ஆட்சி அகற்றப்படுவதற்கான தீவிர முயற்சியாக அவரது பயணம் அமைய இருக்கிறது. ராகுல்காந்தியின் பயணம் வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன். அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமாவளவன்: உழைப்பைப் போற்றும் திருவிழாதான் தமிழர்கள் போற்றும் தமிழினத்தின் பொங்கல் திருவிழாவாகும். இந்நாளில் தமிழக மக்கள் ஓர் உறுதிமொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. அதாவது, நடைபெறவிருக்கிற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் சாதியவாத, மதவாத, சனாதன சக்திகளை வீழ்த்தி ஜனநாயகத்தை வென்றெடுக்க ஒட்டுமொத்தத் தமிழர்களும் உறுதியேற்போம்.

தி.வேல்முருகன்: வர்ண-சாதி ஒழிப்பு, தீண்டாமை முறியடிப்பு, பெண்ணுரிமை, சூழலியல் பாதுகாப்பு, அனைவர்க்கும் வேலை, வேலையில்லாக்கால வாழ்வூதியம், மெய்யான மதச்சார்பின்மை, வழிபாட்டுரிமை, தமிழே ஆட்சிமொழி-தமிழே பயிற்று மொழி-தமிழே தொடர்பு மொழி என்ற ஒரு மொழிக் கொள்கை, விருப்பத்திற்கேற்ப ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிகளைக் கற்க முழுவாய்ப்பு, அறிவியல் வளர்ச்சிக்கு முன்னுரிமை, பழந்தமிழர்களின் அறச்சிந்தனை-பெரியாரிய-அம்பேத்கரியக் கருத்தியல்கள் ஆகியவை ஒருங்கிணைந்த மண்ணுக்கேற்ற மார்க்சியத் தத்துவத்தை படைக்க இந்நன்னாளில் உறுதி ஏற்போம்.