“பொண்டாட்டிடா” புகழ் வித்யாவுடன் ரஜினிகாந்த் – படங்கள்!
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கபாலி’. இப்படத்தில், “தமிழ் படங்கள்ல இங்க மரு வச்சுக்கிட்டு, மீசையை முறுக்கிகிட்டு, லுங்கியை கட்டிக்கிட்டு… நம்பியாரு, ‘ஏ… கபாலி’ அப்படின்னு கூப்பிட்டவுடனே குடுகுடுன்னு ஓடிவந்து குனிஞ்சு, ‘சொல்லுங்க எசமான் அப்டின்னு வந்து நிப்பானே… அந்த மாதிரி கபாலின்னு நினைச்சியாடா…? கபாலிடா…..” என்று ரஜினி பேசும் பிரபலமான வசனம் ஒன்று உண்டு. இதை தான் ‘கபாலி’ டீஸராகவும் வெளியிட்டார்கள்.
ரஜினி பேசிய இந்த பிரபலமான வசனத்தை டீஸரில் பார்த்துவிட்டு, அதை சற்று மாற்றி, “பொண்டாட்டினா தழைய தழைய புடவையை கட்டிக்கிட்டு, தலை நிறைய பூ வச்சுக்கிட்டு, நெற்றி நிறைய பொட்டு வச்சுக்கிட்டு, ‘ஏய் பொண்டாட்டி’ன்னு கூப்பிட்டவுடனே, குடுகுடுனு ஓடிவந்து காலை புடிச்சுக்கிட்டு, ‘சொல்லுங்க அத்தான்’ அப்படினு கேட்பாளே, அந்த மாதிரி பொண்டாட்டினு நினைச்சுயாடா? பொண்டாட்டிடா…” என்று வசனம் பேசி அதை வீடியோவாக வெளியிட்டார், சிங்கப்பூரைச் சேர்ந்த வித்யா.
https://youtu.be/6B9krbZ0ncE
அந்த வீடியோ பதிவு, சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டது. மேலும், அந்த வீடியோவை கிண்டல் செய்தும் பல வீடியோக்கள் வெளியிடப்பட்டன.
அமெரிக்காவில் ரஜினி இருக்கும்போதே, வித்யா பேசிய வீடியோவை அவருக்கு காட்டியிருக்கிறார்கள். அதை பார்த்த ரஜினி, வித்யாவின் வசன உச்சரிப்பை வெகுவாக ரசித்திருக்கிறார். மேலும், தமிழ்நாட்டுக்கு சென்றவுடன் இந்த பெண்ணை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ரஜினி சென்னை திரும்பியவுடன், பிரபலங்கள் பலரும் அவரை நேரில் சந்தித்தார்கள். அதனைத் தொடர்ந்து வித்யா குறித்து விசாரித்திருக்கிறார் ரஜினி. உடனே சிங்கப்பூரில் இருந்து ரஜினியைப் பார்க்க வந்திருக்கிறார் வித்யா.
வித்யாவை வெகுவாக பாராட்டிய ரஜினி, “எப்படி உங்களுக்கு இந்த ஐடியா வந்தது? வீட்டில் என்ன சொன்னாங்க?” என்று கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். சுமார் அரை மணி நேரம், அந்த வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் குடும்ப பின்னணி உள்ளிட்ட பல விஷயங்களைக் கேட்டு தெரிந்துகொண்டுள்ளார் ரஜினி. ரஜினியின் பாராட்டால் மிகவும் நெகிழ்ந்து போய் இருக்கிறார் வித்யா.