பொள்ளாச்சி: 6 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த குற்றவாளிகளுடன் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிக்கியவர்களுக்கும், அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கும் தொடர்பிருக்கலாம் எனப் பரவும் தகவலாலும், புதிதாக வெளியாகியுள்ள வீடியோக்களாலும் பரபரப்பு நிலவுகிறது.
பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ். ஃபைனான்சியர். இவரது மகன் திருநாவுக்கரசு (27). (மேலே உள்ள பட்த்தில் இருப்பவர்). தந்தையுடன் சேர்ந்து பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது நண்பர்கள் பொள்ளாச்சி சபரிராஜன்(25), சதீஷ்குமார்(28), வசந்தகுமார்(24).
இவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி, இளம் பெண்களைக் கவர்ந்துள்ளனர். மேலும், பாலியல் தொந்தரவு கொடுத்து, அதை வீடியோவாக எடுத்து, அந்தப்பெண்களை மிரட்டி, மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவர்களிடமிருந்து பணம், நகையைப் பறித்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன.
இந்த கும்பலால், கடந்த 6 ஆண்டுகளில் பொள்ளாச்சியில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயம் வெளியில் தெரிந்தால், தங்களது எதிர்காலமே நாசமாகிவிடும் என்ற அச்சத்தில், கடந்த மாதம்வரை யாரும் புகார் தெரிவிக்கவோ, தங்களது குடும்பத்தினரிடம் தகவலை பகிரவோ இல்லை. இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட இந்த கும்பல், தங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி, பொள்ளாச்சியை சேர்ந்த அரசியல் கட்சிப் பிரமுகரின் மகன், அவரது நண்பர்கள் உள்ளிட்டோரை மகிழ்விக்க, அந்தப் பெண்களை அனுப்பியுள்ளனர். வீடியோ காட்சிகளைக் காட்டி மிரட்டி, அந்தப் பெண்களை சம்மதிக்க வைத்துள்ளனர். இதற்காக அரசியல் கட்சிப் பிரமுகர்களிடம் பணமும் பெற்றுள்ளனர் என்றெல்லாம் புகார்கள் எழுந்தன. மேலும், அதிகாரத்தில் உள்ளவர்களின் நட்பையும் எளிதில் பெற்றுள்ளனர்.
கடந்த மாதம் 24-ம் தேதி பொள்ளாச்சியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியை காரில் அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்து, அதை வீடியோவாக எடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அவர்களிடமிருந்து தப்பி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில், சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு என்பவர் தலைமறைவானார்.
இதற்கிடையில், கடந்த 5-ம் தேதி, மாக்கினாம்பட்டியில் பதுங்கியிருந்த திருநாவுக்கரசை கைதுசெய்த போலீஸார், அவரிடமிருந்துஇளம் பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய இரு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
பெண்ணின் அனுமதியின்றி ஆடைகளைக் களைவது, தொடுவது, ஆபாசமாக வீடியோ எடுத்து பாலியல் தொல்லை அளிப்பது, வழிப்பறி மற்றும் பெண் வன்கொடுமைச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சில வீடியோ காட்சிகள் வெளியாகி, வைரலாகப் பரவி வருகின்றன. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘இளம்பெண்ணை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, ஆனைமலையை அடுத்துள்ள சின்னப்பம்பாளையம் கிராமத்துக்கு அழைத்துச் செல்லும் சபரிராஜன், அங்குள்ள பண்ணை வீட்டில், அப்பெண்ணின் ஆடையைக் கிழித்து விடுகிறான். கிழிந்த உடையுடன் வெளியே செல்ல முடியாமல், மனதளவில் பாதிக்கப்பட்டு, அவமானத்தால் கதறி அழும் அந்தப் பெண்ணின் சூழ்நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மிரட்டியும், பெல்டால் அடித்தும், மேலாடைகளைக் களைந்த பின்னர், மற்றவர்களை உள்ளே வருமாறு கையால் சைகை செய்கிறான். மறைந்திருக்கும் கும்பல் அதை வீடியோவாக பதிவு செய்கிறது.
பின்னர், அந்த கும்பல் வீடியோவை பெண்ணிடம் காண்பித்து, அவர்களது இச்சைக்கு பலியாக்கியுள்ளது. அதையும் வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொள்கிறது. மேலும், பல பெண்களை மிரட்டி, பணம், நகைகளையும் பறித்துள்ளனர்.
பணம் கொடுக்க முடியாதநிலையில் உள்ள பெண்களை,அவர்களது நண்பர்களை மகிழ்விக்கப் பயன்படுத்தியுள்ளனர். இதற்காக, ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை நண்பர்களிடமிருந்து பெற்றுள்ளனர். இதை கடந்த 6 ஆண்டுகளாக, தொழிலாகவே செய்து வந்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர், பொள்ளாச்சியில் மருத்துவத் துறையைச் சேர்ந்த ஒருவரின் மனைவி, தனியார் கல்லூரிபேராசிரியை, கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் இளம் பெண்கள், சில குடும்பப் பெண்கள் என 60-க்கும் மேற்பட்டோர் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நண்பர்கள் வட்டத்தில், அரசியல் கட்சிப் பிரமுகர்களின் வாரிசுகளும் இருந்துள்ளனர்.
பொள்ளாச்சியை சேர்ந்த முக்கியப் பிரமுகரின் மகனின் தொடர்புஇக்கும்பலுக்குக் கிடைத்துள்ளது. கும்பலிடம் சிக்கிய கல்லூரி மாணவிகளை, அவர் காரில் வெளியூருக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
“திருநாவுக்கரசு பிடிபட்டால், இந்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்ற உண்மைவெளிவந்துவிடும் என்பதற்காவே, அவரைப் பிடிப்பதில் போலீஸார் காலதாமதம் செய்துள்ளனர். இதற்கிடையில், அரசியல் பிரமுகர்கள் சிலர் திருநாவுக்கரசை தொடர்புகொண்டு, அரசியல் கட்சியினர் யாருக்கும் இதில் சம்பந்தம் இல்லைஎன்று போலீஸில் கூறுமாறும்மிரட்டியுள்ளனர்.
அத்துடன், தலைமறைவாக சுற்றித் திரியாமல் போலீஸாரிடம் பிடிபட்டு விடுமாறும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தாலும், ஓராண்டில் வெளியே வந்துவிடலாம் என அறிவுறுத்தி உள்ளனர். அதன் பின்னரே, திருநாவுக்கரசு போலீஸிடம் பிடிபட்டுள்ளார். முக்கியப் பிரமுகரின் மகன் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் ஏதேனும் திருநாவுக்கரசிடம் உள்ளதா என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்” என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் கொடுக்கமுன்வந்துவிடக்கூடாது என்பதற்காக, போலீஸாரிடம் மட்டுமே கிடைத்த வீடியோக்களில் சிலவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். யாராவது புகார்கொடுக்க முன்வந்தால், அவர்களதுவீடியோக்களும் இதுபோல வெளியாகும் என மறைமுகமாக மிரட்டுவதற்காகவே இந்த வீடியோக்கள் வெளிவந்திருக்கலாம் என்று சமூக செயல்பாட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பொள்ளாச்சி சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‘மாணவிகளை, பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
இதனிடையே கோவை பாலியல் வழக்கில் சிக்கிய 4-வது வார்டுஅதிமுக அம்மா பேரவை செயலாளர் ஏ.நாகராஜ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பொள்ளாச்சிபாலியல் வழக்குக்கும், தமதுகுடும்பத்தாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பொள்ளாச்சியில் பெண் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இருந்துபெறப்பட்ட புகாரின் அடிப்படையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், ஒரு பெண்ணின் புகைப்படம், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான 4 வீடியோக்கள் உள்ளன. அந்த வீடியோவில் உள்ள பெண்களில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் தெரியாத மேலும் இரு பெண்கள் யார் என்பதைக் கண்டறிந்து, அனைவரிடமிருந்தும் புகார்கள் பெறப்படும். இந்த நபர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கலாம். அவர்களது புகார் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றார்.