மதன் பதுங்கியிருந்த பங்களாவில் ரூ.500. ரூ.1000 நோட்டு கட்டுகள் எரிப்பா?: போலீஸ் விசாரணை!
எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாகக் கூறி, 123 பேரிடம் ரூ.84 கோடியே 27 லட்சம் வசூல் செய்து மோசடி செய்ததாக ‘வேந்தர் மூவிஸ்’ நிர்வாகியும், திரைப்பட விநியோகஸ்தருமான மதன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, காசிக்குப் போய் கங்கையில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, கடந்த மே மாதம் 29ஆம் தேதி மாயமானார் மதன்.
போலீசாரால் கடந்த 6 மாதங்களாக தேடப்பட்டு வந்த அவர், திருப்பூரில் அவரது மனைவியின் சொந்தக்காரப் பெண்ணான வர்ஷா (வயது 38) என்பவரது பங்களாவில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, கடந்த 20ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
மதனை போலீசார் தேடுகிறார்கள் என தெரிந்தும், அவருக்கு அடைக்கலம் கொடுத்து, சட்டவிரோதமாக அவரை ஒளித்து வைத்திருந்த ஹர்ஷா பற்றி போலீஸ் வட்டாரங்களில் உலவும் தகவல்கள் வருமாறு:-
வேந்தர் மூவிஸ் மதனுக்கு ஏற்கெனவே 2 மனைவிகள். முதல் மனைவி சிந்து; இரண்டாவது மனைவி சுமலதா. இந்த சுமலதாவின் தூரத்து உறவுப்பெண் தான் ஹர்ஷா.
கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட பிரபல தொழிலதிபர் சண்முகம், அவரது மனைவி உஷா ஆகியோருக்கு ஒரே மகளாகப் பிறந்தவர் ஹர்ஷா. வியாபார தொழில் நிமித்தம் ஹர்ஷாவின் பெற்றோர் தமிழகத்துக்கு வந்து திருப்பூரில் குடியேற, ஹர்ஷா திருப்பூர் – தாராபுரம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார்.
ஆடை வடிவமைப்பில் ஆர்வம் இருந்ததால், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஃபேஷன் டிசைனிங் பட்டப்படிப்பை படித்து முடித்தார்.
இதனையடுத்து சினிமா துறையில் நுழைந்தார் வர்ஷா. சில நடிகர் – நடிகைகளுக்கு ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஸ்ரீராம் (வயது 16), தருண் (7) என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்த இரண்டு மகன்களும் தற்போது அவினாசி அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
நடிகர் – நடிகைகளுக்கு ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்து வந்த ஹர்ஷாவுக்கு, பல சினிமா பிரபலங்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் – மனைவிக்கு இடையே பிரச்சனை வெடித்து, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். அதன்பின் கடந்த 4 ஆண்டுகளுக்குமுன் விவாகரத்து பெற்று இருவரும் நிரந்தரமாக பிரிந்துவிட்டார்கள்.
கணவனை விட்டுப் பிரிந்த ஹர்ஷா, சில மாதங்கள் தன் பெற்றோருடன் வசித்து வந்தார். அதன்பின்னர், திருப்பூர் – அவினாசி சாலையில், எஸ்.ஏ.பி. திரையரங்க பேருந்து நிறுத்தம் எதிரில், ‘வி.எஸ். பொட்டிக்’ என்ற பெயரில் பெண்களுக்கான ஆடைகள் வடிவமைக்கும் நிறுவனத்தை கடந்த 2012ஆம் ஆண்டு சிறிய அளவில் தொடங்கினார்.
பிரபல தொழிலதிபர்களின் குடும்பத்தினர் எல்லாம் ஹர்ஷாவின் வாடிக்கையாளர்கள் ஆனார்கள். தொழில் கொஞ்சம் சூடு பிடிக்கத் தொடங்கியதால், ஹர்ஷா தனது 2 மகன்களுடன் அதே அவினாசி சாலையில், ஆஷர் மில் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். இவருடைய வீட்டுக்கு துணை நடிகைகள், நடிகர்கள் உள்ளிட்ட பலர் அவ்வப்போது வந்து சென்றார்கள். இதனால் அந்த குடியிருப்பு வாசிகள் அவரை அங்கிருந்து காலி செய்ய வற்புறுத்தினார்கள்.
கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, அவினாசி சாலையில், திருமுருகன் பூண்டி பகுதியில் உள்ள பிரமாண்டமான பங்களாவுக்கு குடி பெயர்ந்தார் வர்ஷா. கீழ்த்தளத்தில் இரண்டு படுக்கையறைகள், மிகப் பெரிய ஹால், சாப்பாட்டு அறை, சமையல் அறை, மேல்தளத்தில் இரண்டு படுக்கை அறைகள், சுற்றிலும் தோட்டம் என பிரமாண்டமாக இருக்கும் இந்த பங்களாவுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வாடகை கொடுத்து வருகிறார்.
மதனின் 2வது மனைவி சுமலதாவின் உறவினர் என்ற முறையில், ஏற்கெனவே சுமலதாவுடன் ஹர்ஷாவுக்கு பழக்கம் இருந்ததால், அந்த வகையில் வர்ஷாவுக்கு மதனின் நட்பு கிடைத்தது. சினிமாவில் நடிக்கும் ஆசையும் ஹர்ஷாவுக்கு இருந்ததால் பட தயாரிப்பாளரான மதனிடம் அவர் நெருங்கிப் பழகி வந்தார். மதனும் பட வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறியதால், அவர்களிடையே நெருக்கம் அதிகரித்தது. மதன் அடிக்கடி வர்ஷா வசிக்கும் பங்களாவுக்கு போய் வருவாராம்.
இந்நிலையில், காசிக்குப் போய் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, மணிப்பூருக்குப் போய் தலைமறைவாக இருந்த மதன், வர்ஷாவிடம் அடிக்கடி போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். மேலும், வர்ஷாவும் சமீபத்தில் அலைபேசி எண்ணை மாற்றியுள்ளார். அதிலும், மதன் பல முறை தொடர்புகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஒரு மாத காலத்துக்கு முன்பே மதன் திருப்பூர் வந்து, ஹ்ர்ஷாவின் பங்களாவில் தலைமறைவு வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார். பகல் நேரங்களில் மதன் வெளியே வருவதில்லை.
வர்ஷா வீட்டில் விலை உயர்ந்த 2 சொகுசு கார்கள் உள்ளன. அந்த கார்களில் மதனை கோவைக்கு அடிக்கடி அழைத்துச் சென்றுள்ளார் வர்ஷா. அப்போது, மதனை பின்பக்கம் அமர வைத்துக்கொண்டு, வர்ஷாவே காரை ஓட்டியுள்ளார். காரின் கண்ணாடிப் பகுதியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் குடியிருப்புப் பகுதியில் இருந்தவர்களுக்கு எவ்வித சந்தேகமும் எழவில்லை.
மதனும், வர்ஷாவும் கோவைக்கு எங்கு சென்றார்கள்? எதற்காக சென்றார்கள்? யாரை போய் பார்த்தார்கள் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதன் வெளியே போய் வருவதற்காக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளும் வாங்கி இருக்கிறார்கள். இரவு 7 மணிக்கு மேல் அந்த மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி மதன் திருப்பூரை வலம் வந்துள்ளார். ஹர்ஷாவின் பங்களா அருகே சோதனைச்சாவடி இருந்தும், மாநகர போலீசாரின் வாகன சோதனையில் சிக்காமல், ஹெல்மெட் அணிந்தபடி மதன் வலம் வந்தது பலருக்கும் ஆச்சரியம். இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வர்ஷாவின் பங்களாவில் பதுங்கியிருந்து தலைமறைவு வாழ்க்கை வாழ் ந்து வந்த மதனை, சென்னையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் கைது செய்ததுடன், அந்த பங்களாவில் இருந்த அலைபேசிகள், மடிக்கணினி ஆகியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர். அத்துடன், செய்தியாளர்களிடம் எதுவும் பேசக் கூடாது எனவும் ஹர்ஷாவுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதனால் பயந்துபோய் இருக்கிறார் ஹர்ஷா. கடந்த 3 நாட்களாக தனது ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை அவர் திறக்கவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார். செய்தியாளர்கள் பலர் அவரது பங்களா முன் கூடியிருக்கிறார்கள்ள். ஆனால் வர்ஷா வெளியே தலைகாட்டவில்லை.
இந்நிலையில், திருமுருகன் பூண்டி பேரூராட்சி சார்பில் பெண்கள் சிலர் கொசு மருந்து அடிக்க நேற்று வந்துள்ளனர். அப்போது, அவர்களிடம் “வெளியே மட்டும் அடித்துவிட்டுச் செல்லுங்கள்” என்று பங்களாவுக்குள் இருந்தபடியே கூறியிருக்கிறார் வர்ஷா. கதவைத் திறந்து அவர் யாரிடமும் பேசவில்லை.
அவரது பங்களாவின் பின்புறம், மதன் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் ‘செல்லாது’ என அறிவிக்கப்ப்ட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுக் கட்டுகள் போன்றவை ரகசியமாக எரிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். ரூ.84 கோடியே 27 லட்சம் மோசடி தொடர்பான வழக்கில் மதன் கைது செய்யப்பட்டுள்ளதால், அவரிடமிருந்து எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என்ற கேள்வி நீதிமன்றத்தில் எழும். எனவே ஹர்ஷாவின் பங்களாவில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் எரிக்கப்பட்டனவா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.