எழுத்தாளர் துரைகுணா மீது பொய் வழக்கு: போலீஸ் அராஜகம்!

குற்றமும், வன்மமும், பழிவாங்கும் உணர்ச்சியும் போலீசின் இயல்பு பண்புகளாக மாறிவிட்டது. தங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்கிற காரணத்திற்காக என்ன வேண்டுமானாலும் போலீஸ் செய்யலாம், யாரை வேண்டுமானாலும் சித்ரவதை செய்யலாம், பொய் வழக்கு போடலாம் என்கிற நிலை கொஞ்சம் கூட தமிழகத்தில் குறைந்ததாக தெரியவில்லை.

கடந்த 10.06.2016 அன்று காலை 5.30 மணியளவில் கறம்பக்குடி கிராமத்தில் உறங்கிக் கொண்டிருந்த எழுத்தாளர் துரை குணா (எ) குணசேகரனையும், மனித உரிமை ஆர்வலர் பூபதி கார்த்திகேயனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

என்ன குற்றம் செய்தனர் துரை குணாவும், பூபதி கார்த்திகேயனும்? சிவானந்தம் என்பவரை இவர்கள் இருவரும் கடுமையாக தாக்கி கத்தியால் குத்தினார்களாம்.

கத்திக்குத்துப் பட்டு காயமடைந்ததாக சொல்லப்படுகிற சிவானந்தம் தற்போது எமது எவிடன்ஸ் அமைப்பின் பாதுகாப்பில் இருக்கிறார். அவரது உடம்பில் சின்ன கீறல்கூட கிடையாது.

கறம்பக்குடியில் பர்னிச்சர் கடை வைத்திருக்கிறார் பூபதி கார்த்திகேயன். இவரது உறவினர் தான் சிவானந்தம். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிவானந்தம் ரூ.50,000 கடனுக்கு பூபதி கார்த்திகேயனிடம் பொருள் வாங்கியிருக்கிறார். இதில் கடந்த மாதம் ரூ.42,000 கொடுத்திருக்கிறார். மீதித் தொகை ரூ.8,000 கொடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 09.06.2016 அன்று இரவு 8.00 மணியளவில் பூபதி கார்த்திகேயன் கடை முன்பு சிவானந்தம் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த பூபதி கார்த்திகேயன், சிவானந்தத்தை அழைத்து கடன் தொகையான ரூ.8,000-ஐ எப்போது கொடுப்பாய் என்று கேட்டிருக்கிறார். இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஆபாசமாகவோ இழிவாகவோ எந்தவிதமான பேச்சும் இல்லாமல் உரக்க பேசியிருக்கின்றனர்.

பூபதி கார்த்திகேயனிடம், “என்ன சித்தப்பா, நான் பணத்தை கொடுக்காமல் உங்களை ஏமாற்ற மாட்டேன்” என்று கூறிவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார் சிவானந்தம். இரவு 9.00 மணியளவில் கறம்பக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மெய்யப்பன் என்பவர், சிவானந்தம் வீட்டிற்கு வந்து, உனக்கும் பூபதி கார்த்திகேயனுக்கும் என்ன தகராறு? என்று கேட்டிருக்கிறார். அதற்கு சிவானந்தம், எங்கள் இருவருக்கும் ஒரு தகராறும் இல்லை. நாங்கள் உறவினர்கள் என்று கூறியிருக்கிறார். அப்படியா உங்கள் பிரச்சனையை இன்ஸ்பெக்டர் அய்யா சகாயம் அன்பரசு முடித்து வைக்க சொல்லியிருக்கிறார். நீ இந்த வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து போடு, கொடுக்கல் வாங்கல் பிரச்சனையை நாங்கள் முடித்து வைக்கிறோம் என்று கூற, கையெழுத்து போட சிவானந்தம் தயக்கம் காட்டியிருக்கிறார். ஆனால் மெய்யப்பன் மிரட்டி சிவானந்தத்திடம் வெற்று வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், சிவானந்தத்தை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ஆலங்குடி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்திருக்கிறார் சார்பு ஆய்வாளர் மெய்யப்பன். தனக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்த சிவானந்தம், என்ன சார் எனக்கு எதுவும் இல்லை. ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு உன்னை மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லியிருக்கிறார். நீ மருத்துவமனையில் இருந்தால் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை எளிதாக முடியும் என்று கூறியிருக்கிறார் மெய்யப்பன்.

மறுநாள் காலையில் பூபதி கார்த்திகேயனும்,  துரைகுணாவும் கைது செய்யப்பட்டதை அறிந்த சிவானந்தம், காவல் நிலையத்திற்கு போன் செய்து, என்னை யாரும் கத்தியால் குத்தவில்லை,. எதற்கு தேவையில்லாமல் இருவரையும் கைது செய்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, மரியாதையாக போனை வைடா என்று போலீசார் சிவானந்தத்தை மிரட்டியிருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் போலீசார், ஆலங்குடி மருத்துவமனை மருத்துவரிடம் சிவானந்தத்திற்கு நெஞ்சு வலி இருக்கிறது. மேல்சிகிச்சை எடுக்க வேண்டும் என்று கூற, ஆலங்குடி மருத்துவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிவானந்தத்தை அழைத்து செல்ல பரிந்துரை செய்திருக்கிறார். போகிறபோது போலீசார் சிவானந்தத்திடம் உன் கையை காயப்படுத்த வேண்டும். அப்போதுதான் வழக்கு பலமாக மாறும் என்று கூற, சிவானந்தம் அதற்கு உடன்பட மறுத்துவிட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட துரைகுணாவும் பூபதி கார்த்திகேயனும் சிறையில் அடைக்கப்பட்டனர். நான், சிவானந்தத்தை தொலைபேசியில் அழைத்து உண்மையில் என்ன நடந்தது என்று கேட்டேன். சிவானந்தம் என்னிடத்தில், சார் உங்களை நான் சந்திக்க விரும்புகிறேன். நீங்கள் வர முடியுமா? என்று கேட்டார்.

நான் எமது குழுவினருடன் நேற்று 12.06.2016 அன்று கறம்பக்குடி பகுதிக்கு சென்றேன். சிவானந்தத்தையும் அவரது பெற்றோரையும் சந்தித்தேன். மூவரும் என் கைகளை பிடித்துக் கொண்டு, அய்யா எங்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. போலீசார் வேண்டுமென்றே பொய் வழக்கு போட்டுள்ளனர் என்று கூறினார்கள். சிவானந்தம் என்னிடத்தில், எழுத்தாளர் துரைகுணா என்பவர் யாரென்று கூட எனக்கு தெரியாது. என்னை மிரட்டியே போலீசார் கையெழுத்து வாங்கினார்கள். இதுபோன்று சதி வேலையில் ஈடுபடுவார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்று கண் கலங்கினார்.

நான், சிவானந்தத்தை அழைத்துக் கொண்டு துரைகுணாவின் மனைவி கோகிலாவையும் தாயாரையும் சந்திக்க வைத்தேன். அப்போது துரைகுணாவின் மனைவி கோகிலாவிடம் சிவானந்தம், அக்கா எனக்கு உங்கள் வீட்டுக்காரர் யாரென்று கூட தெரியாது. நான் எந்த புகாரும் கொடுக்கவில்லை. போலீசார் என்னிடம் வெற்று வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறினார்.

எதற்காக பூபதி கார்த்திகேயனும், துரைகுணாவும் கைது செய்யப்பட வேண்டும். கறம்பக்குடி காவல்ஆய்வாளர் சகாயம் அன்பரசு பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டு வருபவர். இவருக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்திருக்கின்றனர் பூபதி கார்த்திகேயனும் துரைகுணாவும். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணச்சநல்லூரில் காவல் ஆய்வாளராக இருந்த சகாயம் அன்பரசு, பாலியல் வன்முறை ஒன்றில் ஈடுபட்டிருக்கிறார். அந்த செய்தி தினமலர் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அந்த செய்தியை துரைகுணா பரப்புரை செய்தார் என்கிற வன்மம் சகாயம் அன்பரசுவிற்கு இருந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கறம்பக்குடியில் சகாயம் அன்பரசின் அத்துமீறலை நேரடியாக எதிர்த்து கேள்வி கேட்டவர் பூபதி கார்த்திகேயன். ஆகவே இவர்களை பழிவாங்க பயன்படுத்திய துருப்புச்சீட்டு தான் சிவானந்தம்.

இந்த வழக்கு பொய் வழக்கு என்று ஆரம்பம் முதல் நான் தொலைபேசியில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹெத்மனியிடம் கூறியிருந்தேன். ஆனால் காவல் கண்காணிப்பாளர் கண்டிப்பாக இது பொய் வழக்கு கிடையாது. சிவானந்தத்தின் மீது காயங்கள் இருப்பது உண்மை என்று கூறினார். ஆனால் தற்போது சிவானந்தத்தின் மீது காயங்கள் இல்லை என்பதை அறிந்த எஸ்பி, மருத்துவர்கள் கொடுத்த பதிவேடு மூலமாகத்தான் அவர்கள் இருவரையும் கைது செய்து ரிமாண்ட் செய்தோம் என்று பழியை ஆலங்குடி அரசு மருத்துவர்கள் மீது போடுகிறார்.

சகாயம் அன்பரசும் மெய்யப்பனும் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். இவர்கள் இருவர் மீதும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். எஸ்பி மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த வழக்கினை விசாரிப்பதற்கு ஐஜியை நியமிக்க வேண்டும். காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசுவை காப்பாற்ற எஸ்பி முயற்சி மேற்கொண்டால் அந்த குற்றத்திற்கு அவரும் பொறுப்பேற்க வேண்டுமென்பதை எழுத்தாளர்களும், கலைஞர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

நமது குரல்கள் மதிப்பு இல்லாததா என்ன?

– எவிடன்ஸ் கதிர்

சமூக ஆர்வலர்

(மேலே உள்ள படத்தில், போலீஸ் நிலையத்தில் தரையில் உட்கார வைக்கப்பட்டிருப்பவர் – எழுத்தாளர் துரைகுணா)