பொய்க்கால் குதிரை – விமர்சனம்

நடிப்பு: பிரபு தேவா, வரலட்சுமி சரத்குமார், பேபி ஆழியா, ஜெகன், ரைசா வில்சன், பிரகாஷ்ராஜ், ஜான் கொக்கென் மற்றும் பலர்

இயக்கம்: சந்தோஷ் பி.ஜெயக்குமார்

தயாரிப்பு: ’டார்க் ரூம் பிக்சர்ஸ் & மினி ஸ்டுடியோஸ்’ சார்பில் எஸ்.வினோத்குமார்

இசை: டி.இமான்

ஒளிப்பதிவு: பல்லு

மக்கள் தொடர்பு: யுவராஜ்

அப்பா- மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் வெளிவந்துள்ள போதிலும், ’சின்னஞ்சிறு சிறுமியான தன் மகளைக் காப்பாற்ற ஒற்றைக் காலுடன் போராடும் ஓர் எளிய தந்தையின் கதை’ என்ற ஒருவரிக் கதையால் ‘பொய்க்கால் குதிரை’ திரைப்படம் தனித்துவத்துடன் திகழ்ந்து கவனம் ஈர்க்கிறது.

0a1d

கதையின் நாயகன் கதிரவன் (பிரபுதேவா) கோரவிபத்து ஒன்றில் மனைவியையும், தனது இடது காலின் முட்டிக்குக் கீழ் உள்ள பகுதியையும் இழந்தவர். தாயில்லாப் பிள்ளையான தனது 8 வயது மகளை (ஆழியா) உயிருக்கு உயிராக நேசித்து, அவளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்து கண்ணும் கருத்துமாக கவனித்து வருபவர்.

விபத்து இழப்புக்கு ஈடாகக் கிடைத்த பணத்தில் மகளை பணக்கார பள்ளியில் படிக்க வைக்க கதிரவன் நினைக்கிறார். ஆனால் மகளோ, அடம்பிடித்து, அந்த பணத்தில் அப்பாவுக்கு செயற்கைக் கால் வாங்கி பொருத்தச் செய்து விடுகிறாள்.

இந்நிலையில், மகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, பிறப்பிலிருந்தே அவளுக்கு இதய வால்வுக் கோளாறு இருந்துவருவது இப்போது தெரிய வருகிறது. கதிரவன் அதிர்ந்துபோகிறார். ஒன்றரை மாதங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்தால் தான் அவளது உயிரைக் காப்பாற்ற முடியும் என்றும். அதற்கு 70 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் கூறுகிறது கார்ப்பரேட் மருத்துவமனை நிர்வாகம்.

அவ்வளவு பெரிய தொகையை திரட்ட வழி தெரியாமல் தவிக்கும் கதிரவன், சிறைக்கைதியாக இருக்கும் தனது அப்பாவை (பிரகாஷ்ராஜ்) போய் பார்க்கிறார். பெரிய தொழிலதிபரான ருத்ராவின் (வரலட்சுமி சரத்குமார்) மகளை கடத்தி, மிரட்டி, பணம் பறித்தால், அந்த பணத்தைக் கொண்டு மருத்துவ சிகிச்சை செய்துவிடலாம் என்று யோசனை சொல்லுகிறார் அப்பா.

வேறுவழி இல்லாமல் அந்த யோசனையை ஏற்றுக்கொள்ளும் கதிரவன், தன் நண்பனோடு (ஜெகன்) சேர்ந்து ருத்ராவின் மகளைக் கடத்தும் முயற்சியில் இறங்க, ஆனால் அவர்களுக்கும் முன்பாகவே யாரோ அச்சிறுமியைக் கடத்திச் சென்றுவிடுகிறார்கள். பழி கதிரவன் மீது விழுகிறது.

ருத்ராவின் மகளைக் கடத்தியது யார்? கதிரவனின் மகளது உயிர் காப்பாற்றப்பட்டதா, இல்லையா? என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது படத்தின் மீதிக்கதை.

0a1e

ஒற்றைக்கால் கொண்ட நாயகன், அன்பான அப்பா, அதிரடி ஆக்சன் ஹீரோ ஆகிய மூன்று முக்கிய குணாம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு தனது சிறப்பான நடிப்பு மூலம் உயிரூட்டியிருக்கிறார் பிரபு தேவா. ஒற்றைக்காலில் ஆடும் ஆட்டம், போடும் சண்டைகள் என அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் தொழிலதிபராகவும், ஒரு சிறுமியின் தாயாகவும் வருகிறார் வரலட்சுமி சரத்குமார். செல்வச் செழிப்பான அவரது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடை, உடை, மிடுக்கு… எல்லாம் பிரமாதம். ஆனால் பல இடங்களில் அவரது பேச்சுத்தமிழ் புரியவே இல்லை. அவர் தமிழ் உச்சரிப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது வேறு யாரையாவது டப்பிங் பேச வைப்பது நல்லது.

மிகவும் சீரியசான படம் இது என்பதால், ஜெகனும் காமெடி பண்ணாமல் சீரியசாக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இவர் ஹீரோவின் நண்பனா, வில்லனா என்று குழம்பிப்போகுமளவுக்கு ட்விஸ்ட் ஏற்படுத்துவது அருமை. நாயகனின் அப்பாவாக கவுரவ வேடத்தில் வரும் பிரகாஷ்ராஜ், வில்லனாக வரும் ஜான் கொக்கென் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கி, கதையில் திருப்பங்கள் நிகழ உறுதுணை புரிந்திருக்கிறார்கள்.

ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற இன்னொரு குழந்தையை கடத்த வேண்டும் என்பது மனம் ஒப்ப மறுக்கும் கதைக்கரு. என்றாலும், இக்கதைக்கருவை திரைக்கதை மூலமும், காட்சிப்படுத்துதல் மூலமும் பார்வையாளர்களை ஏற்கச் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அவர் ஆபாசமான ‘அடல்ட் காமெடி’ ஜானரிலிருந்து விலகிவந்து ஒற்றைக்கால் மனிதனின் கதையை உணச்சிப்பூர்வமாக சொல்லியிருப்பது வரவேற்கத் தக்கது. பணம் பிடுங்கும் பேயாக அலையும் கார்ப்பரேட் மருத்துவமனைகளையும், அப்பாவிகளின் பரிதாப நிலையைப் பயன்படுத்தி மோசடி செய்யும் என்.ஜி.ஓ.க்களையும் போகிற போக்கில் இயக்குனர் அம்பலப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது. கீப்-இட்-அப்.

டி.இமானின் இசையும், பல்லுவின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.

’பொய்க்கால் குதிரை’ – மெய்யாகவே குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்!