போகுமிடம் வெகு தூரமில்லை – விமர்சனம்

நடிப்பு: விமல், கருணாஸ், மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், தீபா சங்கர், சார்லஸ் வினோத், மனோஜ் குமார், பவன், அருள்தாஸ், வேல ராமமூர்த்தி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: மைக்கேல் கே.ராஜா

ஒளிப்பதிவு: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்

படத்தொகுப்பு: எம்.தியாகராஜன்

இசை: என்.ஆர்.ரகுநந்தன்

தயாரிப்பு: ‘ஷார்க் 9 பிக்சர்ஸ்’ சிவா கில்லாரி

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)

சென்னையில்  ‘அமரர் ஊர்தி’ எனப்படும் ’சவக்கிடங்கு வேன்’ டிரைவராகப் பணிபுரிகிறார் நாயகன் குமார் (விமல்). மருத்துவமனைப் பிணவறைகளில் வைக்கப்பட்டிருக்கும் சடலங்களை ஏற்றிச்சென்று உரிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் வேலை அவருடையது. அவரது வேனின் பின்புறக் கண்ணாடியில், ’போகுமிடம் வெகு தூரமில்லை’ என்ற மிகவும் ஆழ்ந்த தத்துவக் கருத்துள்ள வாசகம் எழுதப்பட்டிருக்கும். அதுவே இப்படத்துக்குத் தலைப்பாக, மிகப் பொருத்தமாக வைக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரத்துக்குள் நடந்து முடிந்துவிடுவதாக கட்டமைக்கப்பட்டுள்ள இப்படக்கதையை – அறிமுக இயக்குநர் போல் இல்லாமல், அனுபவமிக்க இயக்குநர் போல் – அருமையாக, புதுமையாக எழுதி, பிரமாதமாக, சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் மைக்கேல் கே.ராஜா.

நாயகன் குமாரின் மனைவி கலையழகி (மேரி ரிக்கெட்ஸ்). நிறைமாத கர்ப்பிணி. ஏற்கெனவே இரண்டு முறை கர்ப்பம் தரித்தும், குழந்தை பாக்கியம் கூடி வராததால், இம்முறையாவது மனைவிக்கு சுகப் பிரசவம் ஏற்பட்டு தாயும் சேயும் நலமாக வீடு திரும்ப வேண்டும் என்று நினைக்கும் குமார், இடுப்புவலி கண்ட மனைவி கயலழகியை மிகவும் பிரபலமான, மிகவும் காஸ்ட்லியான மருத்துவமனை ஒன்றில் சேர்க்கிறார். மனைவியின் அருகிலேயே இருந்து கவனிக்க வேண்டும் என்று விரும்பினாலும், மருத்துவமனை செலவுக்கு பெரிய தொகை தேவைப்படும் என்ற கவலையில், மனைவியை தாத்தா பொறுப்பில் விட்டுவிட்டு, ட்யூட்டிக்குக் கிளம்பிப் போகிறார்.

நல்வாய்ப்பாக, ஒரு பெரிய தொகை கூலியாகக் கிடைக்கும் வகையில், ஒரு பிணத்தை வெகு தூரத்திலுள்ள திருநெல்வேலிக்கு ஏற்றிச்செல்லும் வேலை கிடைக்கிறது குமாருக்கு. திருநெல்வேலியில் பிரபலமாகத் திகழும் ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பெரியவரது பிணம் அது. சென்னையில் நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி, அடையாளம் காண முடியாத அளவுக்கு அவரது முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டதால், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை துணியால் போர்த்தி, இறுகக் கட்டிய பிணத்தை வேனில் ஏற்றிக்கொண்டு, திருநெல்வேலிப் பயணத்தைத் தொடங்குகிறார் குமார்.

பெரியவரின் பிணம் வந்து சேர்ந்தால், அதற்கு இறுதிக்காரியம் செய்து கொள்ளி வைப்பது யார் என்பது தொடர்பாக, திருநெல்வேலியில், அவருடைய பிள்ளைகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரியவரின் சட்டபூர்வமற்ற மனைவியின் பிள்ளைகளான இசக்கி (பவன்), ஆவுடையம்மாள் (தீபா சங்கர்) ஆகியோர் அப்பாவின் சடலத்தை தங்கள் வீட்டில் இறக்கி, தாங்கள் தான் காரியம் செய்து, சிதைக்கு தீ மூட்ட வேண்டும் என்று முடிவெடுத்து, அவர்கள் செய்த ஏற்பாட்டில் தான் ‘அமரர் ஊர்தி’ குமார், பிணத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேனில் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். பெரியவரின் சட்டபூர்வ மனைவியின் மகனான சங்கரபாண்டியன் (ஆடுகளம் நரேன்) மற்றும் அவரது உறவினர்கள் இதை அறிந்து கொதிக்கிறார்கள். “அப்பாவின் உடல் நம் வீட்டுக்குத் தான் வர வேண்டும். நாம் தான் காரியம் செய்ய வேண்டும். அந்த வாய்ப்பை சட்டபூர்வமற்ற மனைவியின் பிள்ளைகளுக்கு கொடுத்துவிடக் கூடாது” என்று தாண்டிக் குதிக்கும் சங்கரபாண்டியன் வகையறா, பிணம் இசக்கி வீட்டுக்கு வந்தால் அதை எப்படி கைப்பற்றுவது என்று முரட்டு ஆலோசனைகள் செய்கிறார்கள். இதை அறிந்த இசக்கி வகையறா, சங்கரபாண்டியன் வகையறாவின் முயற்சியை முறியடிக்க, ஆட்களைத் திரட்டி தயாராக இருக்கிறார்கள். இதனால் சட்டம் – ஒழுங்குப் பிரச்சனை ஏற்பட்டு விடும் என்று கவலைப்படும் போலீஸ், இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த முயன்று, முடியாததால், விழி பிதுங்கி நிற்கிறது.

இது ஒருபுறமிருக்க, தெருக்கூத்துக் கலைஞரான நளினமூர்த்தி (கருணாஸ்), தனது அபாரமான நடிப்பாற்றலுக்குப் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் மனம் வெறுத்து, கூத்துக்கு பயன்படுத்தும் தன்னுடைய துணிமணிகள், அணிமணிகள் அனைத்தையும் நெருப்பில் போட்டு எரிக்கிறார். பின்னர் சாலையில் டோல்கேட் ஓரம் நின்று, அந்த வழியே பிணத்தை ஏற்றிவரும் குமாரின் வேனில் லிஃப்ட் கேட்டு கெஞ்சுகிறார். லிஃப்ட் கொடுக்க குமார் முன்வராத போதிலும், அவரது வேன் சில அடிகள் தூரம் சென்று ஆஃப் ஆகி நின்றுவிடுகிறது. இப்போது யாராவது தள்ளிவிட்டால் தான் வேன் ஸ்டார்ட் ஆகும் என்ற நிலையில், சற்றுமுன்பு தன்னிடம் லிஃப்ட் கேட்ட நளினமூர்த்தியை அழைக்கிறார் குமார். நளினமூர்த்தி மகிழ்ச்சியுடன் ஓடி வந்து, வேனை தள்ளிவிட்டு, ஸ்டார்ட் ஆனபின் அதில் ஏறி உட்கார்ந்துகொள்கிறார்.

குமாருக்கு நளினமூர்த்தியைக் கண்டாலே பிடிக்கவில்லை. அதிலும், நளினமூர்த்தி தொணத் தொண என பேசிக்கொண்டே இருப்பது குமாருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. அதட்டி தனது கோபத்தை அப்பட்டமாகக் காட்டிக்கொள்கிறார் குமார். இப்படியாக, குணநலன்களில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இருவரும் முரண்பாடுகளுடன் சேர்ந்து பயணத்தைத் தொடர்கிறார்கள்.

வழியில் ஒரு காதல் ஜோடி தலைதெறிக்க ஓடி வருகிறது. பெண்ணின் அப்பா (அருள்தாஸ்) அனுப்பிய ரவுடிக் கும்பல் தங்களை கொலை செய்ய துரத்திக்கொண்டு வருவதாகச் சொல்லி குமாரிடம் லிஃப்ட் கேட்கிறது. குமார் முதலில் மறுத்தபோதிலும், நளினமூர்த்தியின் பிடிவாதமான வற்புறுத்தலுக்கு இணங்கி காதல் ஜோடியை வேண்டாவெறுப்பாக வேனில் ஏற்றிக்கொள்கிறார். இதனால் ரவுடிக்கும்பல் குமாரின் வேனைத் துரத்தி வந்து மடக்க, அவருக்கும், ரவுடிகளுக்கும் பெரிய மோதல் ஏற்படுகிறது. ரவுடிகளைத் தோற்கடித்து காதல் ஜோடியை பத்திரமாக்க் கொண்டுபோய் காதலனின் வீட்டில் சேர்க்கிறார்கள். நன்றிப்பெருக்குடன் குமாரின் காலில் விழுந்து வணங்குகிறான் காதலன். நளினமூர்த்தியின் பேச்சைக் கேட்டதால் தான் தனக்கு இந்த மரியாதை என்று புளகாங்கிதம் அடையும் குமார், அதன்பின் நளினமூர்த்தியை வெறுப்பதைக் கைவிடுகிறார். இருவருக்கும் இடையே ஓர் ஆத்மார்த்தமான நட்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில், குமாரின் வேனில் இருந்த பிணம் திடீரென மாயமாகி விடுகிறது. குமாரும் நளினமூர்த்தியும் அதிர்ச்சி அடைகிறார்கள். பிணம் எப்படி மாயமானது? யார் கடத்திச் சென்றிருப்பார்கள்? தங்களிடம் அடிவாங்கிய ரவுடி கும்பலா? அல்லது திருநெல்வேலியில் சடலத்தைக் கைப்பற்ற சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் சங்கரபாண்டியன் கும்பலா? என்று குழம்பித் தவிக்கிறார்கள். போன் போட்டு, “எங்க அப்பா பாடி எப்ப வந்து சேரும்?” என்று மிரட்டலாக விசாரிக்கும் இசக்கி வகையறாவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குமார் பதறுகிறார். இசக்கியின் அப்பா சடலம் கிடைக்க வேண்டும், இல்லையென்றால், ஏதாவது ஒரு சடலம் கிடைத்தால் கூட, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை துணியால் போர்த்தி, இறுகக் கட்டி, கொண்டுபோய் “இதுதான் உங்க அப்பா சடலம்” என்று ஒப்படைத்துவிட்டு ஓடி வந்துவிடலாம் என்று மூளையைப் போட்டு குடைகிறார் குமார்.

மாயமான பெரியவரின் சடலம் கிடைத்ததா? அது கிடைக்கவில்லை என்ற பட்சத்தில், வேறு யாருடைய சடலமாவது குமாருக்குக் கிடைத்ததா? இந்த இமாலயப் பெருஞ்சிக்கலிலிருந்து குமார் மீண்டாரா? எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத ட்விஸ்ட் உடன் எமோஷனலாக விடை அளிக்கிறது ‘போகுமிடம் வெகு தூரம் இல்லை’ திரைப்படத்தின் மீதிக்கதை.

மரணித்தவர்களின் சடலங்களைக் கொண்டு செல்லும் ’அமரர் ஊர்தி’யின் டிரைவர் குமார் கதாபாத்திரத்தில் விமல் நடித்திருக்கிறார். இதுவரை அவர் ஏற்று நடிக்காத, வித்தியாசமான, அழுத்தமான கதாபாத்திரம் இது. இதனால், கதாபாத்திரத்தை சரியாக உள்வாங்கி, வித்தியாசமாக, அலட்டல் இல்லாமல் மிகவும் யதார்த்தமாக, தன் கதாபாத்திரத்துக்குத் தேவையான அளவு மட்டும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறைவாக வசனம் பேசி, நிறைவாக முகபாவனைகள் மூலம் உணர்ச்சிகளை பார்வையாளர்களுக்குக் கடத்தும் அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ‘களவாணி’ படம் போல இந்தப்படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுக்கும்.

விரக்தியின் விளிம்பில் இருக்கும் தெருக்கூத்துக் கலைஞர் நளினமூர்த்தி கதாபாத்திரத்தில் கருணாஸ் நடித்திருக்கிறார். அவர் வாழ்நாளெல்லாம் நினைத்தும், சொல்லியும் பெருமைப்பட்டுக்கொள்ளத் தக்க பிரமாதமான குணச்சித்திர கதாபாத்திரம். மனுசன் பின்னியெடுத்து விட்டார். போக்குவரத்து செலவுக்குக் கூட பணம் இல்லாமல், கெஞ்சிக் கூத்தாடி அமரர் ஊர்தியில் ஏறிக்கொள்ளும் அவர், வழிநெடுக செய்யும் சேட்டைகளும், அலப்பரைகளும், அப்பாவித்தனமும், நகைச்சுவையும், மனிதாபிமானமும், வாழ்க்கை பற்றிய புரிதலும் சிறப்போ சிறப்பு. “உயிரைக் கொடுத்து” நடிப்பதாக வழக்கமாக சொல்வோமே… அது அப்படியே கருணாசுக்குப் பொருந்தும். ‘பிறருக்கு உதவுவது தான் தெய்வாம்சம்’ என்பதை நாயகனுக்கு உணர்த்துவதோடு, தானே அதற்கோர் உதாரணமாகவும் வாழ்ந்து காட்டியிருக்கிறார். படம் முடிந்து வெளியே வரும் எந்த கல்நெஞ்சக்காரனும் கருணாஸை நினைத்து கண் கலங்காமல் இருக்க முடியாது. விருதுகள் கொடுத்து கருணாஸை நல்ல முறையில் கௌரவிக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

நாயகனின் மனைவி, நிறைமாதக் கர்ப்பிணி  கலையழகியாக வரும் மேரி ரிக்கர்ட்ஸ், மரணித்த பெரியவரின் சட்டபூர்வ மனைவியின் மகன் சங்கரபாண்டியனாக வரும் ஆடுகளம் நரேன், சட்டபூர்வமற்ற மனைவியின் மகன் இசக்கியாக வரும் பவன், அவரது உடன்பிறந்த சகோதரி ஆவுடையம்மாளாக வரும் தீபா சங்கர், காதலனுடன் ஓடிவரும் பெண்ணின் அப்பாவாக வரும் அருள்தாஸ், சண்முகமாக வரும் சார்லஸ் வினோத், மற்றும் மனோஜ் குமார், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இந்த  விமர்சனத்தின் ஆரம்பத்திலேயே சொன்னதைப் போல, அறிமுக இயக்குநர் போல் இல்லாமல், அனுபவமிக்க இயக்குநர் போல் அருமையாக, புதுமையாக எழுதி, பிரமாதமாக, சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் மைக்கேல் கே.ராஜா. துல்லியமான குணநலன்களுடன் கதாபாத்திரங்களை சிறப்பாக வடிவமைத்து, அவற்றுக்குப் பொருத்தமான நடிப்புக் கலைஞர்களை தேர்வு செய்து, கடினமாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர். சலனமில்லா நீரோடை போல் ஆரம்பத்தில் அமைதியாக படத்தை நகர்த்திச் செல்லும் இயக்குநர், “பிணத்தைக் காணோம்” என்றவுடன் திடுக்கிட்டுப் போகும் பார்வையாளர்கள், இனி என்ன நடக்கும் என்று யூகிக்க இயலாமல், நிலச்சரிவில் சிக்கிய வயநாடு கிராம மக்கள் போல் மூச்சடைத்து திணறித் தான் போகிறார்கள். அதிலிருந்து எதிர்பாராத பல திருப்பங்கள் கொண்ட ’கொண்டை ஊசி வளைவு’களில் கதையை பயணிக்கச் செய்து, எமோஷனலாக படத்தை நிறைவு செய்திருக்கிறார் படைப்பாற்றலும், சாமர்த்தியமும் உள்ள இயக்குநர். பாராட்டுகள்.

டெமில் சேவியர் எட்வர்ட்ஸின் ஒளிப்பதிவு, எம்.தியாகராஜனின் படத்தொகுப்பு, என்.ஆர்.ரகுநந்தனின் இசை உள்ளிட்டவை இயக்குநரின் நேர்த்தியான மேக்கிங்குக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

’போகுமிடம் வெகு தூரமில்லை’ – வித்தியாசமான கதைக்காக ஏங்கும் ரசிகர்களுக்கு செம விருந்து! கண்டு களிக்கலாம்!