அந்த ‘கிளி’யை கொல்ல ஒரு வர்தா புயல் போதும்!

டிஜிட்டல் சாதனங்களை பற்றிய ‘நீயா நானா’வில் சுவாரஸ்யமான சொல்லாடல் ஒன்றை ஒருவர் அறிமுகப்படுத்தினார். Plug Point Anxiety!

‍‍‍‍‍‍சில வருடங்களுக்கு முன் வரை, டிவி ரிமோட் கண்ட்ரோலுக்கு அதிக தகராறை வீடுகளில் கண்டிருப்போம். அதன் விளைவாக அறைக்கு ஒரு டிவி என வாழ்க்கை மாற்றப்பட்டது. செல்பேசிகளின் பயன்பாடு ஒரே அறைக்குள் பல டிவிகள் என்ற நிலையை கொண்டு வந்தது. இப்போது plug point anxiety.

ஊருக்கு போகிறோம். முழுநாள் திட்டமாக வார இறுதியில் சுற்றுலா போகிறோம். நாம் கவலைப்படும் முதல் விஷயம், செல்பேசிக்குள் மின்சாரத்தை எப்படி நிரப்பி கொள்வது என்பதுதான். போகும் இடங்களில் ப்ளக் பாயிண்ட்டுகள் இல்லையெனில் அத்திட்டத்தையே ரத்து செய்கிறோம். மின்சாரம் இல்லாத இடங்கள் திட்டத்தில் நுழையக்கூட செய்யாது.

மனித வாழ்க்கையை எளிமை ஆக்க வேண்டிய விஞ்ஞானம் அதிக சிக்கல்களைத்தான் உருவாக்கியிருக்கிறது. ஏன்? எப்படி பார்த்தாலும் விஞ்ஞானம் மனிதனுக்கு நல்லதுதானே செய்திருக்க வேண்டும்? உண்மைதான். விஞ்ஞானம் அதன் அளவில் நன்மை பயப்பதுதான். அதை உபயோகப்படுத்துபவனின் நோக்கம் மாறுகையில் அதுவும் மாறுகிறது. அணுவை போல்.

லாபவெறிக்காக மட்டும் பயன்படுத்தப்படும் விஞ்ஞானம் அழிவுக்கு ஆனது. டிஜிட்டலாக நம்மை வந்தடையும் விஞ்ஞானம் லாபங்களை எதிர்நோக்கியது. அதற்கு மனிதன் தேவை இல்லை. மனிதன் ஈட்டும் பணம்தான் தேவை. மனிதனின் இயல்பு பேராசை. நுகர்வு வெறிக்கு அடிப்படை பேராசை.

அதிகபட்சம் இரண்டு பளக் பாயிண்ட்கள் இருக்கும் அறையில் பலர் இருக்கும் சூழலை யோசித்து பாருங்கள். நட்பு, உறவு, வாழ்க்கையே கூட முடிவது ப்ளக் பாயிண்ட்டுகள் கிடைக்காமல் போவதால் இருக்கலாம். அதிலும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், யூ ட்யூப், மெஸேஜிங் என மொத்த வாழ்க்கையையும் செல்பேசிகளில் புதைத்து கொள்ளும் தலைமுறையினருக்கு, ப்ளக் பாயிண்ட்டுகள்தான் மாய உலகின் மந்திரச்சாவிகள்.

உயர்மலைகள், அடர்காடுகள், பள்ளத்தாக்குகள், நதிகள் என உலகின் அழகு பொங்கும் இடங்கள் எதுவும் ப்ளக் பாயிண்ட்டுகள் கொண்டிருப்பதில்லை. எத்தனை சார்ஜ் போட்டாலும் நிம்மதி நீடிப்பதில்லை. மூளைக்கான முழு மின்சாரத்தை கடத்தும் பவர் அடாப்டர்களும் இல்லை.  மிஞ்சுவதெல்லாம் அதே மனிதர்கள்தான். வீடுதான். இயற்கைதான். இவற்றை மீறி ஏழு கடல், ஏழு மலை தாண்டி நாம் அடைய விரும்பும் டிஜிட்டல் மாய உலகம், ஒரு ப்ளக்பாயிண்ட் கிளியிடம் நம் உயிரை ஒளித்து வைக்கும் செயல். அந்த கிளியை கொல்ல ஒரு வர்தா புயல் போதும்.

நம் தேவைகளின் அழுத்தம் தாங்காது ப்ளக் பாயிண்ட்டே கூட பொசுங்கி போகக்கூடும். ப்ளக் பாயிண்ட்டுக்கும் வாழ்க்கை இருக்கிறது. அதற்கும் நிம்மதி, சந்தோஷம் தேவைப்படும். நம் சுயநலத்துக்காக ப்ளக் பாயிண்ட் வாழ்க்கையில் மண்ணள்ளி போட வேண்டாம்.

Plug point-டுக்கே plug point anxiety உருவாக்கி விடுவோம் நாம்!

RAJASANGEETHAN JOHN