‘கபாலி’ – ஒரு அதிசய ராகம்… ஆனந்த ராகம்… அபூர்வ ராகம்…!
‘கபாலி’…
இந்த திரைப்படம் உலக அளவில் வெற்றி. இதில் எந்த சந்தேகமும் கிடையாது.
இந்த படத்தை வடிவமைத்து, செயலில் பயணித்து, செலவில் குறை இன்றி நடத்தி முடித்து, முதல் பிரதி பார்த்ததும் முனைப்போடு விளம்பர உத்திகளை வரிசைப்படுத்தி, விளம்பரதாரர்களை வரிசையில் நிறுத்தி, விண்ணை முட்டும் பதாகைகளை வைப்பதற்கு பதில் விண்ணிலேயே ‘கபாலி’யை பறக்க வைத்து, முதல் பந்தில் ஆறு ரன் அடிக்கும் அதிரடி ஆட்டக்காராராக அபார சாதனை படைக்க ஆரம்பித்தார் தாணு சார்.
எதிர்பார்ப்புகள் எகிறியது. வியாபாரம் சூடானது. தமிழ் திரைப்படம் ஒன்று இந்திய அளவிலும் உலக அளவிலும் பரந்து விரிந்தது. சூப்பர் ஸ்டார் என்கிற அஸ்திரம், ஒரு விளம்பர வித்தகனின் வில்லில் இருந்து புறப்பட்டதால் வேகம் கூடியது. இலக்குகள் இலகுவானது. வெற்றி எளிதானது. வரவு நிச்சயமானது. வியாபாரம் அர்த்தமானது. ஒரு வசூல் சரித்திரம் பதிவானது.
பா.ரஞ்சித் எனும் எளிய கலைஞன் வலிய கலைஞனானான். சமூக பொறுப்புகளை சுமக்கும் அதேநேரம், அதை செய்ய தேர்ந்தெடுத்த களம் திரைப்படம் என்பதால் அந்த லட்சணங்களுக்கும் நியாயம் செய்தான். தனது கூட்டத்திற்கு அடையாளம் கூட்டினான். உடன் இருந்தோரை ஏற்றினான். வழக்கமான சலித்துப்போன மசாலாக்களைத் தவிர்த்தான். உச்ச நட்சத்திரத்தை, அவர் தன் சுயம் இழக்காமல் உயர்ந்த நடிகனாக மீண்டும் பிறக்க வைத்தான். திரைப்படம் முழுவதும் உலா வந்த அனைவரது திறமையையும் பார்ப்பவர் மனதில் பதிய வைத்தான்.
சூப்பர் ஸ்டார் இந்த கதையை தேர்ந்தெடுத்த்தன் மூலம் அவருக்குள் நடந்துகொண்டிருக்கும் சிந்தனை மாற்றங்களை, பயணிக்கும் பாதை மாற்றங்களை, பகிரங்கமாக சொல்லி விட்டார்.
“இந்த படம் சரி இல்லை”, “பிடிக்கவில்லை”, “குறைகள் உண்டு, நிறைகள் குறைவு”, “இப்படி எதிர்பார்க்கவில்லை”, “நகைச்சுவை இல்லை”, “குத்துப் பாட்டு இல்லை”, “கவர்ச்சி இல்லை”, “வில்லன் பலசாலியாக இல்லை”, “பிரச்சார நெடி அதிகம்”, “முழுமை இல்லை”, “முதல் நாள் டிக்கட் கட்டணம் அதிகம்” என குறை சொல்பவர்களும் உண்டு. அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்:
அன்பு நண்பர்களே, மீண்டும் ஒரு முறை ‘கபாலி’ படம் பாருங்கள். இரண்டாவது முறை பார்க்கும்போது, இந்த படம் உங்களை நெகிழச் செய்யும். இப்படத்தில் உள்ள சிறப்புகள் வெளிப்படும்.
‘கபாலி’ – ஒரு அதிசய ராகம்… ஆனந்த ராகம்… அபூர்வ ராகம்…!
( கே பாலசந்தர் இல்லையே இந்த ரஜனியைப் பார்க்க)
-வெங்கட் சுபா
திரைத்துறை