பீட்சா 3: தி மம்மி – விமர்சனம்

நடிப்பு: அஸ்வின் காகுமனு, பவித்ரா மாரிமுத்து, கௌரவ், கவிதா பாரதி, அனுபமா குமார், அபி நட்சத்திரா, வீரா, குரேஷி, காளி வெங்கட், கேபிஒய் யோகேஷ், செய்மூர் மற்றும் பலர்

இயக்கம்: மோகன் கோவிந்த்

ஒளிப்பதிவு: பிரபு ராகவ்

படத்தொகுப்பு: இக்னேஷியஸ் அஸ்வின்

இசை: அருண் ராஜ்

தயாரிப்பு: ‘திருகுமரன் எண்டர்டெய்ன்மெண்ட்’ சி.வி.குமார்

தமிழக வெளியீடு: வி ஸ்கொயர் எண்டர்டெய்ன்மெண்ட்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

பதினோரு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘பீட்சா’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு தரமான ஹாரர் அனுபவத்தைக் கொடுத்ததோடு, அதில் நடித்த விஜய்சேதுபதிக்கு, கவனிக்கத் தக்க முதல் பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது. அதிலிருந்து தான் அவருடைய கேரியர் கிராஃப் சரசரவென உயரத் தொடங்கியது. அந்த ‘பீட்சா’ பட வரிசையின் மூன்றாவது படமாக – முதல் படத்தின் நற்பெயரை காப்பாற்றும் விதமாக – வித்தியாசமாக உருவாகி வெளிவந்திருக்கிறது ‘பீட்சா 3: தி மம்மி’.

சென்னையில் நவீன உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் நாயகன் நளன் (அஸ்வின் காகுமனு). இவரும், காவல் ஆய்வாளர் பிரேமின் (கௌரவ்) தங்கையான நாயகி கயலும் (பவித்ரா மாரிமுத்து) காதலிக்கிறார்கள். இவர்களின் காதலுக்கு எதிராக இருக்கும் கயலின் அண்ணன் பிரேம், தங்கள் அந்தஸ்துக்குப் பொருத்தமான பெரிய இடத்தில் கயலுக்கு மாப்பிள்ளை பார்த்து வைத்திருக்கிறார்.

இந்நிலையில், நளனின் நவீன உணவகத்துக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் ஒரு மம்மி பொம்மையை அங்கேயே விட்டுச் சென்றுவிடுகிறார். இதன் பின்னர் அந்த உணவகத்தில் இரவு நேரங்களில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. உதாரணமாக, மின்சாரம் கட் ஆகி, மீண்டும் வரும்போது, இதற்குமுன் செய்தறியாத பிரமாதமான ஸ்வீட் ஒரு தட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கும்போது ஒரு சிறுமியின் அழுகுரல் கேட்கிறது. டார்ச் வெளிச்சத்தில் பார்க்கும்போது, அவளது இடுப்புக்குக் கீழே காலெல்லாம் ரத்தம் வழிந்திருப்பது தெரிகிறது. மீண்டும் மின்சாரம் வரும்போது அந்த சிறுமியின் உருவம் மறைந்துவிடுகிறது. இத்யாதி… இத்யாதி. இவையெல்லாம் என்ன என்று  அறிய முடியாமல் குழம்பித் தவிக்கிறார் நளன்.

இதன் தொடர்ச்சியாக ஒரு கிரானைட் குவாரி முதலாளி, ஒரு ஃபேஷன் டிசைனர், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளி என மூன்று பேர் அமானுஷ்யமாக படுகொலை செய்யப்படுகிறார்கள். நளனின் மீது ஏற்கெனவே காண்டில் இருக்கும் காவல் ஆய்வாளர் பிரேம், இந்த கொலைகளுக்கும் நளனுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து, அவரை கைது செய்ய தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அமானுஷ்ய செயல்களைச் செய்வது யார்? என்ன காரணம்? அந்த அமானுஷ்ய சக்திக்கும், நளனுக்கும் என்ன சம்பந்தம்? என்பன போன்ற புதிரான கேள்விகளுக்கு எதிர்பாராத, திடுக்கிடச் செய்யும் விடைகளைக் கொடுக்கிறது ‘பீட்சா 3: தி மம்மி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நளன் கதாபாத்திரத்தில் வரும் அஸ்வின் காகுமனு, தனக்குக் கிடைத்த நாயகன் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அளவாகப் பேசி, பயத்தையும் பதட்டத்தையும் அழுத்தமாக முகத்தில் காட்டி, தான் மட்டுமே ஒற்றை ஆளாக கதையை கடைசி வரை வெற்றிகரமாக சுமந்து கரை சேர்க்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

நாயகனின் காதலியாகவும், லேப்டாப் – செல்போன் மூலம் ஆவிகளுடன் தொடர்பு கொண்டு பேச முயலும் பெண்ணாகவும் கயல் என்ற கதாபாத்திரத்தில் வரும் பவித்ரா மாரிமுத்து, கதையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்துபவராக இல்லாவிட்டாலும், கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார்.

ஸ்வீட் ஸ்டால் நடத்தும் ராணியம்மாள் கதாபாத்திரத்தில் வரும் அனுபமா குமார், பாசமான தாயாக சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். படத்தின் தலைப்பில் உள்ள ‘மம்மி’யாக – நல்லதொரு தாயாக – வரும் இவர், காணாமல் போன தன் மகளை பதட்டத்துடன் தேடி அலைவது, மகளுக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு அதிர்ந்து அவளைக் காப்பாற்ற துடிப்பது என கல்மனமும் கரையும் வண்ணம் உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

’அயலி’ இணையத் தொடரில் விடலைப்பருவ நாயகியாக நடித்த அபி நட்சத்திரா, இதில் ராணியம்மாளின் மகள் மித்ராவாக வருகிறார். எது ஒன்றையும் பத்து நிமிடங்களுக்கு மேல் நினைவில் வைத்துக்கொள்ள இயலாமல் மறந்துவிடும் தன்மையை மிகச் சரியாக வெளிப்படுத்தி தனது பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

நாயகியின் அண்ணனாக, காவல் ஆய்வாளராக வரும் கௌரவ், நாயகனின் உணவகத்து சமையல் நிபுணராக வரும் காளி வெங்கட், உணவக ஊழியர்களாக வரும் குரேஷி, கேபிஒய் யோகேஷ், கிரானைட் குவாரி முதலாளியாக வரும் நாராயணன், அடுக்குமாடி குடியிருப்பின் சங்க செயலாளராக வரும் கவிதா பாரதி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

சென்னை அயனாவரத்தில் நடந்த, நெஞ்சை உலுக்கும் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அதன் மீது ஸ்வீட் ஸ்டால், நவீன உணவகம் என்றெல்லாம் கற்பனையாக கதை வளர்த்து, அதற்குள் பேயை நுழைத்து, ஒரு வினாடியும் போரடிக்காமல் சுவாரஸ்யமாக படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்த். கதைக்களத்தையும் நிகழ்வுகளையும் ஈர்ப்பான வகையில், சற்று வித்தியாசமாக அமைத்திருக்கும் இயக்குனருக்கு நமது பாராட்டுகள்.

ஹாரர் மூவிக்குப் பொருத்தமான பிரபு ராகவ்வின் ஒளிப்பதிவும், அருண் ராஜின் பின்னணி இசையும் சிறப்பு.

’பீட்சா 3: தி மம்மி’ – அமானுஷ்ய பட பிரியர்கள் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய படம்!