மன்சூர் அலிகானை தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது!
பசுமை சாலை மற்றும் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் சேலம் பியூஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்ட அதே வழக்கில் அதே பிரிவுகளில்.
அரசு கொண்டுவரக்கூடிய திட்டங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வதற்கான உரிமையை இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்கும் வழங்கியிருக்கிறது. அமைதி வழியில் பிரச்சாரம் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாத அரசுகள் பொய் வழக்குகள் புனைவதை வழக்கமாக கொண்டுள்ளன.
மக்கள் தங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் சமயங்களில் அரசுகள் கொண்டுவரக்கூடிய திட்டங்களை எதிர்த்து குரல் கொடுப்பதற்கு எல்லா உரிமைகளையும் பெற்றவர்கள். பசுமை சாலை திட்டத்தால் 40,000 வீடுகள் பாதிக்கப்படும், கிட்டத்தட்ட 8,000ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும், பலநூறு கிணறுகள் மூடப்படும், பல நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்று அறிந்துகொள்ள முடிகிறது.
இப்படிப்பட்ட திட்டங்களை எதிர்த்து அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமையை அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ளது. அப்படி அமைதியான வழிகளில் போராடும் பலரை அரசுகள் கைது செய்யத் துவங்கியுள்ளன. சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் எதற்காக நிலங்களை கையகப்படுத்துகிறீர்கள் என்று கேள்வி கேட்ட ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து சேலம் நகரில் பல சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளை மேற்கொண்டுவரும் பியூஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கைது, அரசின் திட்டங்களை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மக்களிடம் அச்சுறுத்தலை உண்டாக்கும் என்று நினைத்து கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கோருகிறோம்.
– பூவுலகின் நண்பர்கள்