”பிரமலை கள்ளர்கள் இந்துக்கள் அல்ல” என்றொரு கட்டுரை…

பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் மகளிர்நல சங்கத்தைச் சேர்ந்த திருமதி அ.செல்வபிரீத்தா என்பவர், “நாங்கள் இந்துக்கள் அல்ல; தாய் சமூகம் வேறு” என்ற தலைப்பில் பிரமலை கள்ளர் சமூகம் பற்றி எழுதியுள்ள கட்டுரையை நண்பர் பாபு யோகேஸ்வரன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

பார்ப்பனர்களின் வேதங்களை அடிப்படையாகக் கொண்டது வைதிக மதம் / இந்துமதம். அதனால் தான் வழிபாடு நடத்துநராக பார்ப்பனரையும், அவர்களது சமஸ்கிருத மொழியை வழிபாட்டு மொழியாகவும் கொண்டிருக்கிறது இந்துமதம். எனவே, வந்தேறிகளான ஆரிய பார்ப்பனர்களைத் தவிர, இந்தியாவின் மூத்த முதற்குடிகளான நாகர் / திராவிடர் எவருமே இந்துமதத்தினர் அல்ல – பிரமலை கள்ளர்கள் உட்பட! எனில், ஆரியப் பார்ப்பனரல்லாத ஏனையோரெல்லாம் பார்ப்பனியத்தின் கொடுங்கரங்களில் சிக்கி நசுக்கப்பட்டு, தன்வயமாக்கப்பட்டு, இந்துக்கள் ஆக்கப்பட்டவர்களே!

அந்த வகையில், “பிரமலை கள்ளர்கள் இந்துக்கள் அல்ல” என்று கட்டுரையாளர் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன். அதேநேரத்தில், கடந்த சில பத்தாண்டுகளாக பிரமலை கள்ளர் சமூகம் இந்துமயம் / பார்ப்பனியமயம் ஆக்கப்பட்டு வருகிறது என்பதை கட்டுரையாளர் கவனிக்கத் தவறிவிட்டார் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உதாரணமாக, முன்பெல்லாம் பிரமலை கள்ளர் திருமண விழாவில் பார்ப்பன புரோகிதருக்கு இடம் இல்லை. ஆனால் இப்போது கொஞ்சம் வசதி கூடிய பிரமலை கள்ளர்கள் தங்கள் வீட்டு திருமணத்தை பார்ப்பன புரோகிதர்களை வைத்து, யாகச்சடங்கு செய்து நடத்துகிறார்கள். மேலும், முன்பெல்லாம் கிடா வெட்டி குலசாமியையும், காவல் தெய்வங்களையும் மட்டும் வழிபட்டு வந்த பிரமலை கள்ளர்கள், இப்போது பார்ப்பனர்களின் கட்டுப்பட்டிலுள்ள ராமர் உள்ளிட்ட பெருந்தெய்வங்களை வழிபடுகிறார்கள். இதற்காக கோயில் கோயிலாக பயணம் போகிறார்கள். இதுபோல் இன்னும் நிறைய என்னால் சொல்ல முடியும்.

அடுத்து, பிரமலை கள்ளர்கள் சாதிபேதம் பார்க்காதவர்கள் என்பது போன்ற போலிச்சித்திரத்தை தீட்டிக்காட்டுகிறார் கட்டுரையாளர். ”பிரமலை கள்ளர்களின் கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் என கூறப்படும் பறையர், பள்ளர் இனத்தை சேர்ந்தவர்கள் கூட பூசாரிகளாக இருக்கிறார்கள்” என்கிறார் கட்டுரையாளர். நல்லது; இத்தனை முற்போக்கான பிரமலை கள்ளர்கள் தங்கள் வீடுகளுக்குள் பட்டியல் சாதியினர் நுழையவோ, தண்ணீர் புழங்கவோ, சம்பந்தம் செய்யவோ அனுமதிப்பார்களா? அவ்வளவு ஏன்… பட்டியல் சாதியினரின் வீட்டுக்குப்போய் அவர்கள் சமைத்த உணவை எந்த அருவருப்பும் இல்லாமல் சாப்பிட்டுவிட்டு வாந்தி எடுக்காமல் வெளியே வருவார்களா? எந்த இடைநிலை ஆதிக்கசாதியின் சாதிவெறிக்கும் குறைந்ததல்ல பிரமலை கள்ளர்களின் சாதிவெறி!

”நான் பிறந்த பிரமலை கள்ளர்கள் இனத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்” என்கிறார் கட்டுரையாளர் அ.செல்வபிரீத்தா. அவர் கூறுகிறாரே, கள்ளர்களின் முதல் நாடு ‘திடியன்’ நாடு என்று… அந்த திடியன் நாட்டைச் சேர்ந்தவன் நான் என்ற முறையிலும், அந்த திடியன் நாட்டிலுள்ள ‘வாலகுருநாதன்’ சாமி தான் என் தந்தைவழி முன்னோரின் குலசாமி என்ற முறையிலும், பிரமலை கள்ளர்களின் கடந்தகாலம் – நிகழ்காலம் குறித்து களஆய்வு மேற்கொண்டவன் என்ற முறையிலும் கூறுகிறேன்: பிரமலை கள்ளர்கள் பற்றி எனக்கும் நன்றாகத் தெரியும்.

ஒரு தொல்குடி சமூகம் சாதிய சமூகமாக மாறுவதற்கு முந்தைய படிநிலைகளின் மிச்சசொச்சங்களை, சிதைந்துகொண்டிருக்கும் தொல்குடிப் பண்புகளை ஆய்வாளர்கள் அடையாளம் காண்பதற்கு பிரமலை கள்ளர் சமூகத்தின் பண்பாடும், பாரம்பரிய வாழ்க்கை முறையும் உதவும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. திருமதி அ.செல்வபிரீத்தாவின் கட்டுரையிலும் அதற்கான தரவுகள் சில இருக்கின்றன என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்த தரவுகளை உள்வாங்கும் அதேநேரத்தில், அவரது சுயசாதி தற்பெருமைக்கு வாசகர்கள் பலியாகிவிடக் கூடாது என்று எச்சரிக்கவே இந்த முன்னுரையை இங்கே எழுதியிருக்கிறேன்.

இனி…

“நாங்கள் இந்துக்கள் அல்ல; தாய் சமூகம் வேறு” என்ற கட்டுரை – கீழே!

ராஜய்யா, ஆசிரியர்,

ஹீரோநியூஸ் ஆன்லைன் டாட்காம்

                                            # # # # #

நாங்கள் இந்துக்கள் அல்ல; தாய் சமூகம் வேறு!

எல்லா பிரமலை கள்ளர்களும் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், பிரமலை கள்ளர்கள் இந்து இல்லை என்பதுதான் உண்மை.

இன்றும் குலதெய்வ வழிபாட்டில் மிக தீவிரமாக இருப்பவர்கள் பிரமலை கள்ளர்களே.

மேலும், பிரமலை கள்ளர்கள் திருமண உறவு, அதாவது சம்பந்தம் செய்வதற்கு குலதெய்வ வழிபாட்டு முறையை வைத்தே திருமணம் முடிப்பார்கள்.

எனவே குலதெய்வம் என்பது பிரமலை கள்ளர் இனத்தின் வேர்.

மேலும், பிரமலை கள்ளர்கள் தங்கள் கோவிலுக்குள் யாரும் வரக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் போடுவதில்லை ஆதிகாலம் தொட்டு.

இந்துக் கோவில்களில் ஒரு நாளைக்கு ஆறு கால பூசை, ஒவ்வொரு மாதம் ஒரு பண்டிகை தேதி, அந்த நாளில் இந்த விதமாக பூசை செய்ய வேண்டும் என்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் உள்ளன. ஆனால், எங்கள் குலதெய்வக் கோவில்களில் இது போன்ற எந்த ஒரு சடங்கு சம்பிரதாயங்களும் கிடையாது.

இந்த நாளில் பூஜை செய்துதான் ஆகவேண்டும் என்ற எந்த கணக்கும் கிடையாது. எங்க இனத்திற்கு கிடா வெட்டுவது தான் மாபெரும் திருவிழா. கிடா வெட்டு என்பது விவசாயம் செழித்து எல்லோரிடமும் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் இருந்தால் தான் கிடா வெட்டி சாமி கும்பிடுவோம். இல்லை என்றால் பச்சை போட்டு எளிமையாக கும்பிடுவோம். விளைச்சல் இல்லை என்றால் திருவிழாவை ஒத்திவைத்து விடுவோம்.

எங்க சாமி எங்களை கண்ணை குத்தாது ஏனென்றால் சாமி என சொல்லுவது எங்களோடு வாழ்ந்த எங்கள் முன்னோர்கள்.

இன்னும் குறிப்பாக பிரமலை கள்ளர்கள் கோயில்களில் பூசாரிகள் தாழ்த்தப்பட்டோர் என கூறப்படும் பறையர், பள்ளர் இனத்தை சேர்ந்தவர்களும் மற்றும் குயவர்கள், பிள்ளைமார்கள் போன்ற அனைத்து சாதி மக்களும் பூசாரிகளாக உள்ளனர். ஆதிகாலம் முதல் அதாவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இதுதான் நடைமுறை.

பிரமலை கள்ளர்கள் கோவில்களை எந்த கிரகணமும் பாதிக்காது எந்தக் கிரகணத்திற்கும் நாங்கள் நடை சாத்துவது கிடையாது.

பிரமலைக்கள்ளர் தன்னரசு நாட்டுக் கள்ளர்கள் என அழைக்கப்படுவார்கள்.எட்டு நாடும் இருபத்தி நான்கு உப கிராமமும் 64 பரப்பு கிராமம் என்பதே எங்கள் நாட்டின் கட்டமைப்பு.

இதில் “திடியன்” என்பதுதான் முதல் நாடு இந்த முதல் நாட்டில் அமைந்துள்ள சோனை கருப்பசாமி கோவிலில் கிடா வெட்டும்போது முதல் கெடா அம்பட்டர் (நாவிதர்) இனத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும்.

எங்கள் கோவிலில் முதன்மை என்பது பெரிய விஷயம். அப்படி இருக்கும்போது முதல் நாட்டு கோவிலில் முதல் கிடாயின் உரிமை அம்பட்டர் இனத்தைச் சேர்ந்தவருக்கு கொடுக்கப்படும்; இதுதான் பிரமலை கள்ளர்கள் பூர்வீக குடிகள் என்பதற்கு சாட்சி. உலகிற்கு முற்போக்கையும்,சமதர்மத்தையும் கற்றுக் கொடுத்தவர்கள் நாங்கள்.

ஒரு சிலர் அறியாமையிலும், அரசியலுக்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் தாங்கள் இந்து எனக் கூறிக்கொள்ளலாம்.

இந்து என்ற கட்டமைப்புக்குள் பிரமலைக் கள்ளர்களின் கலாச்சாரமோ, வழிபாட்டு முறையோ ,ஒரு சதவீதம் கூட பொருந்திப் போகாது என்பது நிகழ்கால உண்மை.

பிரமலைக் கள்ளர்கள் இந்து, இஸ்லாம், கிறித்தவம் என அனைத்து மதத்தையும் மதிக்கக் கூடியவர்கள்.

அனைத்து மதக் கடவுள்களையும் வழிபடக் கூடியவர்கள்.

இம்மண்ணின் பூர்வகுடிகள். குறிப்பாக தமிழ் குடிகள்.60,000 வருடம் பழமையான மரபணுவை (M130Y) இன்றும் சுமந்துகொண்டு வாழ்பவர்கள்.

இந்தியாவை இந்து நாடாக மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. எனவே நம்மை பலரும் நாம் இந்துக்கள் என நம்பிக் கொண்டிருக்கிறோம்.

பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணின் பூர்வக்குடி மக்கள் பலருடைய வருகையை பார்த்துள்ளது.

அதன்மூலம் ஏற்பட்ட பல்வேறு கலாச்சார பண்பாட்டு மாற்றங்களை கண்டுள்ளது.

நம் இனம் பல்வேறு மொழிகளையும், போர்களையும், இழப்புகளையும் சந்தித்திருந்தாலும், ஆதிகாலம் தொட்டு தன்னுடைய கலாச்சாரத்தையும் மொழியையும் பண்பாட்டையும் வழிபாட்டு முறையையும், திருமண உறவு முறைகளையும் மாறாமல் பின்பற்றி வருகிறோம்.

இனிமேலும் பின்பற்றுவோம். பல்வேறு மதத்தையும், மொழியையும், பண்பாட்டையும் பார்த்தாலும் எந்த ஒரு சாயத்தையும் பூசிக் கொள்ளாமல் தனித்த அடையாளத்துடன் வாழும் இனம் நாம்.

முக்குலத்தோர் என அழைக்கப்படும் அனைவருமே பூர்வக்குடிகள் தான், இந்துக்கள் கிடையாது என நாம் சொல்லலாம். குறிப்பாக, கள்ளர்களின் அனைத்துக் பிரிவுகளையும் என்னால் சொல்ல முடியும். ஆனால் தற்காலத்தில் அவர்களின் வாழ்வியல் முறை எவ்வாறு அமைந்துள்ளது என எனக்குத் தெரியாது.

எனவே, நான் பிறந்த பிரமலை கள்ளர்கள் இனத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் எனவே பிரமலை கள்ளர்கள் இந்துக்கள் இல்லை என உறுதியாக கூறுகிறேன்.

ஆனால் எல்லா பிரமலை கள்ளர்களும் அவ்வாறு கூறுவது இல்லை என்பது உண்மைதான். அது அவர்களின் அறியாமை. ஐந்து நிமிடம் பேசினால் போதும், அவர்களை புரிய வைத்துவிடலாம் இந்துக்கள் இல்லை என.

நாம் இந்து என்று மட்டுமல்ல, புத்தம், சீக்கியம் இன்னும் உலகில் அனைத்து மதத்தைச் சேந்தவர்களாக இருந்தாலும் சரி, மதமே இல்லை என்று சொன்னாலும் சரி, நாங்கள் எல்லோரிடமும் பேசுவோம், அது எங்கள் இயல்பு.

எங்கள் காவல் பகுதியில் இருந்த கிறிஸ்தவ தேவாலயத்தை இடிக்க வந்த நாயக்க மன்னர்களிடம் சண்டையிட்டவர்கள் கள்ளர்கள்.

இன்னும் சொல்லப்போனால் பிரமலை கள்ளர்கள் பகுதியில் தான் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் தாக்கம் மிகவும் குறைவாக இருக்கும். அதேபோல் இந்துக்களின் தாக்கமும் தான்.

எனவே நாங்கள் எப்போதும்;இந்த மதத்தினருடன் தான் இந்த இனத்தினருடன் தான் என்ற வார்த்தைகளை நாங்கள் பேசுவதில்லை.

அசோக வர்மன் என்ற தனிநபருக்காக என்னுடைய பதிவு இல்லை. ஒட்டுமொத்த சமூகத்திற்கான பதிவு. நான் யாரையும் மாற்றப் போவதில்லை. உங்களை நான் பிரமலை கள்ளர் ஆக மாற்ற முடியாது. ஆனால் ஒரு பிரமலை கள்ளரை, பிரமலை கள்ளர் என உணர வைக்க முடியும் 5 நிமிடத்தில்.

அரசியல் கட்சி மாறலாம், மதம் மாறலாம் ,வேறொரு நாட்டில் குடியுரிமை கூட வாங்கலாம் ஆனால் சாதி மாறாது.

சாதி மாறாது என்றால் அவர்களின் கலாச்சாரமும் மாறாது நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்.

இந்தியாவில் உள்ள பூர்வ குடிமக்களின் கலாச்சாரத்தை குறிப்பாக வழிபாட்டு முறைகளை அழித்தொழித்தது இஸ்லாமோ, கிறிஸ்தவமோ அல்ல.ஆரியர்களால் கொண்டுவரப்பட்ட இந்து என்ற மதம் தான்.

நீங்கள் கூறுகிறீர்கள் இந்து என யாரையும் மாற சொல்ல மாட்டோம் என்று!
மதம் மாற்றாமல் எப்படி இந்தியாவில் இந்துக்கள் அதிகமானார்கள்?

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் தனித்து நின்றார்கள். ஆனால் இந்துக்கள் எங்களுடன் உறவாடி எங்கள் பழக்கவழக்கத்துடன் ஊடுருவி கட்டுக் கதைகளை கட்டி எங்களுக்கே தெரியாமல் எங்கள் முதுகில் சவாரி செய்து மதம் மாற்றினார்கள்.

எங்கள் கலாச்சாரத்தின் வேரிலேயே ஊடுருவி இந்து என்ற நிறுவனத்தை எங்கள் மீது கட்டமைத்தார்கள், கட்டமைத்துக்கொண்டே இருக்கிறார்கள் இன்றும்.

இந்தியாவில் இன்னும் மதம் அற்ற இனக்குழுக்கள் காடுகளிலும், நாடுகளிலும் நாடோடிகளாகவும், நிரந்தர குடிகளாகவும் வாழ்ந்து வருகிறார்கள். இன்றைய கால சூழ்நிலையில் ஒட்டாமல்.

ஆனால் பிரமலைக் கள்ளர்கள் இன்றைய காலகட்டத்தில் நிகழ்காலத்தில் வாழ்ந்தாலும் தங்கள் பழங்குடி தன்மையும் கலாச்சாரத்தையும் இழக்காமல் தனித்த அடையாளத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் தாய் சமூகம் மாறாது.

நன்றி.

திருமதி.அ.செல்வபிரீத்தா
பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் மகளிர் நலச்சங்கம்.