‘பிச்சைக்காரன்’ பாடல் வரிக்கு எதிர்ப்பு வலுக்கிறது!

அது அயல்நாட்டு பறையோ, உள்ளூர் பறையோ… எனக்கு எப்போதும் நல்ல ராகத்துடன் கூடிய தெறி அடி பாடல்கள் என்றால் கொள்ளைப் பிரியம்! இளையராஜா, ரஹ்மான், ஹாரிஸ், யுவன், விஜய், ஜெயமூர்த்தி இன்னும் பெயர் தெரியா எவ்வளவோ பேரை தேடி தேடி கேட்டு ரசித்திருக்கிறேன். ஆனாலும் ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் பிடித்த படம் எனக்கு எதுவென்றால் பூவேலி, சுக்ரன்தான். அதிலும் சுக்ரனை கணக்கு வழக்கு இல்லாமல் கேட்டு மூழ்கியிருக்கிறேன்.

அந்த வகையில் நான் மதிப்பு வைத்திருக்கும் விஜய் ஆண்டனியின் இசையில் “பாழாப்போன உலகத்திலே” (Glamour Song) எனும் பாடலும் என் ரசனைக்கு உகந்ததுதான்.

ஆனால் இந்த பாடலின் 2:18 நேரத்தில்

கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான்.. 
தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்
எனும் தற்குறித்தனமான வரிகள் வருகின்றன. இது இடஒதுக்கீட்டை கடைபிடிக்கும் இந்திய இறையாண்மையையே கேலி செய்வதாகும். சமூக நீதி குறித்து மண்டையில் ஒரு மண்ணும் இல்லாத ஒரு பொறம்போக்கின் வரிகள்தான் இவை.

இந்த வரிகளை எழுதிய கழிசடைக்கோ, அனுமதித்த இயக்குனர் சசிக்கோ, பயன்படுத்திய விஜய் ஆண்டனிக்கோ மூளை எனும் அவயம் குறித்த கவனம் இல்லாமல் இருக்கலாம். ஒரு தயாரிப்பாளராக விஜய் ஆண்டனி தமது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். வரிகள் நீக்கப்படவேண்டும்.

– நாகேந்திரகுமார் திலகவதி

                                                              # # #

இடைவேளையில் சேனல் ஸ்கிப் செய்தபோது, ஏதோ ஒரு தொலைக்காட்சியில் திருமா பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது மக்களின் கேள்விகளுக்கு திருமா பதில் அளிப்பது போன்ற கான்சப்ட் போல.

இடைவேளைக்கு முந்தய, “அடுத்து வருவது” போர்ஷனில் ஒரு பையன் (பதினெட்டு வயதுகூட இருக்காது) கேட்கிறான். அந்த பாழாய்ப்போன, கேடுகெட்ட கேள்வியை.

“படிக்காத பசங்க எல்லாம் கோட்டாவுல, நல்ல காலேஜ்க்கு போயிடுறாங்க. நல்ல மார்க் வாங்குற நாங்க எல்லாம் கேவலமான காலேஜ்க்கு போறோம்” என்று.

சாதி இல்லை, மதம் இல்லை என்று கூறுவதை பேஷன் என்று நினைக்கும் இன்றைய தலைமுறையின் எச்சம் இவன். இவன் போலதான் எல்லாரும். அவன் பேசியதை கேட்டதும், இயலாமையில் அப்படி ஒரு எரிச்சல் வந்தது.

நாகேந்திரகுமார் திலகவதியின் இந்த பதிவை படித்தபோது, இட ஒதுக்கீடை ஒழித்தால்கூட இந்த புத்தி மட்டும் போகாது என்று தோன்றுகிறது. அதுவும் சலீம் போன்ற படங்கள் எடுத்து, சிறு நம்பிக்கை விதைத்த விஜய் ஆண்டனிகூட, இட ஒதுக்கீடு என்று வரும்போது நூற்றாண்டு புத்திக்கு போய் விடுகிறார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது

– கவிதா சொர்ணவல்லி