பெருசு – விமர்சனம்

நடிப்பு: வைபவ், சுனில், நிஹாரிகா, சாந்தினி தமிழரசன், கார்த்திகேயன், பாலசரவணன், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், கருணாகரன், சுவாமிநாதன், தனலட்சுமி, தீபா சங்கர், கஜராஜ், ரமா, அலெக்ஸிஸ், சுபத்ரா ராபர்ட், ஜீவா பாலசந்திரன் மற்றும் பலர்

இயக்கம்: இளங்கோ ராம்

ஒளிப்பதிவு: சத்யா திலகம்

படத்தொகுப்பு: சூரியா குமரகுரு

பாடலிசை: அருண் ராஜ்

பின்னணி இசை: கே.எஸ்.சுந்தரமூர்த்தி

தயாரிப்பு: ’ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ்’ சந்தானம், எம்பர்லைட் ஸ்டூடியோஸ் ஹர்மேன் பவேஜா, ஹிரண்யா பெரேரா

தமிழ்நாடு ரிலீஸ்: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ சக்திவேலன்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

2023ஆம் ஆண்டு சிங்கள மொழியில் வெளியான அடல்ட் காமெடி திரைப்படம் ‘Tentigo’. இளங்கோ ராம் எழுதி இயக்கிய இத்திரைப்படம் ‘தல்லின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழா’வில் ஸ்பெஷல் ஜூரி விருதினை வென்றது. மேலும், பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைக் குவித்தது. அந்த சிங்களப் படம் தான் தற்போது அதே இளங்கோ ராம் இயக்கத்தில் ‘பெருசு’ என்ற பெயரில் தமிழில் மறுஆக்கம் (ரீமேக்) செய்யப்பட்டு, ‘அடல்ஸ் ஒன்லி’ என்பதற்கான ‘ஏ’ சான்றிதழுடன் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

கதை நாயகன் துரை (வைபவ்), இரவு, பகல் என்ற பேதம் இல்லாமல் எந்நேரமும் குடித்துவிட்டு வேலைவெட்டி இல்லாமல் ஊர்சுற்றித் திரிகிறார். அவரது அண்ணன் சாமிக்கண்ணு (சுனில்) பொறுப்புள்ளவர். பள்ளிக்கூட ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய அப்பா ’பெருசு’ என்ற ஹாலாஸ்யம், ஊரில் மதிப்பும் மரியாதையும் உள்ளவராகத் திகழ்கிறார்.

ஒருநாள். ஆற்றில் குளிக்கும் பெண்களை ஆபாச நோக்கத்தில் பார்ப்பதாக குற்றம் சாட்டி இளைஞன் ஒருவனது கன்னத்தில் பளார் என்று அறைகிறார் பெரிசு. பின்னர் வீட்டுக்கு வந்து ஹாலில் உள்ள சேரில் அமர்ந்து டிவி பார்க்கும் பெரிசு, அப்படியே சேரில் சாய்ந்து இறந்து போகிறார். அப்போது வீட்டிலிருக்கும் மூத்த மகன் சாமிக்கண்ணு அப்பாவின் திடீர் மரணத்தைப் பார்த்து கதறி அழுகிறார். அப்படியே அப்பாவின் இடுப்புக்குக் கீழே பார்க்கும் சாமிக்கண்ணு அதிர்ச்சி அடைகிறார். காரணம், அப்பாவின் அந்தரங்க உறுப்பு இருக்கும் இடத்தில் வேட்டி செங்குத்தாக தூக்கியபடி இருக்கிறது.

டாஸ்மாக் கடையருகே மது அருந்திக்கொண்டிருக்கும் தன் தம்பி துரைக்கு போன் பண்ணி உடனே வீட்டுக்கு வரச் சொல்லுகிறார் சாமிக்கண்ணு. துரையும் வீட்டுக்கு வந்து அப்பாவின் மரணத்துக்கு அழுதபடியே, இடுப்புக்குக் கீழே பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இந்நிலையில் வெளியே போயிருந்த இவர்களது அம்மா (தனலட்சுமி), சித்தி (தீபா சங்கர்), சாமிக்கண்ணுவின் மனைவி (சாந்தினி தமிழரசன்), துரையின் மனைவி (நிஹாரிகா) என ஒவ்வொருவராக வீட்டுக்கு திரும்பி வந்து, விஷயம் அறிந்து அதிர்ச்சியாகிறார்கள்.

உலக்கையால் உருட்டிப் பார்க்கிறார்கள். செலோ டேப்பால் இழுத்து ஒட்டிப் பார்க்கிறார்கள். பலனில்லை. அப்பாவின் விறைப்பு விழுவதாக இல்லை.

மரணச் செய்தியை ஊராருக்குச் சொல்லாமல் இருக்க முடியாது. அதேநேரம் சாவுக்கு வரும் ஊராரும் உற்றார் உறவினர்களும் அப்பாவின் ‘பப்பிஷேம்’ விவகாரத்தைப் பார்க்காமல் இருக்க முடியாது. அது அவமானம்; மானம் போய்விடும். என்ன செய்வது? என்று குடும்பத்தினர் குழம்பித் தவிக்கிறார்கள்.

மேற்கண்ட சிக்கலை குடும்பத்தினர் சாமர்த்தியமாக சமாளித்தார்களா, இல்லையா? பெருசுவின் இறுதிச் சடங்கு மானம் போகாமல், மரியாதையுடன் நல்லபடியாக நடந்ததா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு காமெடி சரவெடியாக விடை அளிக்கிறது ‘பெருசு’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் துரையாக வைபவ் நடித்திருக்கிறார். வேலைவெட்டி இல்லாமல் எந்நேரமும் மது போதையில் இருக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மது மயக்கத்தில் இருப்பவர் எப்படி குளறுபடியாகப் பேசுவார், மங்கலான பார்வையோடு இருப்பார் என்பதை இயல்பான காமெடி மூலம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்.

நாயகனின் அண்ணன் சாமிக்கண்ணுவாக சுனில் நடித்திருக்கிறார். பள்ளிக்கூட ஆசிரியர் என்பதோடு வீட்டின் மூத்த மகன் என்ற கதாபாத்திரத்துக்கு ஏற்ப பல பொறுப்புகளைக் கவனித்து, தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். தந்தையிடம் இறுதிவரை பேசாமலே இருந்துவிட்டதை எண்ணி குற்றவுணர்வு கொள்ளும் இடத்தில் முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகிகளாக நடித்திருக்கும் சாந்தினி தமிழரசன், நிஹாரிகா ஆகிய இருவருக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், தங்கள் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் இடம் வரும்போது புகுந்து விளையாடியுள்ளார்கள்.

பாலசரவணன், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், சுவாமிநாதன், தீபா சங்கர், கஜராஜ், தனலட்சுமி, ரமா உள்ளிட்டோர் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் காமெடி பண்ணி, பார்வையாளர்களை சிரிக்க வைக்கத் தவறவில்லை.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இளங்கோ ராம். ”ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை சிரிக்க வைப்பது மட்டும் தான் என்னுடைய நோக்கமே தவிர, கடுகளவும் கருத்துச் சொல்ல மாட்டேன்” என்ற பிடிவாதத்துடன் திரைக்கதை அமைத்திருக்கிறார். முகம் சுழிக்க வைக்கும் ஒரு விசயத்தை அதிக நெருடல் இல்லாமல், முழுக்க முழுக்க நகைச்சுவையாக நகர்த்திச் சென்றிருக்கிறார். கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கடி என்ற ரீதியில் படம் பயணித்தாலும், பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க முடிகிறது.

அருண்ராஜின் பாடலிசை சுமார் ரகம். கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை, காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளது.

சத்யா திலகத்தின் ஒளிப்பதிவு, சூரியா குமரகுருவின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள், படத்தின் தரத்தை உயர்த்திக் காட்ட உதவியுள்ளன.

‘பெருசு’ – பதினெட்டு வயது பூர்த்தியானவர்கள் பார்த்து, ரசித்து, சிரிக்கலாம்!

ரேட்டிங்: 3/5.