அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு: தலைவர்கள் கண்டனம்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மர்ம நபர்களால் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே அழியாநிலை பிரிவு சாலை பகுதியில் 1998-ல் பெரியாருக்கு முழு உருவ சிமெண்ட் சிலை அமைக்கப்பட்டது. அப்போது இந்த சிலையை திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் இந்த சிலையின் தலையை மர்ம நபர்கள் நேற்று இரவு உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
சிலையை சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (திங்கள்கிழமை) திராவிட கழகத்தின் மண்டலத் தலைவர் ராவணன் தலைமையில் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமல்லாமல், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் சிலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிலையை மூடுவதற்கு போலீசார் ஏற்பாடு செய்தனர். இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்கள் எழுப்பியதால் போலீஸார் அத்தகைய முயற்சியைக் கைவிட்டனர்.
தொடர்ந்து இப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் சிலையை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள பெரியார் சிலையையும் கண்காணிக்குமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெரியார் சிலை உடைக்கப்பட்ட்தற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.