கருஞ்சட்டைகளின் வெற்றி ஒரு வரலாற்றுக்கான வெற்றி!

கருஞ்சட்டை பயணத்தை திட்டமிடுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னர் அழைக்கப்பட்டிருந்தோம். சுமாராக ஒரு எட்டு பேரை நாங்கள் அழைத்து வர வேண்டும் என்பது ஏற்பாடு. ஆனால் நான்கு பேர் வரை தான் தேறியிருந்தார்கள். Kavitha BharathyR Prabhakar மற்றும் சிலர் அமர்ந்திருந்தனர். நானும்Venkat Outlander என்கிற வெங்கி (மணமாகாதவர், அழகானவர்) சென்றிருந்தோம். பேருந்துகள், வேன்கள் எல்லாம் சபரிமலைக்கு செல்வதால், வாகனம் கிடைக்காத நிலை. நான் இரண்டு டீயையும் மூன்று பிஸ்கெட்டுகளையும் முடித்தபோது முடிவு எட்டப்பட்டது. அடுத்த நாள் மதியத்துக்குள் வேனா, கார்களா என சொல்லப்படும். எப்படி இருந்தாலும் அதற்கு அடுத்த நாள் காலை 7 மணிக்கு பேரணிக்கு கிளம்பி விடுவது என்பதே முடிவு.

‍‍‍‍‍‍சந்திப்பை முடித்துவிட்டு கிளம்புகையில் பெரியார் தொடர்பாக நாங்கள் செய்யும் நிகழ்ச்சிகளை கேட்டறிந்தார் கவிதாபாரதி. பிறகு சொன்னார், “எங்க காலம் முழுக்க பந்தத்தை தூக்கிட்டு ஓடி வந்து இப்போ உங்கக்கிட்ட கொடுக்கிறோம். அடுத்து நீங்க எல்லாம்தான் ஓடணும். இல்லைன்னா, நம்மள அழிச்சுடுவாங்க!”

இரவு சாப்பாடு சாப்பிடும்போது, ’தனக்கு இதெல்லாம் மிகவும் புதிதாக இருக்கிறதென. மிகவும் சுவாரஸ்யமாகவும் inspiring ஆகவும் இருக்கிறதென’ வெங்கடேஷ் சொன்னார்.

கிட்டத்தட்ட நிலையான மற்றும் வசதியான வாழ்க்கை வாய்த்துவிட்ட ஒரு தலைமுறைக்கு அரசியல், சமூகம் பற்றிய கவலைகள் எல்லாம் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. பந்தத்தை அடுத்த தலைமுறைக்கு மாற்ற வேண்டிய தேவையும் கிடையாது. அப்படியே ஆற்றுப்போக்கில் மிதக்கும் கட்டை போல வாழ்ந்து முடித்துவிடலாம். ஆனாலும் ஏதோ ஒருவகையிலான சமூக அரசியல் குறித்த செயல்பாட்டுக்கு தன்னைத் தானே ஈடுபடுத்திக் கொள்வதற்கு மிகப்பெரும் அக்கறை தேவைப்படுகிறது. ஞாயிறு காலை கருஞ்சட்டை பேரணிக்கு அத்தகையோருடன் நான், Kavitha GajendranMohan Prabhaharan, வெங்கி ஆகியோர் கிளம்பினோம்.

பயணத்தினூடாக புத்தகங்களை வாசித்தும் அறிமுகப்படுத்தியும் செல்லலாம் என பேசப்பட்டது. காலை உணவை முடித்துவிடுவோம் என முடிவாகி, இடையில் நானுமொரு புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கியிருந்தேன். பிரபாகரும் ஓவியர் Trotsky Marudu Maruthappan மற்றும் கவிதாபாரதி ஆகியோர் நிகழ் அரசியலையும் எதிர்காலத்தையும் பேசிக்கொண்டு வந்தார்கள். கொஞ்ச நேரத்துக்கு பிறகு, தமிழ்மகனின் புத்தக வெளியீட்டின்போது திருமாவேலன் பேசிய பேச்சை ஒலிபரப்பி கேட்டுக்கொண்டு வந்தோம்.

எனக்கோ கருஞ்சட்டை பேரணி பற்றியும் பெரியாரின் இன்றைய அவசியம் மற்றும் தொடர்பு பற்றியும் தொடர் பதிவுகள் இட வேண்டுமென பதைபதைப்பு. ஆனால் நவதாராளமய வார்ப்பான என் செல்பேசி இணங்கவில்லை. மின்னூட்டல் வேண்டி உயிரை விட்டுக் கொண்டே இருந்தது. பயணமும் செல்பேசியும் பொருந்தாத துருவங்கள். இருந்தும் செல்பேசியின் கழுத்தை நெறித்து அவ்வப்போது பதிவிட்டுக் கொண்டுதான் இருந்தேன். முழுப்பயணத்திலும் வானும் பூசிக் கொண்ட கருமையில் மனம் தொலைந்து கொண்டிருந்தது. நாற்கர சாலை வருவதற்கு முன், எப்படி சாலையோர மரங்கள் யாவும் எண்ணிடப்பட்டிருந்தன என்பதையும் போலந்து நாட்டில் வீட்டு மரத்தை வெட்டக்கூட எந்தளவுக்கு கெடுபிடி இருக்கும் என்பதையும் சொல்லிக் கொண்டிருந்தேன். மனிதனுக்குள் இருக்கும் பாசிசக்கூறு எப்படி ஒரு அரசியல் போக்காக உலகம் முழுக்க மாற்றப்படுகிறது என கவிதா சொல்லிக் கொண்டிருந்தார்.

2 மணிக்கு திருச்சி நுழைந்தோம். தோழர் ஒருவரின் தயாரிப்பில் மதிய உணவு. பேரணிக்காக தோழர்கள் குழும ஆரம்பித்திருந்தனர். திருமுருகன் வந்து சேர்ந்திருந்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருப்பு. போக்குவரத்து நெரிசலுக்குள் ஊர்ந்து சுமாராக ஒரு மணி நேரம் சுற்றிய இடத்தையே சுற்றி இலக்கை அடைந்தோம்.

கண்கொள்ளா காட்சி!

நீக்கமற கருப்பும் விண்ணதிரும் கோஷமும் சூழலை நிறைத்திருந்தது. நாங்கள் எடுத்துச் சென்றிருந்த பதாகையை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம். இளைஞர்கள் பறை அடித்துக் கொண்டிருந்தார்கள். பெரியார் கோஷம் போட்டோர் சிலரின் தோள்களில் குழந்தைகள் அமர்ந்திருந்தன. சிறுவர்கள் பலர் அணிவகுத்து கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். பெண்கள் குடும்பம் சகிதமாக வந்திருந்தார்கள். இயக்கம் கண்ட பெண்கள் உணர்ச்சி பெருக்கில் முதல் கோஷம் போட்டு பதில் கோஷங்கள் எழும்ப செய்து கொண்டிருந்தனர்.

பேரனுடன் வந்திருந்த நரைகூடிய ஒருவர். பார்வையற்ற அப்பாவை அழைத்து வந்திருந்த சிறுவன். கால்களுக்கு இடையில் சக்கர நாற்காலி ஒன்று. கூலிங் கிளாஸ்ஸுடன் பறையடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள். சாலையின் பக்கவாட்டில் நின்று கொண்டு புகைப்படங்களை சுட்டுக் கொண்டிருந்த கருஞ்சட்டைகள். மைதான வளைவில் உயர்த்தி எடுத்திருந்த கோயில் கோபுரம். மின் கோபுரத்தில் மாட்டப்பட்டிருந்த பெரியார் படம்.

காட்சிகள் பல; அர்த்தங்கள் பல்லாயிரம்; வரலாறுகள் பல கோடி!

ஆளுக்கு ஒரு டீயை குடித்துவிட்டு, மேடைக்கு அருகே தரையிலமர்ந்தோம். டீ குடிக்கும் முன்னமே கூட்டம் தொடங்கிவிட்டது. இயக்கத் தலைவர்கள் அனைவரும் பேசினர். மூன்று ஜோடிகளின் சுயமரியாதை கல்யாணத்தை ஆசிரியர் தனக்கே உரிய நகைச்சுவை பேச்சோடு நடத்தி வைத்தார். பார்ப்பனீயம், இந்தியம், ஆரியம் ஆகியவற்றுக்கு எதிரான முழக்கங்களோடு சேர்ந்து ஆணவக்கொலைகளுக்கு எதிராகவும் கருஞ்சட்டைகளின் குரல் உயர்ந்தது.

இரவுணவை முடித்துவிட்டு பத்து மணிக்கு கிளம்பினோம்.

திரும்பும் வழி முழுக்க மீண்டும் விவாதங்களும் எதிர்கால திட்டங்கள் பற்றிய பேச்சுகளும்தான். ஆர்எஸ்எஸ் கலாசார ரீதியாக மக்களுக்குள் இறங்குவதை போல் பெரியாரையும் கொண்டு செல்ல வேண்டுமென திரும்ப திரும்ப கவிதாபாரதி சொல்லிக் கொண்டிருந்தார். என் அப்பா சொல்லும் அதே விஷயம்!

வயதையும் தூரத்தையும் தாண்டி சிந்தையின் ஒரு கண்ணியால் ஒன்று சேர்ந்து பிற கண்ணிகளும் பிறகு சடசடவென இணையும் சூட்சுமத்தின் அழகு, உறக்கம் கலையா காலையில் காதலி கொடுக்கும் முத்தத்தின் அழகுக்கு நிகர் .

மீண்டும் மீண்டும் நாங்கள் செய்திகளையும் அரசியலையும் சித்தாந்தங்களையும் முடிந்த மட்டிலும் சாமானியன் ரசிக்கும் விதத்தில் எளிமையாக கொண்டு செல்ல வேண்டுமெனவே முயன்று கொண்டிருக்கிறோம். கடந்த காலத்தின் பந்தங்களை இப்படித்தான் நாங்கள் சுமந்து கொண்டிருக்கிறோம்.

இரண்டு நாட்களுக்கு முன், இரவுணவின்போது வெங்கி பகிர்ந்து கொண்ட ஆச்சரியம் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. இன்றைய தலைமுறையின் பெரும்பான்மையை அரசியல் பழக்காமலேயே வளர்த்திருக்கிறோம். மீதத்தின் பெரும்பகுதி பெருமை பீற்றல் திமிரிலேயே நம்மை அழித்துக் கொண்டிருக்கின்றன. மிக கொஞ்சம் மட்டுமே காலத்தின் தேவையை கொண்டு பெரியார், அம்பேத்கர், மார்க்ஸை புரிந்துகொள்கிறோம்.

கருஞ்சட்டைகள் என்பது ஒரு இயக்கத்தின் வெற்றியோ நபரின் வெற்றியோ அல்ல. அப்படி பார்க்க தொடங்கின் அது பார்வைக் கோளாறு. கருஞ்சட்டைகளின் வெற்றி ஒரு வரலாறுக்கான வெற்றி. மிக நீண்ட நல்லெதிர்காலத்துக்கான நம்பிக்கை!

விரும்பும் களத்தில், விரும்பும் காதலோடு, விரும்பும் அரசியலுக்காக, விரும்பும் மனிதர்கள் சூழ்ந்து இருக்கையில் மட்டுமே வாழ்க்கைக்கான தருணங்களை மனிதர்கள் பெறுகிறார்கள்.

டிசம்பர் 23ம் தேதி நாங்கள் அர்த்தப்பூர்வமாக வாழ்ந்தோம்!

RAJASANGEETHAN