“பெரியார் இல்லாத தமிழ் அடையாளம் – பழம்பொருட்காட்சி கூடம்!”

பெரியார் எனும் பெயரை வெறுக்கக் கற்றுத் தந்த பெரியவர்கள் வழியாகவே நான் பெரியாரை அறிந்து கொண்டேன். எனது அரசியல் கல்வி பெரியார் எதிர்ப்பு வழி உருவானது. கம்யூனிசம், பெரியாரியம் இரண்டையும் வெறுக்கவும் அவற்றை வேரோடு அழிக்கவும் தம் வாழ்க்கையை அளித்த மனிதர்களைக் கொண்ட ஊரும் – அக்காலமும் எனக்கு முதலில் அச்சத்தை உருவாக்கியது, பிறகு கேள்வியை உருவாக்கியது.

கம்யூனிசமாவது ஒரு கட்சி, ஒரு பெருங்கூட்டம், அதனை ஒரு அமைப்பு எனக் கண்டு எதிர்த்தனர் பலர். பெரியாரைத் தனி மனிதராக, தனித்த ஒரு தீய சக்தியாக அறிவித்திருத்தனர் பக்தி-சாதி – பெண்ணொடுக்கு முறைகளைத் தெய்வக் கட்டளைகளாக ஏற்றிருந்த அப்பகுதியினர். தனி ஒருவரின் மீது இவ்வளவு வெறுப்பு ஏன்?

1973-ல் அவருடைய மறைவுச் செய்தியைக் கேட்டு மகிழ்ந்த ஆன்மிக அன்பர்களைக் கண்டு நான் பயம் கொண்டிருக்கிறேன். அப்போது எனக்கு 8 வயது. அடுத்த நாள் அவர்கள் பூசை ஒன்றை நடத்தினர். அதில் எங்கள் தாத்தாவுடன் நானும் கலந்துகொள்ள நேர்ந்தது. அன்று அவர்கள் பேசிய பேச்சுகள் அனைத்தும் எனக்குப் பெரியாரின் பெருமையை உணர்த்தின, ஆம்.

தனி ஒருவராக ஒருவர் இவ்வளவு மாற்றங்களைக் கொண்டுவர முடியுமா? அவருடைய பகைவர்கள்தான், அவரை வெறுத்தவர்கள்தான் பெரியாரின் செயற்கரிய செயல்களை உண்மையாக நினைவில் வைத்திருக்கிறார்கள் இன்றுவரை.

அந்த மகா மனிதரைப் பற்றி அவர்கள் சொன்னதில் இரண்டு கருத்துகள் எனக்குள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

முதலாவது, “தமிழன் திராவிடன்னு சொல்லி பள்ளு-பறை எல்லாம் ஒன்னா ஆக்கிட்டான் இந்த நாயக்கன். சாதி பாத்தா குத்தமுன்னு சட்டம் போடற அளவுக்கு ஆயிடுச்சி தமிழ்நாடு.”

இரண்டாவது, “கம்யூனிஸ்டுகாரனாவது பரவாயில்லப்பா மனுஷனக் கொல்லரவன், இந்த நாயக்கன் சாமிய – தெய்வத்த கொல்லக் கிளம்பியவன் இல்லையா? மனுசனக் கொன்னா இன்னொரு மனுசன், சாமிகள கொன்னா நாம எங்க போறது?”

இத்தனை ஆற்றலா அந்த மனிதனுக்கு…

அவரைப் பற்றிக்கொள்ள நான் 4 ஆண்டுகள் காத்திருந்தேன். ஆம், என் பதின்பருவத் துணிவின் தொடக்கம் அதில்தான் வெளிப்பட்டது. ஆனைமுத்து தோழர் தொகுத்த நூலின் பக்கங்களூடாக அதுவரை நான் கண்டவை கேட்டவை அனைத்தையும் மாற்றியறிந்தேன்.

சாதி-சனங்கள்-அன்பு- பாசம்- அப்பன் அம்மை- உற்றார் பெற்றார் என்பதிலிருந்து விலக வைக்கும் ஒரு தொடக்கம். என் நண்பர்கள் சைவ-வைணவ-கிறிஸ்தவ-இஸ்லாமிய அடையாளம் எதையும் தாண்டி எனக்குச் சொன்னது, “பெரியார் ஒரு நாசகார சக்தி, உன் வாழ்க்கை நாசமாகிவிடும்.”

அவர்கள் என்னிடமிருந்து விலகத் தொடங்கிய காலங்கள் உண்மையில் அற்புதமானவை. அந்தத் தனிமைதான் என்னை படிக்கவும் எழுதவும் வைத்தது. அதனைவிட அடர்த்தியான நட்புகளை, தோழமைகளை உருவாக்கித் தந்தது.

பெரியாரிய வெறுப்பு கொண்ட என் முன்னோர்கள் எதன் மீது கோபம் கொண்டனர்? விடுதலை மீது, சுதந்திரச் சிந்தனைகள் மீது, சமத்துவம் மீது, சாதியொழிப்பின் மீது, பெண்ணிலைச் சமத்துவம் மற்றும் சம உரிமைகள் மீது. இவை அனைத்தையும் அவர்கள் கடவுளுக்கு எதிரானது என்று கண்டனர். அதாவது தமக்கு – தம் ஆண் ஆதிக்க மனநிலைக்கு எதிரானது எனத் தான் பொருள்.

பெரியார் தமிழர்களுக்குள் ஒரு புதிய அடையாளத்தை, உளவியல் கட்டமைப்பை உருவாக்கித் தந்திருக்கிறார். பெரியார் இல்லாத தமிழ் அடையாளம் தனக்கென நவீனத்தன்மை அற்ற ஒரு பழம்பொருள் காட்சிக்கூடமாகத்தான் இருந்திருக்கும்.

இன்று இந்திய அறிவு-அரசியல் நவீனத்துவ மரபில் பெரியார் வழியான தமிழ் அடையாளம் மற்ற மொழியினர் மிரளும் அளவுக்கு முன்னோக்கிய தன்மை கொண்டுள்ளதற்குப் பெரியார்-பெரியாரியம்தான் அடிப்படை.
அயோத்திதாசர், பெரியார் என இருபெரும் அறிவாளுமைகள் நமக்கு கிடைக்காமல் போயிருந்தால் தமிழ் மரபு வெறும் திருத்தொண்டர் மரபாக, திண்ணைத் தூங்கி மரபாக மட்டும்தான் இருந்திருக்கும்.

பெரியார் நம் கால அறிவுப் புரட்சியின் அடையாளம். நமது புதிய அடையாளம் ஒரு நூற்றாண்டு கால நீட்சியுடையது என்பதை நினைவில் கொண்டால்தான் நாம் இந்த நூற்றாண்டில் உயிர்ப்புள்ளவர்களாக முடியும்.

நன்றி: திரு.பிரேமநாதன், பேராசிரியர், டெல்லி பல்கலைக்கழகம்.

(சுயமரியாதைச் சுடர் பெரியாரின் 138வது நாள் இன்று – 17.09.2016).