“இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள்!” – பெரியார்
தோழர்களே! இந்த நாடும், இந்த இனமும், சுதந்திர உணர்ச்சியும், சுயமரியாதைத் தன்மையும் கொண்டதானால் இங்கு ‘நேரு பார்க்’, ‘காந்தி சவுக்’, ‘திலகர் கட்டடம்’ இருக்கலாமா? இதற்குப் பெயர்தான் பூரண சுயேச்சை என்பதா? இவைகளைப் பார்த்து உங்கள் மனம் பதறவில்லையே! வயிறு எரியவில்லையே! – பெரியார், குடிஅரசு 6.7.1946
கடந்த தேர்தலில் டில்லி சென்ற மெம்பர்கள் என்ன சாதித்தார்கள்? யாராலும் பார்லிமெண்டை அசைக்க முடியாது. பெரும்பாலும் காங்கிரசே ஜெயிக்கிறது. இப்படிப்பட்ட பாராளுமன்றத்தினால் நாம் ஒன்றும் சாதித்துக் கொள்ள முடியாது. எல்லா வசதிகளும் அவன் கையில். எல்லாச் சாமான்களும் அவனிடம் கேட்டு வாங்க வேண்டும். வடநாட்டானின் அரசாங்கத்தின் தயவில்லாமல் நாம் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற நிலையில் வைத்துக்கொண்டு, நம்மை அடிமைப்படுத்தி வைக்கிறான். நம் நாடு மற்ற நாடுகளைப் போல் முன்னேற வேண்டுமானால் நம்நாடு பிரிந்தே ஆக வேண்டும். – பெரியார், விடுதலை, 25.7.1957
இந்திய அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவும் இல்லை. அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதியும் தமிழர்களுக்கு இல்லை. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்தியதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கைகளில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கூறப்பட்டால் அதற்குரிய தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். – நீதிமன்றத்தில் பெரியாரின் முழக்கம்
தமிழன் ஈன நிலைக்குக் காரணம் இந்து மதத்தைத் தனது மதம் என்று கருதியதும், இந்தியா பூராவையும் தன் நாடு என்று கருதியதும், இவ்விரண்டுக்கும் உழைக்கும் தொண்டே மக்கள் தொண்டு, தேசத் தொண்டு என்று கருதி வருவதுமேயாகும். இந்தியத் தேச அபிமானம் என்பது தமிழன் பல நாட்டாரின் நலனுக்கு உழைத்து, பல நாட்டாருக்கு அடிமையாய் இருப்பது என்பதாகும். – பெரியார்
ஜின்னா இதற்காக எத்தனை முசுலிம்களைப் பலி கொடுத்தார்? அதன்பிறகுதான் அவர்கள் நாட்டை அவருக்கு விட்டுக் கொடுத்தார்கள். அதேபோல், நாமும் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால்தான் முடியும்போல் இருக்கிறது. எப்படியாவது நம்நாடு நம் கையில் வந்தால் ஒழிய நமக்கு நல்ல வாழ்க்கை இல்லை. இல்லையானால், என்றும் நாம் அடிமையாகத்தான் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் – பெரியார், விடுதலை தலையங்கம் 27.7.1951
நம் நாட்டு ஆட்சியில் இன்று பிரதம மந்திரி அந்நியர். அதாவது, அவர் நம் இனத்தவரல்லர்; நம் வகுப்பினரல்லர்; நம்மைச் சரிசமமாய் சமுதாயத்தில் கருதுபவரல்லர்; நம் மக்களைவிட எந்தவிதத்திலும் புத்தியில், திறமையில், நேர்மையில் மேம்பட்டவருமல்லர். அப்படிப்பட்ட ஒருவர் இன்று ஆட்சிமன்றத்தில் உங்களுக்குப் பிரதமராய் இருக்கக் காரணம் என்ன? திராவிடரின் மான உணர்ச்சியற்றதனம் என்பதல்லாமல், வேறு என்ன சொல்ல முடியும்? – பெரியார், திருவல்லிக்கேணி கடற்கரையில் 30.6.1946 அன்று.
‘சுதந்திர இந்தியாவின் கொடியை அவமதிக்காதீர்கள். அவமதித்தால் சும்மா விடேன்’ என்று கூக்குரலிடுகிறாயே! உனக்குத்தான் பதவி கிடைத்தது; பணம் கிடைக்கிறது; கொள்ளையடிக்க வசதியும் கிடைக்கிறது. கூப்பிட்ட நேரத்திற்குக் குரல் கொடுக்க டவாலி பியூன் உனக்குக் கிடைக்கிறான். அதனால் இந்தக் கொடிக்குத் தலை வணங்குகிறாய்; அதற்கு அர்த்தமும் இருக்கிறது. அந்த வசதிகள் எனக்குத் தேவையில்லை; தேவையிருந்தாலும் அக்கொடிக்கு வணக்கம் செலுத்தாமலே என்னால் அவற்றை அடைய முடிகிறது. அப்படியிருக்க, நான் ஏன் ‘ஹிந்துஸ்தான்’ கொடியை வணங்க வேண்டும்? என்னுடைய சூத்திரப் பட்டத்தைப் போக்குமா அந்தக் கொடி? என்னை ஒரு மார்வாரி சுரண்டாமல் பார்த்துக் கொள்ளுமா அந்தக் கொடி? எங்களுக்கு உங்கள் ‘ஹிந்துஸ்தானில்’ இருக்கப் பிரியமில்லை. உங்கள் ஆட்சியில் எங்கள் மக்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள். ஆகவே, எங்களைப் பிரித்துவிட்டு விடுங்கள் என்று கூறுகிறோம். எங்களுடைய பாதுகாப்பைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? பேசாமல் பிரித்து விட்டுவிடுங்கள்.
எங்களை ஆள எங்கள் நாட்டில் அறிவாளிகள் உண்டு. எங்கள் நாட்டில் எங்களைப் பாதுகாக்கும் வல்லமை படைத்த போர்வீரர்கள் உண்டு. நாங்கள் ஆண்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆதலால், எங்களுக்குத் தனித்திருக்கச் சகல வசதிகளும் உண்டு. ஆகவே,’ஆடு நனைகிறதே என்று ஓநாய் கூப்பாடு போடுகிறதாம்’ என்பதுபோல, நீங்கள் எங்களுக்காகப் பரிதாபப்படாமல் பிரித்துக் கொடுத்துப் பாருங்கள்! – பெரியார், ஆழியூரில் 10.1.1948ல் சொற்பொழிவு
வெள்ளையன் ஒழிந்ததுபோல் வட நாட்டானும் ஒழிய வேண்டாமா இந்நாட்டைவிட்டு? இந்நாட்டிற்கு சுதந்திரம் வந்துள்ளது உண்மையாயின் எதற்காக ஒரு இமயமலைப் பார்ப்பான் ஒரு வட நாட்டவன் எங்கள் நாட்டிற்கு பிரதம மந்திரியாக இருக்க வேண்டும்? எதற்காக வடநாட்டவர்கள் இங்கிருந்து நம்மைச் சுரண்டி வர வேண்டும்? கேட்பாரில்லையே இத்தமிழ் நாட்டில்.. எதற்காக இந்நாட்டை வடநாட்டவன் ஆதிக்கத்திற்கு ஒப்படைத்துவிட்டு இந்நாட்டவர்கள் அவர்களின் சிப்பந்திகளாக, ஏவலாட்களாக பணியாற்றி வர வேண்டும்? வேறு சுதந்திரம் பெற்ற நாடுகளைப் பார்த்தாயினும் உங்களுக்கு புத்தி வரக்கூடாதா? – பெரியார், விடுதலை (19.10.1948)
நாம் உடனடியாக விடுதலை பெற்று, அதாவது இந்தியக் கூட்டாட்சியிலிருந்து விலகி சுதந்தரத் தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம்முயற்சியில் இன்றைய திமுக ஆட்சி இணங்கும் என்று கூற முடியாது. ஏனெனில் அது இந்தியக் கூட்டாட்சி ஆதிக்கத்துக்கு உட்பட்ட மாகாண சுயாட்சியை விரும்புகிறது. மாகாண சுயாட்சி என்றால், அரசியலில்தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர, சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்ய முடியாது. – 95வது பிறந்தநாள் மலரில் பெரியார் எழுதியது
‘இன்று பிரிவினை கேட்கும் நான் கிழவனாக இருக்கலாம். அதன் காரணமாக பலாத்காரத்தில் நம்பிக்கையற்றவனாக இருக்கலாம். நாளை நம் இளைஞர்களும் இப்படியே இருந்து விட மாட்டார்கள். இரத்த வெள்ளத்தின் மத்தியில் பிரிவினை கேட்பார்கள்; கத்தி முனையில் பிரிவினை கேட்பார்கள். ஆட்சியாளர்கள் இப்படி எல்லாம் நடக்க விடாமல் நம் நாட்டை ஒழுங்காக நமக்குப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.’ – 27.11.1950ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் பெரியார்
பாழும் தேசியத்தால் தமிழர்களாகிய நாம் 50 ஆண்டுகளை பாழாக்கி விட்டோம். நாட்டையும் மக்கள் சமூகத்தையும் உண்மையாய் மேன்மையடையச் செய்ய முயற்சித்த ஒப்பற்ற பெரியார்களை நாஸ்திகன், தேசத்துரோகி, மக்கள் துரோகி, சுயநலக்காரன் என்றெல்லாம் வைது அவர்கள் பாடு பயன்படாத முறையில் செய்துவிட்டோம்.
உதைக்கும் காலுக்கும் முத்தமிட்டுப் பூசை செய்கிறோம்! மலத்தை மனமார முகருகிறோம். மானமிழந்தோம். பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத் தானா தமிழன் உயிர் வாழ வேண்டும்? எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலைமேல் கால் வைத்து ஏறி மேலே போக வட நாட்டானுக்கும் தமிழரல்லாதவனுக்கும் படிக்கல் ஆகிவிட்டோம்.
இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள். உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகள் தோறும் தமிழ்நாடு தமிழனுக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்து கொண்டதோடல்லாது அவன் நம் எஜமானன் என்றால் நமக்கு இதைவிட மானமற்ற தன்மை – இழிதன்மை – வேறு என்ன என சிந்தியுங்கள்.
புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்கு பூட்டப்பட்ட விலங்கை உடைத்து சின்னாபின்னமாக்குங்கள்!!
தமிழ்நாடு தமிழருக்கே!
தமிழ்நாடு தமிழருக்கே!!
தமிழ்நாடு தமிழருக்கே!!!
(பெரியார், குடி அரசு – தலையங்கம் – 23.10.1938)
தொகுப்பு – கீற்று நந்தன்
Courtesy: keetru.com
(மீள் பதிவு)