பெரியார் பணி முடிப்போம்!
சில நாட்களுக்கு முன்னான ஓர் அரங்கில், பி.சாய்நாத் இவ்வாறு கூறினார்:
“In coming years, south would lead us. Tamilnadu people are so protective about their culture and language. We should learn this from them.”
ஆம். நாம் தனித்துவமானவர்கள்தான். ஆனால் எந்த வகையில் தனித்துவமானவர்கள்?
அசூயை என ஒரு தமிழ் வார்த்தை உண்டு. அருவருப்பு, disgust என மொழிபெயர்க்கலாம்.
பெரும்பாலான தமிழர்களுக்கு ஓர் அசூயை உண்டு. அது ஓர் அரசியல் நிலையாகவே நமக்கு உண்டு. இந்து, இந்தியா, இந்தி, ஆரியம் ஆகியவற்றின்பாலான அசூயை உணர்வு அது.
பிற மொழிகள் தெரிந்தும் இந்தி பேசுவோருக்கு மத்தியில் இந்த உணர்வு நமக்கு தலைதூக்கும். பார்ப்பனர்கள் வேண்டுமென்றே தங்களின் பிரத்தியேக உச்சரிப்புகள் மற்றும் நடத்தைகளுடன் பேசும்போது இந்த உணர்வு தலைதூக்கும். அளவுகடந்து இந்தியம் தூக்கிப் பிடிக்கப்படும்போதும், இந்து மதத்தை வேரூன்ற வைக்க வேண்டுமென்ற தீவிர பேச்சுகள் சூழும்போதும் இந்த உணர்வு நமக்கு தோன்றும்.
சமயங்களில் இந்த அசூயை, ஆபத்தை அனுமானித்ததும் வழக்கமாக உயிர்கள் கொள்ளும் எச்சரிக்கை உணர்வாகவும் ‘இவர்கள் செய்வது இன்னதென அறியாதிருக்கிறார்கள்’ என்கிற இரக்க உணர்வாகவும் மயிர்க்கூச்செறிந்து சண்டையிட நிற்கும் விலங்கின் எதிர்ப்புணர்வாகவும் கூட மருவுவதுண்டு.
தோழர் திருமுருகன் காந்தி ஓர் உரையில் கூறியிருந்தார்: “நம்மளும் பார்ப்பனர்களோட ஆதிக்க உணர்வ எத்தனையோ முறை நம்மாட்கள் கிட்ட சொல்லியிருக்கோம்.. ஆனா, புரிஞ்சிக்கிட்டதில்ல… ஆனா டிவில ராகவன், நிர்மலா சீதாராமன்லாம் பேசறத போட ஆரம்பிச்சதுக்கப்புறம்தான் மக்களுக்கு தெளிவா புரியுது. நம்ம பேசி பேசி புரிய வைக்க நினைச்ச அவனுங்களோட ஆதிக்க உணர்வ, ஒரு செகண்ட் டிவில வந்து உடல்மொழிலயே தெளிவா காட்டி புரிய வச்சிடுறாங்க…!” என.
இது தமிழர்களுக்கான பிரத்யேக உணர்வு. ஒருவகையில் வரலாறு முழுக்க ஆரியத்தை எதிர்கொண்டதில் நமக்குக் கிடைத்த defensive mechanism அல்லது கூருணர்ச்சி என்று கூட சொல்லலாம்.
சமத்துவத்துக்கு எதிரான உயர்ச்சிக்கு எதிரான அருவருப்பு உணர்வு அது!
வரலாற்றிலிருந்து இந்த உணர்வை திரட்டி சுயமரியாதையாக நமக்கு அளித்தவர்தான் பெரியார்.
அப்பழுக்கற்றவர்களாகவும், ஆசாரமானவர்களாகவும், சுத்தம் நிறைந்தவர்களாகவும், எல்லாம் தெரிந்தவர்களாகவும் தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக்கொண்டு superiority-யை கட்டி எழுப்பிய ஆரியர்கள், பிறரை தாழ்ந்தவர்களாக ஆக்கினார்கள். தாழ்வு மனப்பான்மையை உருவாக்கினார்கள். அந்த தாழ்வுநிலையை தாழ்வு மனப்பான்மையை உடைக்க பெரியார் உருவாக்கியதுதான் சுயமரியாதை உணர்ச்சி.
அறிவு என்ற கேடயத்தையும், சுயமரியாதை என்கிற வாளையும் கொண்டு ஆரியத்தை வீழ்த்துவதுதான் பெரியார் நமக்கிட்ட பணி!
பெரியார் பணி முடிப்போம்!
RAJASANGEETHAN